‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’: விமர்சனம்

‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’: விமர்சனம்

காதல் தரும் கவிதையையும், அதன்பின் தொடரும் பிரிவின் வலியையும் திரையில் எதார்த்தமாகப் பதிவு செய்வதும், பார்வையாளர்களின் சொந்த அனுபவங்களோடு தொடர்புபடுத்துவதும் ஒரு நல்ல சினிமாவிற்கு அழகாகும். அவ்வகையில், அறிமுகக் கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவாகியுள்ள “என்னை ஏதோ செய்து விட்டாய்” திரைப்படம், காதலையும் வாழ்க்கையின் நுட்பமான உணர்வுகளையும் அழகியலோடு மேடைக்குக் கொண்டுவந்துள்ளது.

தாயின் மறைவு, தந்தையின் குடிப்பழக்கத்தால் உண்டான அரவணைப்பற்ற சூழல்—இவற்றுக்கு நடுவே அன்பிற்காக ஏங்கும் மனநிலையுடன் வளர்கிறான் ஆண்டனி. இந்த வாழ்க்கையின் தனிமையை மறக்க நண்பர்களுடன் சுற்றும் அவன், வழிமாறிச் சில கெட்ட பழக்கங்களுக்கும் ஆளாகிறான். அவனது முதிர்ச்சியற்ற பேச்சும், யோசிக்காமல் செய்யும் செயல்களும் பல நேரங்களில் பிறரைக் காயப்படுத்துகின்றன.

இத்தகைய சூழலில் மதுமிதாவின் வருகை அவன் வாழ்வில் நிகழ்கிறது. துவக்கத்தில் அவனிடம் விலகியிருக்கும் மதுமிதா, அவனது மனதின் ஆழத்தில் உள்ள பாசப் போராட்டத்தையும் தவிப்பையும் உணர்ந்து அவனைக் காதலிக்கத் தொடங்குகிறாள். ஆனால், ஆண்டனியின் பொறுப்பற்ற குணமும், நண்பர்கள் சார்ந்த சில அவசர முடிவுகளும் இருவர் உறவிலும் பெரும் விரிசலை ஏற்படுத்துகின்றன. அந்தப் பிரிவுக்குப் பின் இருவரும் இணைந்தார்களா, ஆண்டனி தன் தவறுகளை உணர்ந்தானா என்பதே படத்தின் மீதிக்கதை.கதை, திரைக்கதை, இயக்கம், படத்தொகுப்பு, தயாரிப்பு எனப் பல தளங்களில் இயங்கியுள்ள டி. அந்தோணி, நாயகனாகவும் தன் பங்களிப்பைச் செவ்வனே செய்துள்ளார். பாசத்திற்காக ஏங்கும் ஒரு இளைஞனின் மனப்போராட்டங்களை எதார்த்தமான நடிப்பின் மூலம் கடத்தியுள்ளார். முதல் படத்திலேயே ஒரு இயக்குநராகத் தன் முத்திரையைப் பதித்து நம்பிக்கை அளிக்கிறார்.

அறிமுக நடிகையான மதுமிதா தாஸ், தமிழ் திரையுலகிற்கு ஒரு நல்ல வரவு. கோபம், ஏக்கம், காதல் எனப் பலதரப்பட்ட உணர்ச்சிகளைத் தன் இயல்பான நடிப்பினாலும் முகபாவனைகளினாலும் அழகாக வெளிப்படுத்தியுள்ளார். ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், நவ்யா சுஜி போன்ற அனுபவமிக்க மற்றும் புதிய நடிகர்கள் கதையின் ஓட்டத்திற்குத் தேவையான பங்களிப்பைக் கச்சிதமாக வழங்கியுள்ளனர்.

ஜெய்கர் ஹரிநாத் மற்றும் அசோக் ஸ்ரீதரனின் பாடல்கள் மனதைத் தொடுகின்றன. குறிப்பாக, ஜோயி ரெடாவின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய உயிர்நாடி. பிரிவின் ஆழத்தையும் காதலின் மென்மையையும் தன் இசையால் பார்வையாளர்களின் மனதிற்குள் கடத்துவதில் இசைக்குழு வெற்றி பெற்றுள்ளது.பியட்ரோ வில்லானியின் கேமரா கோணங்களும், ஒளியமைப்பும் ஒவ்வொரு காட்சியையும் ஒரு ஓவியம் போல மாற்றியுள்ளன. கே.கே. சுரேந்திரனின் கலை இயக்கம் காட்சிகளுக்கு எதார்த்தத்தைக் கூட்டியுள்ளது. ஜெய்கர் ஹரிநாத் (ஒலிப்பதிவு), ஆனந்த் ராமச்சந்திரன் (ஒலி கலவை) ஆகியோரின் நேர்த்தியான பணி திரையரங்க அனுபவத்தை மேம்படுத்துகிறது.

பிரபல நட்சத்திரங்களையோ அல்லது பிரம்மாண்ட வணிக சூத்திரங்களையோ நம்பாமல், மனித உணர்வுகளையும் நல்ல கதையையும் மட்டுமே மூலதனமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் இது. காதலின் இனிமையையும், பிரிவின் தவிப்பையும் உணர்வுப்பூர்வமாக ரசிக்க விரும்பும் சினிமா ரசிகர்களுக்கு “என்னை ஏதோ செய்து விட்டாய்” ஒரு நல்ல அனுபவத்தைத் தரும்.