“வெற்றிமாறன் பாசிஸ்ட்!”: ‘விடுதலை’ கதாசிரியர் தங்கம் ஆவேசம்!

“வெற்றிமாறன் பாசிஸ்ட்!”: ‘விடுதலை’ கதாசிரியர் தங்கம் ஆவேசம்!

வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் நடித்த விடுதலை திரைப்படம் கடந்த வருடம் மார்ச் 31ம் தேதி வெளியாகி வெற்றி பெற்றது. அப்படத்தின் மூலக்கதைன, “தங்கம் எழுதிய வேங்கைச் சாமி மற்றும் ஜெயமோகன் எழுதிய துணைவன்” ஆகியவை குறிப்பிடப்பட்டது.

ஆனால் ச.பாலமுருகன் எழுதிய சோளகர்தொட்டி மற்றும் சிவ சுப்பிரமணியன் எழுதிய வீரப்பன் வாழ்ந்ததும், வீழ்ந்ததும் ஆகிய புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்டு பல காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று புகார் எழுந்தது.

இது குறித்து ச.பாலமுருகன், “யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள் என பல நூல்களில் இருந்து காட்சிகள் திருடப்படுவது காலங்காலமாக நடந்து வருகிறது” என ஆதங்கப்பட்டார்.

சிவசுப்பிரமணியன், “சத்தியமங்கலம் காடுகளில் வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது மக்கள் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவங்களைத்தான் எனது புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளேன். அதிலிருந்துதான் விடுதலை பட காட்சிகள் எடுக்கப்பட்டது என வெற்றிமாறன் சொல்லியிருக்கலாம். அப்படி சொல்லியிருந்தால் பலரின் கவனம் பாதிக்கப்பட்ட மக்களின் மீது திரும்பி, அவர்களுக்கு உதவிகள் கிடைத்திருக்க வாய்ப்புள்ளது” என்றார்.

தங்கம்

இந்நிலையில், விடுதலை படத்தின் மூலக்கதை என்று குறிப்பிடப்பட்ட வேங்கைச்சாமி கதையை எழுதிய தங்கம், “வெற்றிமாறன் ஒரு பாசிஸ்ட்.. நான் இயக்குநர் ஆகக்கூடாது என்று சதி செய்கிறார்… என் வேங்கைச் சாமி கதையை கொன்றுவிட்டார்… அவர் ஒரு கொலைகாரர்” என்று கடுமையாக விமர்சித்து உள்ளார்.

கலைஞர் தொலைக்காட்சியில் வெற்றிமாறன், “பதினைந்து வருடங்களாக தங்கம் அவர்களிடம்தான் அரசியல் பயில்கிறேன்” என்றார்.அதோடு விகடன் இதழில் எழுதிய தொடரிலும் தங்கம் குறித்து குறிப்பிட்டு இருந்தார். அந்த தங்கம்தான் இப்போது வெடித்து இருக்கிறார்.

இவர், டி.என் மீடியா டிஜிட்டல் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்து உள்ளார்.அதில், “விடுதலை 2 பட விழாவில், மேடையில் பேசிக்கொண்டு இருந்த வெற்றிமாறனிடம், உதவி இயக்குநர் வந்து காதோடு ஏதோ சொல்வார். உடனே ஆத்திரமான வெற்றிமாறன், “படக்குழுனா எல்லாருந்தான்” என்று ஆத்திரப்பட்டு, மைக்கை கோபமாக எறிந்துவிட்டு செல்வார்.

விடுதலை படத்தின் கதை என்னுடைய வேங்கைச்சாமி திரைக்கதைதான் என்பதை அங்கே சொல்லக்கூடாது என்பதுதான் வெற்றிமாறனின் திட்டம். அதனால்தான் ஜெயமோகன் பெயரையும் சொல்லவில்லை. அவர் பெயரைச் சொன்னால் என் பெயரையும் சொல்ல வேண்டி இருக்குமே!

தங்கம் முகநூல் பதிவு 1

விடுதலை – 1 விழாவுக்கும் எனக்கு அழைப்பு இல்லை. ஜெயமோகன் மட்டும்தான் அழைப்பு. அவர்தான் கதை என அனைவரின் மனதிலும் பதிந்தது. இதையும் வேண்டுமென்றே செய்தார் வெற்றிமாறன்.

இரண்டு வருசம் பழங்குடி மக்களோடு காட்டுக்குள் இருந்து எழுதிய கதைதான் வேங்கைச்சாமி. பழங்குடியினரோடு காட்டில் உறங்கி, எழுந்து, குளித்து, உண்டு எழுதிய கதை. காட்டில் மூன்று முறை என் உயிர் போயிருக்கும்.. மரணத்தைச் சந்தித்தேன்… ஒரு முறை நான் செத்திருந்தால் முதலைகளுக்கு இரையாகி இருப்பேன்! இன்னொரு முறை, நூறடி தூரத்தில், தெப்பகாட்டில் புலியை படம் எடுத்தேன்! எங்கள் குழுவில் இருந்த டி.எப்.ஓ., இந்த வருடம் புலி தென்பட்டது இப்போதுதான் என்றார். இரண்டு வருடங்கள் உழைத்து, எட்டு லட்ச ரூபாய் செலவு செய்து அந்த கதை, திரைக்கதையை உருவாக்கினேன்.

