4 இடியட்ஸ்: விமர்சனம்

4 இடியட்ஸ்: விமர்சனம்

லட்சுமி மூவி மேக்கர்ஸ் சார்பில் ஸ்ரீவத்சன், கோகுல கிருஷ்ணன் தயாரிப்பில், சஜோ சுந்தர் முருகேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம். டாவின்சி சரவணனோடு இணைந்து அவரே கதையையும் எழுதியுள்ளார். புகழ், கும்கி அஷ்வின், ரவி மரியா, வின்சென்ட் அசோகன், பிரக்யா நயன், திடியன், இந்திரன் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இதில் சேர்ந்து நடித்துள்ளனர்.

தமிழகத்தின் கொரோனா ஊரடங்கு கால பின்னணியில் கதை தொடங்குகிறது.

கடற்கரை ஓரம் தனியாக இருக்கும் ஒரு டாக்டரின் (வின்சென்ட் அசோகன்) பங்களாவில் அதிகளவு பணம் இருப்பதாகத் தகவல் பரவுகிறது.

அந்தப் பணத்தைக் கைப்பற்ற நான்கு திருடர்கள் (புகழ், கும்கி அஷ்வின், திடியன், இந்திரன்) திட்டம் போட்டு நுழைகிறார்கள். ஆனால், எதிர்பாராதவிதமாக பங்களாவின் வாட்ச் மேனிடம் (ரவி மரியா) மாட்டிக்கொள்கிறார்கள்.

அப்போது அந்த வாட்ச் மேன் அவர்களுக்கு ஒரு யோசனை சொல்கிறான். “நான் சொல்லும் நாளில் என்னை அடித்துப் போட்டுவிட்டு பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு போய் விடுங்கள். காரியம் முடிந்ததும் பணத்தை நமக்குள் பாதியாகப் பிரித்துக் கொள்வோம்” என்கிறான்.

அவர்களும் அதற்குச் சம்மதிக்கிறார்கள்.

ஆனால், கதையில் ஒரு திருப்பமாக, அந்த டாக்டர் ஆட்களைக் கடத்திக் கொலை செய்து உடல் உறுப்புகளை விற்பவர் என்பதும், வாட்ச் மேனும் அதற்கு உடந்தை என்பதும் அவர்களுக்குத் தெரியவருகிறது.

விஷயம் தெரியாதது போலக் காட்டிக்கொண்டு அவர்கள் தப்பிக்க முயல, அவர்களுக்கு உண்மை தெரிந்துவிட்டது என்பதை வாட்ச் மேன் அறிந்துகொள்கிறான்.

அதன்பின் அவர்கள் அங்கிருந்து தப்பித்தார்களா? கொரோனா காலச் சூழல் அவர்களின் தப்பிக்கும் முயற்சிக்கு எப்படித் துணையாக இருந்தது? என்பதே படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதை.

ஒரே ஒரு பங்களா லொக்கேஷன், பிரதானமாக ஐந்து கதாபாத்திரங்கள், சில காட்சிகளில் வரும் நான்கு துணைப் பாத்திரங்கள் என மிகக் குறைந்த முதலீட்டில், நுணுக்கமான திட்டமிடலோடு நிறைவான லாபம் தரும் வகையில் இயக்குநர் சஜோ சுந்தர் இந்தத் திரைப்படத்தை உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது.

எளிய தயாரிப்புச் செலவில், இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப சுவாரசியமான கதையை எப்படிச் சிறப்பாகவும் புதுமையாகவும் சொல்ல முடியும் என்பதற்கு இது ஒரு நல்ல முயற்சி.

படத்தின் தொடக்கக் காட்சிகள் ரசிகர்களைக் கதையோடு உடனடியாக ஒன்ற வைக்கின்றன.

யு கே செந்தில்குமாரின் ஒளிப்பதிவு காட்சிக்குக் காட்சி பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

பணம் குறித்த சுவாரசியம், கிளாமர் பாடலில் வந்து ரசிகர்களைக் கவரும் பிரக்யா நயன், பின்னர் கதையின் போக்கில் ஊமை வேலைக்காரி, அதன்பின் அதிரடி போலீஸ் எனப் பல பரிமாணங்களில் தோன்றி அசத்துவது, யாருடைய ஆள் என்ற கேள்வி எழுப்பும் மர்மங்கள், பைத்தியம் பிடித்த நபரின் திருப்பம் எனப் படத்தில் பல இடங்களில் ரசிக்கும்படியான சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளன.

