சூழ்ச்சி + ஆக்‌ஷன்.. பிரபலங்கள் வெளியிட்ட ‘துரோகம் பழகு’ பர்ஸ்ட் லுக்!

சூழ்ச்சி + ஆக்‌ஷன்.. பிரபலங்கள் வெளியிட்ட ‘துரோகம் பழகு’ பர்ஸ்ட் லுக்!

மகிழ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், சி. பியூலா மகிழ் அவர்களின் பெரும் முயற்சியில் உருவாகியிருக்கும் புத்தம் புதிய திரைப்படம் ‘துரோகம் பழகு’. திரையில் தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையைப் பதிக்கத் துடிக்கும் இயக்குநர் சீயோன் ராஜா, இப்படத்தின் மூலம் ஒரு வித்தியாசமான கதை சொல்லும் பாணியைக் கையில் எடுத்துள்ளார்.

திரையுலகின் பிரபல நட்சத்திரங்களான இயக்குநர் எஸ். வி. சேகர், ஃபெப்சி தலைவர் ஆர். கே. செல்வமணி, நடிகர்கள் நட்டி நட்ராஜ், ராம்கி, நடிகைகள் பூனம் பாஜ்வா, இனியா, நந்திதா ஸ்வேதா மற்றும் அஷ்மிதா சிங் ஆகியோர் இணைந்து இப்படத்தின் முதல் பார்வையை (ஃபர்ஸ்ட் லுக்) தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். வெளியானதுமே இந்த முதல் பார்வை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பைப் பற்றவைத்துள்ளது.

இப்படத்தில் புதுமுகப் புயல் தக்க்ஷன் விஜய் கதாநாயகனாகக் களமிறங்குகிறார். சண்டைக் காட்சிகளிலும், உணர்ச்சிப்பூர்வமான நடிப்பிலும் தீவிரப் பயிற்சி எடுத்துள்ள இவர், இளைஞர்களைக் கவரும் வண்ணம் ஆக்‌ஷனில் அதகளம் செய்துள்ளார். அவருடன் இணைந்து லொள்ளு சபா ஜீவா, ‘வாழை’ ஜானகி அம்மா, வனிதா விஜயகுமார், ஜி. எம். குமார், கஞ்சா கருப்பு, விஜய் டிவி புகழ் திவாகர் மற்றும் அமுதவாணன் என ஒரு பெரு பட்டாளமே முக்கியக் கதாபாத்திரங்களில் கதையைத் தாங்கிப் பிடிக்கின்றனர்.

துரோகம், நம்பிக்கை, உறவுகள், மனித உணர்வுகள் எனச் சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்க்கைப் போராட்டங்களையும், மனப்போராட்டங்களையும் மையமாகக் கொண்டு படம் பயணிக்கிறது. “சில காயங்கள் ஒருபோதும் மன்னிக்கப்படுவதில்லை…” எனும் கணீரென்ற ஒன்-லைனுடன் வெளியாகியுள்ள இந்த முதல் பார்வை, படத்தின் கதைக்களம் எந்த அளவுக்குக் கூர்மையாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது.

இசையமைப்பாளர்கள் பாலா மற்றும் ராஜா இணைப்பில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் நெஞ்சங்களைத் துள்ள வைக்கின்றன. அதிலும் கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகள் பாடல்களுக்கு மேலும் வலுசேர்த்து, படத்திற்கான எதிர்பார்ப்பை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளன. அனைத்துத் தரப்பு ரசிகர்களையும், குறிப்பாக இளைஞர் பட்டாளத்தைக் தியேட்டரை நோக்கி இழுக்கும் அனைத்து அம்சங்களும் இப்படத்தில் நிறைந்துள்ளன.