ஏனென்றால், வேங்கைச்சாமி திரைக்கதை என்பது பழங்குடி மக்களின் வாழ்க்கை, அரசியல், உரிமைகள், பண்பாட்டு விழுமியங்களை முதன் முதலில்.. மெயின்ஸ் ஸ்ட்ரீமில் சிறப்பாக உருவாக்கிய திரைக்கதை. அது திரைப்படமானால் உலகம் முழுதும் கொண்டாடப்படும்.

அந்த பழங்குடி மக்களின் அவலம் உலகம் முழுதும் கவனத்த ஈர்க்கும். அவர்களுக்கு ஒரு விடிவு கிடைக்கும். அதனால்தான் அதை உருவாக்கினேன்.

அந்த கதையின் வீரியம் தெரிந்து, வெற்றி மாறன் மூன்று முறை என்னிடம் கதையை கேட்டார்… தான் இயக்குவதற்காக. தனக்கு வரும் சம்பளத்தில் பாதியை தருவதாகச் சொன்னார்.

ஆனால் நான் மறுத்துவிட்டேன். நானே இயக்க முயற்சிகளைத் தொடர்ந்தேன்.

அந்த நேரத்தில் நாடாளுன்றத்தில் பழங்குடி உரிமைகளுக்கான சட்ட முன்வடிவம் கொண்டு வரப்பட்டது. இது குறித்த பிருந்தா காரத் எம்.பி.யின் உரை அற்புதமானது.

அந்த நேரத்தில் பழங்குடியினர் பற்றிய படம் வெளியானால் அவர்களது உரிமை போராட்டத்துக்கு உதவியாக இருக்குமே என்று நினைத்தேன். அப்போதுதான் கதையை வெற்றிமாறனுக்கு அளிக்க ஒப்புக்கொண்டேன்.

காசு பணத்துக்காக அல்ல.. பெயர் புகழுக்காக அல்ல… பழங்குடி மக்களுக்காக!

இதுவும் வெற்றிமாறனுக்குத் தெரியும்.

தங்கம் முகநூல் பதிவு 2

ஆனால் விடுதலை என்கிற படத்தை உருவாக்கி, அதில் ஜெயமோகன் கதையையும் சேர்த்து, இன்னும் சில காட்சிகளையும் இணைத்து.. வேங்கைச்சாமி திரைக்கதையை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டார் வெற்றிமாறன். இப்படி செய்ய இருப்பதைச் சொல்லி இருந்தால் நான் கதையையே தந்திருக்க மாட்டேனே.

வேங்கைச்சாமி என்கிற அற்புதமான கதை, திரைப்படமாகி விடக்கூடாது.. நான் இயக்குனர் ஆகிவிடக்கூடாது என்பதுதான் அவரது சதித்திட்டம்.

இது குறித்து மூன்றாவது நபரை வைத்து பேச்சுவார்த்தை நடந்தபோது, தனது குற்றத்தை எல்லாம் வெற்றிமாறன் ஒப்புக்கொண்டார்.

விழாவுக்கு என்னை அழைத்து, “தங்கம் அருமையான கதை வச்சிருந்தாரு.. மக்கள் மீதான அன்புல கொடுத்தார்” என்று சொல்லி இருக்கணும்..

ஆனா விழா குறித்த தகவலையே எனக்குச் சொல்லலை…

பலரும், “கதைன்னு தங்கம் பெயர் போட்டிருக்கு.. ஆளை காணோமே” என்று கேட்பார்கள்.. அப்போது, “அவன் ஒரு லூசு… படத்துல ஏதும் பண்ணலை” என்று சொல்லலாம் அல்லவா.. அதுதான் வெற்றிமாறன் திட்டம்.

அதனால்தான் விழா மேடையில் என் பெயரை மறந்தது போல நடித்தார்.. அதை ஒருவர் சுட்டிக்காட்டியவுடன் மேடையிலேயே ஆத்திரப்பட்டு மைக்கை விட்டெறிந்து சென்றார்.

என்னை மாதிரி மக்கள் கலைஞனை கொன்றுவிட்டு, திரைப்படத்தில் போராளியை கொன்றதற்காக வருத்தப்பட்டு படம் எடுக்கிறார்….. வெற்றிமாறன் பாசிஸ்ட்..” என்று யு டியுப் சேனல் பேட்டியில் குமுறி இருக்கிறார் கதாசிரியர் தங்கம்.

இதைத் தொடர்ந்து, முகநூலில் Still Robert, Ma Tholkappiyan ஆகிய இரு பதிவர்கள், தங்கத்தை விமர்சிக்க, அவர், “குரைத்தோடி வருகிறது அடுத்த ஏவல் நாய்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து இதுவரை இயக்குநர் வெற்றிமாறன் கருத்து எதையும் சொல்லவில்லை.

விடுதலை 2ம் பாகம் வெளியாக இருக்கும் சூழலில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

  • டி.வி.சோமு

Related Posts