“நல்ல படத்துக்கு ‘அங்கீகாரம்’ கிடைக்கலையே!”: இயக்குநர் தென்பாதியான் ஆதங்கம்!

“நல்ல படத்துக்கு ‘அங்கீகாரம்’ கிடைக்கலையே!”: இயக்குநர் தென்பாதியான் ஆதங்கம்!

மீபத்தில் வெளியான அங்கீகாரம் திரைப்படம்,  விமர்சகர்களைக் கவர்ந்தது. விளையாட்டுத் துறையில், வீரர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை துல்லியமாக வெளிப்படுத்தி இருந்தார் இயக்குநர் தென் பாதியான்.

(படம் குறித்த நமது விமர்சனம்: https://tamilankural.com/angikaaram-tamil-movie-review/)

படம் வெளியாகி 25 நாட்கள் ஆன நிலையில், அவர்  வருத்தத்துடன் ஒரு கடிதத்தை வெளியிட்டு உள்ளார்.

அதில் அவர் தெரிவித்து இருப்பதாவது:

அனைவருக்கும் வணக்கம்,

என் முதல் திரைப்படமான அங்கீகாரம் வெளியாகி இன்று 25 வது நாள். அங்கீகாரம் நாயகன் அறிமுகம் மற்றும் அங்கீகாரம் டைட்டில் வெளியான நாள் தொடங்கி இன்றுவரை மீடியாக்கள், சமூக ஊடகங்கள், விமர்சகர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என படம் பார்த்த அனைவரும் அங்கீகாரம் திரைப்படத்தை கொண்டாடி தங்களோடு அரவணைத்துக்கொண்டார்கள்.

அங்கீகாரம் எப்படியான வெற்றிக்குரிய படம் என்பதை நீங்கள் அளித்த பேராதரவில் இருந்தே உணர்ந்துகொள்ள செய்தீர்கள். என்னையும் எங்கள் உழைப்பையும் கொண்டாடிய உங்கள் அனைவருக்கும் என் வாழ்நாள் நன்றிகள்.

ஒரு பெருங்கூட்டத்தின் உழைப்பில் உருவான நல்ல திரைப்படத்தை பொதுமக்களின் கவனத்துக்கு கொண்டு சேர்ப்பதில் ஒருசிலர் காட்டிய அலட்சியத்தால், அங்கீகாரமே எதிர்காலம் என்று நம்பியிருந்த, நான் உள்பட பல பேர் பாதிக்கப்பட்டுள்ளோம்.

அது ஒரு புறமிருக்க, அங்கீகாரம் திரைப்படம் வெளியான செய்தியை அறிந்திடாத பொதுமக்களிடம், உங்களிடம் கொண்டுவந்து சேர்க்க தவறியமைக்காக படத்தின் இயக்குனராக நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்த முறை இந்த தவறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன்.

அங்கீகாரம் கதையையும் என்னையும் நம்பி என்னோடு இணைந்து பணியாற்றிய தொழில்நுட்ப வல்லுனர்கள், திரைக்கலைஞர்கள், தட கள வீரர்கள் & பயிற்சியாளர்கள், மாட்டான்குப்பம் பொதுமக்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நேரடி தொடர்பில்லாமல் இந்த படத்திற்காக உழைத்த அனைவருக்கும் என் அன்பும் நன்றியும்.

எவ்வளவோ தொந்தரவுகளையும், அவமதிப்புகளையும் சந்தித்தாலும் எந்த எதிர்பார்ப்புமின்றி என் அங்கீகாரத்துக்காக உழைத்த நாளைய இயக்குனர்களான எனது குழுவினருக்கு அன்பு முத்தங்கள். நீங்கள் இல்லையேல் அங்கீகாரம் சாத்தியமே இல்லை.

வருமநாட்களில் அங்கீகாரம் போன்ற ஒரு நல்ல படைப்போடும், இன்னும் கூடுதல் பொறுப்போடும் உங்களோடு உரையாட வருகிறேன்.

என்றென்றும் நன்றியுடன்

தென்பாதியான்,

இயக்குநர்,

‘அங்கீகாரம்’

20.07.2026″ – இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.

அவரது வேதனை நியாயமானதுதான். அதே நேரம், தகுதியான இந்தத் திரைப்படம், தமிழ் மக்களின் அங்கீகாரத்தை விரைவில் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

 

Related Posts