‘பவர் பேட்டா’ : சதுரங்க வேட்டையில் சந்தீப் கிஷன்!
திரையுலகில் தடம் பதித்து 16 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ‘வெர்சடைல்’ நாயகன் சந்தீப் கிஷன், தனது சினிமா பயணத்தின் அடுத்த அதிரடி பாய்ச்சலுக்கு தயாராகிவிட்டார். ‘யாரடி நீ மோகினி’ முதல் ‘கேப்டன் மில்லர்’ வரை வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுக்கும் அவர், இப்போது இயக்குனர் கிருஷ்ண சைதன்யா மற்றும் புகழ்பெற்ற 70 MM என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து ‘பவர் பேட்டா’ (Power Peta) எனும் பவர்புல் டைட்டில் மூலம் ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.
வெளியாகியுள்ள டைட்டில் போஸ்டரே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ரத்தத்தில் தோய்ந்த சதுரங்கப் பலகை, சிதறி கிடக்கும் காய்கள், அவற்றுக்கு நடுவே நசுக்கப்பட்ட ஒரு சிவப்பு ரோஜா என குறியீடுகளால் மிரட்டியிருக்கிறார்கள். இது வெறும் ஆக்ஷன் படம் மட்டுமல்ல; காதல், கௌரவம் மற்றும் அதிகாரம் என அனைத்தும் கலந்த ஒரு தீவிரமான அரசியல் விளையாட்டு என்பதை இந்த போஸ்டர் உரக்கச் சொல்கிறது. இதில் நாயகன் சந்தீப் கிஷன் இதுவரை பார்த்திராத ஒரு மிரட்டலான தோற்றத்தில் தோன்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் பலமே இதன் பிரம்மாண்ட தொழில்நுட்பக் கூட்டணிதான். மெலடி கிங் மணி ஷர்மா இசையமைக்க, முன்னணி ஒளிப்பதிவாளர் மதி காட்சிகளைச் செதுக்குகிறார். தேசிய விருது பெற்ற எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் கத்தரிக்கோல் பிடிக்க, ராமகிருஷ்ணா – மோனிகா ஜோடி தயாரிப்பு வடிவமைப்பைக் கவனிக்கிறார்கள். ஒலி வடிவமைப்பில் சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன் கூட்டணி மேஜிக் செய்யக் காத்திருக்கிறது.
விஜய் சில்லா மற்றும் சசி தேவி ரெட்டி தயாரிப்பில், விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகும் இந்த ‘பவர் பேட்டா’, சந்தீப் கிஷனின் திரைப்பயணத்தில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு அசைவிற்கும் ஒரு விலை கொடுக்க வேண்டிய இந்த பவர் கேமில் ஜெயிக்கப்போவது யார்? அதிகாரப் போட்டியின் உச்சத்தை திரையில் காண ரசிகர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர்.
