முதல் தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பந்துவீச்சு போட்டி: அபிஷேக் சாம்பியன் பட்டம் வென்றார்!
சென்னை: தமிழ்நாடு டென்பின் பந்துவீச்சு சங்கம் (Tamil Nadu Tenpin Bowling Association) சார்பில், சென்னையை அடுத்த துரைப்பாக்கத்தில் உள்ள ‘லெட்ஸ் பவுல்’ (LetsBowl) மையத்தில் நடைபெற்ற முதலாவது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பந்துவீச்சு போட்டியில் அபிஷேக் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
கடந்த ஜூலை 1-ம் தேதியுடன் நிறைவடைந்த இந்தப் போட்டியில், இறுதிச் சுற்றில் அபிஷேக் மற்றும் ஆனந்த் ராகவ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். ‘பெஸ்ட் ஆஃப் த்ரீ’ (Best of three) முறையில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்ற அபிஷேக், ஆனந்தை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றினார். முதல் ஆட்டத்தில் 191-185 என்ற புள்ளிக் கணக்கிலும், இரண்டாவது ஆட்டத்தில் 199-135 என்ற புள்ளிக் கணக்கிலும் அபிஷேக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அரையிறுதி முடிவுகள்: முன்னதாக நடைபெற்ற அரையிறுதிப் போட்டிகளில், அபிஷேக் மற்றும் விஷ்ணு எம் ஆகியோர் மோதினர். இதில் அபிஷேக் 2-0 (214-166, 196-194) என்ற கணக்கில் விஷ்ணுவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் ஆனந்த் ராகவ், அக்ரம்முல்லா பைக் என்பவரை 215-161 மற்றும் 196-161 என்ற கணக்கில் வென்று இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார்.
இரண்டாவது சுற்று முடிவில் ஷப்பீர் தன்கோட் 2286 பின்ஃபால்களுடன், 190.5 என்ற சராசரியுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தார்.
சிறப்புப் பரிசுகள்:
-
6 கேம் பிளாக்கில் அதிகபட்ச சராசரி: ஷப்பீர் தன்கோட் (190.8)
-
ஒற்றை ஆட்டத்தில் அதிகபட்ச ஸ்கோர்: தீபக் கோத்தாரி (233)
இந்தத் தகவலை தமிழ்நாடு டென்பின் பந்துவீச்சு சங்கத்தின் தலைவர் ராகினி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

