பேரன்பும் பெருங்கோபமும்: திரைப்பட விமர்சனம்

பேரன்பும் பெருங்கோபமும்: திரைப்பட விமர்சனம்

சமூகத்தின் மீதான பேரன்பால், அநீதியைக் கண்டு எழும் பெருங்கோபம் என்பதே  படத்தலைப்பின் அர்த்தம்.

அரசு மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வருகிறார் நாயகன்.  அந்த மருத்துவனையில் நடக்கும் ஊழல், முறைகேடு விவகாரங்கள் குறித்து அந்தப் பகுதி தினசரி செய்தியாளர் ஒருவர் மூலம் பத்திரிகையில் கொண்டு வருகிறார்.  அது, சுகாதாரத்துறை அமைச்சரின் தொகுதி. தனது தொகுதி ஊழல்களே வெளியாகின்றனவே என அவர் கொதிக்கிறார்.  அந்த நேரத்தில்,  மருத்துவமனையில் குழந்தை ஒன்று கடத்தப்படுகிறது. அதில் நாயகனை தொடர்புபடுத்தி கைது செய்கிறார்கள்.

சிறையில் இருந்தே அவர் ஒரு அதிரடி ஆட்டம் ஆட ஆரம்பிக்கிறார். இருபது வருடங்களுக்கு முன்பாக அவர் செய்த ஒரு (சில) காரியங்களின் விளைவு தற்போது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது.

அவை என்ன காரியங்கள், அவற்றை ஏன் செய்தார், அவற்றின் விளைவுகள் என்ன என்பதை சமூக அக்கறையுடன் த்ரில்லர் பாணியில் சொல்வதுதான், பேரன்பும் பெருங்கோபமும் திரைப்படம்.அறிமுக நாயகன் விஜித் பச்சான்,  முதல் படத்திலேயே அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.  இளம் வயதில், நடுத்தர வயது வேடம். சற்றே நரை, பெரிய கண்ணாடி, இறுக்கமான முகம்…  ஆனாலும் தோற்றத்திலும் நடிப்பிலும் கவர்கிறார். பிளாஷ்பேக் காட்சிகளில் இளமைக் காட்சிகளிலும் சிறப்பாக நடித்து இருக்கிறார்.

நம்ம ஊர் பையன் என்கிற தோற்றம், இயல்பான உடல்மொழி, சரளமான உச்சரிப்பு,  அநாயசமான நடிப்பு,. நிச்சயம் பெரிய அளவில்  வலம் வருவார். வாழ்த்துகள்.

மலையாள கரையோர நாயகி ஷாலி நிவேகாஸ், படத்திலும்  மலையாளப் பெண்ணாகவே வருகிறார்.  ஆகவே தனது பாத்திரத்துக்கு சிறப்பாக பொருந்தி இருக்கிறார். நாயகன் மீதான காதல்,  அதில் வெற்றி பெற எடுக்கும் முயற்சி என கவர்கிறார். இறுதிக் காட்சியில் பதைபதைக்க வைத்து விடுகிறார்.

சாதிவெறி அரசியல்வாதியாக வரும் மைம் கோபி, அவருக்கு உதவியாக வரும் அருள்தாஸ்,  டி.எஸ்.பி.யாக வரும் சாய் வினோத் என அனைவருமே பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.இசை இளையராஜா என டைட்டில் கார்டில் பார்த்த நினைவு.

ஜெ.பி.தினேஷ் குமாரின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம்.  குறிப்பாக மாஹேவின் அழகை அள்ளித்தந்த விதம் சிறப்பு.

முருகேஷ்பாபுவின் வசனம் கவனிக்க வைக்கிறது. ( “பச்சப் பிள்ளைங்களுக்கு பாலுக்கு காசு வாங்குறதில்லை..” என்கிற டீக்கடைக்காரரின் வசனக் காட்சி, “கட்றதுக்கு கோமணம் இல்லேனாலும் சாதி வெறிய விட மாட்டாங்க இந்த ஊரு ஆளுங்க..”,  “கொலையில என்னம்மா கவுரவம்.. ஆணவக்கொலைன்னு சொல்லுங்க..”, “ராஜ தந்திரம்னா என்ன தெரியுமா.. கல்லு கிடைக்கிற வரைக்கும் நாய்கூட பேச்சு வார்த்தை நடத்தணும்..” என்கிற அரசியல்வாதி… ஆகியவை சில உதாரணங்கள்.)

சாதி பாகுபாடு – அதன் விளைவாக நடக்கும் ஆணவ கொலைகள் பற்றி சமூக நோக்குடன் ஒரு படத்தை அளித்து இருக்கிறார் அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ்.  அதை, த்ரில்லர் பாணியில் சொல்லி இருப்பது சிறப்பு.

பிறப்பின் அடிப்படையில் குணநலன்கள் இல்லை… ஒருவர் நல்லவராவதும் தீயவராவதும் வளர்ப்பினிலே என்பதை மிகச் சிறப்பாக சொல்லி இருக்கும் படம்.

யாரை புதிதாகப் பார்த்தாலும், “என்ன ஆளுங்க” என்று கேட்பவர்கள் உண்டு. அவர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால், “நாம என்ன ஆளுங்க..” என்று கேட்டுக்கொள்வார்கள்.

இது படத்தின் வெற்றி.

ரேட்டிங்: 3.5/5

– டி.வி.சோமு