இயக்குநர் அமைத்திருக்கும் காட்சிகளும், அதைத் திரையில் கொண்டு வந்திருக்கும் முறையும் இயல்பாகக் கடந்து செல்லும் மேகங்களைப் போலக் கச்சிதமாகப் பொருந்துகின்றன.

சுபாஷ் மணிரத்தினத்தின் இசை, பின்னணியில் ஒலித்துக் கொண்டே இருந்து காட்சிகளின் தன்மையை அழகாக உயர்த்துகிறது.

கொரோனா கால கட்டத்தில் நடக்கும் இந்தத் திரைப்படம், இன்றைய காலகட்டத்திலும் ரசிகர்கள் ரசித்துத் தியேட்டரில் பார்க்கும் அளவுக்கு ஒரு வித்தியாசமான கதைக் களத்தைக் கொண்டு வந்துள்ளது.

சோஷியல் மீடியாவில் ஒரு பிரபலத்தைக் கலாய்க்கும்போது அது எளிதாக மக்களைச் சென்றடைகிறது. சினிமாவுக்கு வரும்போது அது கற்பனைக் கதாபாத்திரங்களாக மாறுவதால், அதற்கான உழைப்பும் சூழலும் தேவைப்படுகிறது.

சோஷியல் மீடியாவில் லைக்ஸ் வாங்கும் பரிதாபங்கள் கோபி ‘அன்பே டயானா’ படத்திலும், மா கா ப ஆனந்தின் படங்களிலும் தங்களது தனித்துவமான நகைச்சுவை பாணியைக் கொண்டு வந்தார்கள்.

டிவி நிகழ்ச்சியில் புகழ் செய்யும் காமெடிகள் எந்த அளவுக்கு வைரலாகுமோ, அதேபோலத் தான் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்திலும் பல நகைச்சுவைக் காட்சிகளை வழங்க முயற்சித்துள்ளார்.

பத்து அம்புகளை வீசும்போது இலக்கைத் தொடும் முயற்சி போல, படத்தில் ஆங்காங்கே பல நகைச்சுவை தருணங்களை அமைத்து ரசிகர்களை மகிழ்விக்க முயன்றிருக்கிறார்கள்.

மக்கள் அனைவரும் சட்ட மன்ற நேரலை போலத் தீவிரமான விஷயங்களில் பிசியாக இருக்கும் இந்த காலத்தில், அவர்களைத் தியேட்டருக்கு வரவைத்து மகிழ்விப்பது ஒரு நல்ல முயற்சி.

இந்தக் கதையை ஒரு திரில்லர் பாணியில் நகர்த்தி, ஆங்காங்கே நகைச்சுவைகளையும் சுடச்சுடச் சேர்த்துத் தந்திருப்பது படத்திற்கு கூடுதல் சேர்க்கை.

சூழலுக்கும் கேரக்டர்களுக்கும் ஏற்ற வகையில் நகைச்சுவை உரையாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன. சந்தானம் பாணியில் கோபமான சூழலிலும் சிரிப்பை வரவழைக்கும் முயற்சிகள் இதில் செய்யப்பட்டுள்ளன.

படத்தின் இரண்டாம் பாதியும் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற சுவாரசியத்தைத் தக்கவைக்கிறது.

குறைந்த நடிகர்கள், குறைந்த லொக்கேஷன், குறைந்த செலவு என்பதையும் தாண்டி, கதையும் திரைக்கதையும் எங்கும் தொய்வடைந்து விடக்கூடாது என்பதில் தயாரிப்பாளர்கள் காட்டிய கவனம் தெளிவாகத் தெரிகிறது.

‘4 இடியட்ஸ்’ — படம் பார்ப்பவர்களை முற்றிலும் ரசிக்க வைத்து மகிழ்விக்கும் ஒரு நல்ல பொழுதுபோக்குத் திரைப்படம்!