‘ஆல்பாஸ்’ விழாவில் ‘பரபர’!: வடசென்னையில் ரத்தம் இல்லையா? கேமராமேனுடன் மோதல்! சூர்யா மீது மன்சூர் பாய்ச்சல்!
வடசென்னை என்றாலே ரத்தமும் கத்தியும்தான் என்ற பிம்பத்தை உடைக்கத் துணிகிறது ‘ஆல்பாஸ்’ திரைப்படம். ஒன்ஸ் ஸ்டெப் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் மோகனா தயாரிப்பில், மைதீன் இயக்கியுள்ள இப்படத்தில் துஷ்யந்த் நாயகனாகவும் ஜனனி நாயகியாகவும் நடித்துள்ளனர். ஜெயப்பிரகாஷ், சுப்பிரமணியம் சிவா, ரோஷன் பஷீர், சரத் லோகித்தஸ்வா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்க, தில் ராஜு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இயற்கை வைக்கும் கடினமான தேர்வில் வடசென்னையைச் சேர்ந்த மூன்று சாதாரண குடும்பங்கள் எப்படி வெற்றி பெறுகின்றன என்பதே இப்படத்தின் எதார்த்தமான கதைக்களம்.
படத்தைப் தாண்டி, இதன் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா பல அதிரடி உரையாடல்களால் சூடானது!
-
கேமராமேன் மோதல்: தொடக்கத்தில் ஒளிப்பதிவு செய்த மூத்த கலைஞர் எம்.எஸ்.பிரபுவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர் விலகியதையும், உதவி இயக்குநர்களுக்கு திரையுலகில் உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என்பதையும் இயக்குநர் மைதீன் வேதனையோடு பகிர்ந்தார்.
-
மன்சூர் அலிகான் பொரிந்து தள்ளிய சர்ச்சை: விழாவில் கலந்துகொண்ட நடிகர் மன்சூர் அலிகான், ‘கருப்பு’ படத்தில் தான் கஷ்டப்பட்டு ஆடிய க்ளைமாக்ஸ் நடனக் காட்சியை நீக்கிவிட்டதாகக் கூறி கொந்தளித்தார். சூர்யா, கார்த்தி போன்ற பெரிய நடிகர்கள் தங்களைப் போன்றவர்களையும் வாழ விட வேண்டும் என்று வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார்.
-
தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு மரியாதை: யூடியூப் விமர்சகர்களையும் ஆன்லைன் விமர்சனங்களையும் கடுமையாகச் சாடிய மன்சூர் அலிகான், சினிமாவில் உழைக்கும் ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரின் பெயரும் விளம்பரப் பத்திரிகைகளில் பெரிதாக இடம்பெற வேண்டும் எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
சினிமா உலகின் உட்கட்சி மோதல்களையும், வடசென்னையின் நிஜ வாழ்க்கையையும் ஒருசேரப் பேசும் ‘ஆல்பாஸ்’ திரையில் எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

