சத்ய ஜோதி தயாரிப்பில், மிரட்டும் “லெனின் பாண்டியன்” டிரெய்லர்!
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் டி.டி.பாலச்சந்திரன் இயக்கத்தில், நம் மண்ணின் வாழ்வியல் பேசும் அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “லெனின் பாண்டியன்”. மணல் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் டிரெய்லரை முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.
ஜனநாயக நாட்டில் எவர் ஒருவருக்கும் எந்த காரணத்தை முன்னிட்டும், எந்த அதிகாரத்தாலும், ஒருவரது தனிப்பட்ட உரிமைகளும், சுதந்திரமும் பறிக்கப்படக்கூடாது என்பதை உரக்கச் சொல்லும் படமாக இது அமைந்துள்ளது. கிராமத்து பின்னணியில் வாழும் எளிய மனிதர்களின் வாழ்வில் நடைபெறும் உரிமைப் போராட்டமே இப்படத்தின் மையக்கரு. தற்போது வெளியான டிரெய்லரில், சுதந்திரம் பெற்று எழுபத்தைந்து ஆண்டுகளைக் கடந்த இந்த நாட்டில், ஒரு எழுபத்தைந்து வயது முதியவர் போலீஸ் பாதுகாப்புடன் இருப்பது ஏன்? என்ற கேள்வியோடு காட்சிகள் நகர்வது பெரும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்திலிருந்து அடுத்த வாரிசாக நடிகர் தர்ஷன் இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். பன்முகத் திறமையாளர் கங்கை அமரன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகை ரோஜா இந்தப் படத்தின் மூலம் மீண்டும் திரைக்கு வருகிறார். இவர்களுடன் ஸ்ரித்தா ராவ், ஜார்ஜ் மரியம், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், பிக் பாஸ் அர்ச்சனா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில், T.G. தியாகராஜன் வழங்கும் இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில், விரைவில் திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. மணல் கொள்ளைக்கு எதிரான இந்த “லெனின் பாண்டியன்” டிரெய்லர் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!
