யு.பி.எஸ்.சி. மாணவர்களுக்கு மனிதநேயம் கொடுத்த இன்ப அதிர்ச்சி.!
மத்தியஅரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வு முடிவு வெளியானது. இதில் சென்னை பெருநகர மேனாள் மேயர் சைதை துரைசாமியின் மனிதநேயம் பயிற்சி மையத்தில் படித்த 39 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
ஐ.ஏ.எஸ் , ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸ் உயர் பதவிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) தேர்வு செய்து வருகிறது.
பணியிடங்களுக்கு முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த ஆண்டுக்கான காலி பணியிடங்கள் குறித்து அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் யு.பி.எஸ்.சி. வெளியிட்டது. மொத்தம் 1,056 காலி பணியிடங்களுக்கு முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் மாதம் 16- ஆம் தேதி நடப்பட்டது.
யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதுவதற்கு நாடு முழுவதும் சுமார் 6 லட்சத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து மட்டும் சுமார் 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இந்தத் தேர்வு முடிவு கடந்த மாதம் ஜூலை 1-ந் தேதி வெளியானது. இதில் தமிழகத்திலிருந்து சுமார் 650- க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகத் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்தகட்டமாக முதன்மை தேர்வை எழுத வேண்டும். அந்த வகையில் முதன்மை தேர்வு கடந்த மாதம் செப்டம்பர் 20,21,22,28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இந்தத் தேர்வு முடிவு டிசம்பர் 9ஆம் தேதி நேற்று வெளியானது. இதில் நாடு முழுவதும் 2,845 பேர் வெற்றி பெற்றிருப்பதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் 141 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் வெற்றி பெற்றவர்கள் அடுத்தக் கட்டமாக நேர்முகத் தேர்வை சந்திக்கின்றனர்.
முதன்மை தேர்வு முடிவில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் யு.பி.எஸ்.சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. நாடு முழுவதும் வெற்றி பெற்றவர்களில் மனிதநேயம் பயிற்சி மையத்தில் படித்த 39 பேர் இடம்பெற்றிருப்பதாக மனித நேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி அவர்கள் தெரிவித்திருக்கிறார். மேலும் மனித நேய ஐ.ஏ.எஸ் கட்டணமில்லா கல்வியகத்தில் பயிற்சி பெற்ற 39 பேர் சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து மனிதநேய பயிற்சி மையத்தில் மாதிரி நேர்முகத் தேர்வுக்கான பயிற்சி நடைபெற உள்ளது.

இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் முதன்மை தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் முதன்மை தேர்வுக்கான நுழைவுச்சீட்டுடன் நேரில் வரலாம்.
மேலும் 10 ஆம் தேதி இன்று முதல் சென்னை சி.ஐ.டி. நகரில் உள்ள மனிதநேயம் ஐ.ஏ.எஸ் கட்டணமில்லா பயிற்சி மையத்தில் நேரில் அணுகலாம். தொடர்புக்கு 044 – 24358373, 24330095, 9840439393, 8428431107 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது..
மாதிரி நேர்முகத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு, நேர்முகத்தேர்வுக்கான சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி, குறிப்புகள் கையேடுகள் மற்றும் தினசரி வகுப்புகள் தனிப்பட்ட வழிகாட்டுதல்கள் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். மேலும் நேர்முகத்தேர்வில் பங்குபெற டெல்லி சென்று வருவதற்கான விமானப் பயணச்சீட்டு, டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்குவதற்கும் உணவும் ஏற்பாடு செய்யப்படும். மேலும் ஆண் தேர்வர்களுக்குத் தரமான காலணிகள், கோட் –சூட்,பெண் தேர்வர்களுக்குப் புடவை, சுடிதார்,காலணிகள் என அனைத்து உதவிகளும் இலவசமாக வழங்கப்படும் என மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை மனிதநேய அறக்கட்டளை நிறுவனர் சைதை துரைசாமி அவர்கள் அறிவித்துள்ளார்.

