’மெட்ராஸ் மேட்னி’ : திரைப்பட விமர்சனம்
“சாதாரண ஒரு நடுத்தர குடும்ப வாழ்க்கையில் எந்தவித சுவாரஸ்யமும் இருக்க வாய்ப்பு இல்லை” என எண்ணும் கதையாசிரியர் ஒருவர். ஆனால் அவரே, நடுத்தர குடும்ப வாழ்க்கை மற்றும் மக்களைப் பற்றி கதை எழுத முடிவு செய்கிறார். அதற்காக நடுத்தர குடும்ப மக்களை சந்தித்து அவர்களது அனுபவங்களை திரட்ட ஆரம்பிக்கிறார். அப்போது, நடுத்தர மக்கள் மீதான தனது பார்வை தவறு என்பதை உணர்கிறார். அதாவது, நடுத்தர குடும்பத்தலைவர்கள் தன்னால் வாழ்க்கையின் அடுத்தக்கட்ட முன்னேற்றத்துக்குச் செல்ல முடியாது என்று தெரிந்தும், தனது அடுத்த தலைமுறையை தலைநிமிர செய்ய வேண்டும் என்று வெறித்தனமாக உழைப்பதைக் காண்்கிறார்.
அப்படியான ஒரு சாதனைக்காக – தனது பிள்ளைகளின் முன்னேற்றத்துக்காக- ஓடிக்கொண்டே இருக்கும், ஒருவரின் வாழ்க்கையை பதிவு செய்கிறார் கதாசிரியர். அதுதான ‘மெட்ராஸ் மேட்னி’.
கதையின் நாயகன் கண்ணனாக, காளி வெங்கட். பிள்ளைகள் மீது பாசத்தைக் கொட்டுவது, அவர்களுக்காக ஓயாமல் உழைப்பது, அவர்கள் மனம் நோகும்படி பேசியவுடன் நொந்து போவது என நடுத்தர வயது தகப்பனை கண்முன் நிறுத்தி இருக்கிறார்.
அவரது மகளாக நடித்திருக்கும் ரோஷினி ஹரிப்பிரியன், தந்தை மீதான பாசத்தை வெளிப்படுத்தும் காட்சியில் ஈர்க்கிறார்.
காளி வெங்கட்டின் மனைவியாக நடித்திருக்கும் ஷெல்லி கிஷோர், சரியான தேர்வு. சிறப்பாக நடித்து இருக்கிறார்.
காளி வெங்கட்டின் மகனாக நடித்திருக்கும் கிஷோர், ஐடி நிறுவன அதிகாரியாக நடித்திருக்கும் அர்ச்சனா, மின்வாரிய அலுவலக அதிகாரியாக நடித்திருக்கும் சுனில் சுகதா, ஊறுகாய் விற்பனையாளராக நடித்திருக்கும் சாம்ஸ், ஜாங்கிரி மதுமிதா, கீதா கைலாசம் என அனைவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை அளித்து இருக்கிறார்கள்.
கதையாசிரியர் ஜோதி ராமையா என்கிற கதாபாத்திரத்தில் உட்கார்ந்த இடத்தில் இருந்தே முழுக்கதையையும் நகர்த்திச் செல்கிறார் சத்யராஜ்.
ஆனந்த்.ஜி.கே.யின் ஒளிப்பதிவு, கே.சி.பாலசாரங்கனின் இசை ஆகியவை படத்துக்கு பலம்.
சதீஷ்குமார் சமுஷ்கியின் படத்தொகுப்பு கச்சிதம்.
எளிய மக்களின் உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தி ிருக்கிறார், எழுதி இயக்கியிருக்கும் கார்த்திகேயன் மணி. அனைவரும் பார்க்க வேண்டியபடம்.

