தக் லைஃப்: திரை விமர்சனம்
தலைநகர் நியூ டெல்லி பகுதியில், ரெங்கராய சக்திவேல் (கமல் ஹாசன்) டான். அவருக்கு கையாட்கள், (அண்ணன்) நாசர், ஜோஜூ ஜார்ஜ், பகவதி பெருமாள் உள்ளிட்டோர். எதிர் குரூப், இவர்களை போலீஸ் மூலம் என்கவுன்ட்டர் செய்து கொலை செய்ய முயல்கிறது.
அப்போது நடக்கும் மோதலில், அங்கு பேப்பர் போட்டுக் கொண்டிருந்த குமரவேலை, கமல் தரப்பினர் சுட்டு விடுகின்றனர். குமரவேலின் மகன் – சிறுவன் – கதறி அழ.. அவனை (சிம்பு) தன்னுடன் அழைத்து சென்று மகன் போல் வளர்க்கிறார், கமல்.
சில வருடங்களில், கமல் மிகப்பெரிய டான் ஆக ஆகிவிடுகிறார். அவருடன் சிம்புவும் சேர்ந்து வளர்கிறார்.
இவர்களின் சாம்ராஜ்யத்தை சரிக்க இன்னொரு டான் மகேஷ் மஞ்சுரேக்கர் திட்டமிடுகிறார்.
இன்னொரு பக்கம் கமலின் கோட்டைக்குள்ளேயே ஓட்டை விழுகிறது. நெம்.2-ஆக வே இருப்பதா என புழுங்கும் நாசர், கமலை காலி செய்ய திட்டமிடுகிறார். அதற்கு சிம்புவைப் பயன்படுத்திக் கொ”ல்”கிறார்.
அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை.
நடிப்பு தாதாவான கமல், இதில் டான் தாதா(!)வாக வருகிறார். ” என் பெயர் ரெங்கராய சக்திவேல்..” என்று சொல்லி அதிரவைக்கும் அவர், இறுதிக் காட்சி வரை மிரட்டல்தான். நாயகன் படம் சில இடங்களில் நினைவுக்கு வந்தாலும், பெரும்பாலும் வேறுபட்ட நடிப்பை அளித்து இருக்கிறார். ஆக்சன் காட்சிகளில் தூள் பறத்துகிறார் என்றால், காதல் காட்சிகளிலும் “மிரட்டி”(!) இருக்கிறார். அபிராமிக்கு லிப் லாக் கிஸ், த்ரிசாவுடனும் குலாவல் என அதிரவைக்கிறார் ஆண்டவர்.
கமலுக்கு அடுத்தபடியாக என்பதைவிட நிகராகவே வருகிறார் சிம்பு. அப்பா போன்ற தாதா கமலிடம் காட்டும் பாசம், அவர் தன்னை சந்திகிக்கிறார் என்றவுடன் “மகன் மாதிரினு சொன்னீங்களே” என்று ஆதங்கத்துடன் கேட்கும் பார்வை… சிம்பு அசத்தல்.
குடும்பத்தலைவியாக அபிராமி. கணவனின் காதலி மீதான பொறாமை காட்சியில் ஈர்க்கிறார்.
த்ரிஷாவுக்கு அதிரடியான கேரக்டர். எப்படி ஒப்புக்கொண்டார் என்பது வியப்புதான். ஆனால் அதற்கேற்ற நடிப்பை அளித்து உள்்ளார்.
கமல் அண்ணனாக வரும் நாசர், ஜோஜு ஜார்ஜ், பகவதி பெருமாள் மற்றும் அர்ஜுன், இன்னொரு வில்லனாக வரும் மகேஷ் மஞ்சுரேக்கர், காவல்துறை அதிகாரியாக வரும் அசோக் செல்வன், அவரது மனைவியாக வரும் ஐஸ்வர்யா லட்சுமி, சின்னி ஜெயந்த், வையாபுரி, வடிவுக்கரசி உள்ளிட்ட அனைவருமே சிறப்பாக நடித்து உள்்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சுகர் பேபி, ஜிங்குச்சா ஜிங்குச்சா பாடல்கள் ரசிக்க க்கின்றன. அஞ்சு வண்ண பூவே பாடல் நெஞ்சை அள்ளுகிறது. சோசியல் மீடியாவில் பெரிய ஹிட்டான முத்த மழை பாடல் படத்தில் இடம் இல்லை என்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும்.
உள்ளூரில் திருச்செந்தூர், வட இந்தியாவில் கோவா, பக்கத்து நாடான நேபாளம், எல்லைப் பகுதி என வெரைட்டியான லொகேசன்கள். அதையெல்லாம் அற்புதமாக பதிவு செய்து அளித்துள்ளார் கேமராமேன் ரவி.கே.சந்திரன்.
நாயகன் படத்துக்குப் பிறகு, 38 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கமல், மணிரத்தினம் இணைந்திருக்கிறார்கள். முந்தையதைப் போலவே இதுவும் தாதா கதை… ஆகவே ஒரே மாதிரி இருக்குமோ என்கிற எண்ணம் பலருக்கும் இருந்தது.
ஆனால் கதை, மேக்கிங் என அனைத்திலும் வித்தியாசம் காட்டி மிரட்டி இருக்கிறது தக்லைஃப்.
