“நீயா, நானா?”: ஸ்ரீப்ரியாவின் சட்டச் சீறல்.. ‘த்ரிஷ்யம் 3’க்காக!

“நீயா, நானா?”: ஸ்ரீப்ரியாவின் சட்டச் சீறல்.. ‘த்ரிஷ்யம் 3’க்காக!

மலையாளத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘த்ரிஷ்யம் 3’ திரைப்படத்தின் இந்தி ரீமேக்கை உலகளவில் வெளியிடுவதற்குத் தடை கோரி, நடிகை ஸ்ரீப்ரியாவின், ராஜ்குமார் தியேட்டர்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

பிரபல நடிகை ஸ்ரீப்ரியா  நடித்த முதல் திரைப்படம் ‘முருகன் காட்டிய வழி’ (1973).  . அதைத்தொடர்ந்து கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘அவள் ஒரு தொடர்கதை’ (1974) படத்தில் முக்கியமான ரோலில் நடித்ததன் மூலம் தமிழ்நாடெங்கும் அறியப்பட்டார்.

அந்த காலகட்டத்தில் சிவாஜி, கமல், ரஜினி உள்ளிட்ட பிரபல நாயகங்களுடன் நடித்தார்.  தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

 ‘அவள் அப்படித்தான்’, ‘பில்லா’, ‘ஆட்டுக்கார அலமேலு’, ‘அன்னை ஒரு ஆலையம்’, ‘இளமை ஊஞ்சலாடுகிறது’, ‘சட்டம் என் கையில்’ என இப்போதும் அவரது பெயர் சொல்லும் படங்கள் ஏராளம் உண்டு.

மிக முக்கியமாக, மறக்கவே முடியாத படம், நீயா. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இலங்கை, மலேசியா போன்ற தமிழர் வாழும் பகுதிகளிலும் வருடக்கணக்கில் வசூலைக்குவித்த திரைப்படம்.

நடிப்பில் மட்டுமின்றி, எழுத்து, இயக்கம் என பன்முகவித்தகராக விளங்கும் ஸ்ரீப்ரியா, தனது கணவர்  ராஜ்குமார் சேதுபதியுடன் இணைந்து ‘ராஜ்குமார் தியேட்டர்ஸ்’ நிறுவனம் மூலம் திரைப்பட தயாரிப்பிலும் ஈடுபட்டு உள்ளார்.

இந்நிலையில்தான்,  ஸ்ரீப்ரியா சேதுபதி மற்றும் ராஜ்குமார் சேதுபதி  ஆகியோரின் ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் உள்ளிட்டோருக்கு எதிராக இந்த வழக்கைத் தொடுத்து உள்ளது.அஜய் தேவ்கன், தபு நடிப்பில் அபிஷேக் பதக் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் இந்திப் பதிப்பை, வழக்கு முடிவு பெறும் வரை உலகின் எந்தப் பகுதியிலும் வெளியிடவோ, விநியோகிக்கவோ அல்லது வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தவோ எதிர்மனுதாரர்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்பதே இந்த மனுவின் முக்கியக் கோரிக்கையாகும்.

இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதிபதி திரு. கே. குமரேஷ் பாபு அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் M/s. Rugan and Arya அவர்களுக்காக மூத்த வழக்கறிஞர் திரு. கே. ரவி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், எதிர்மனுதாரர்களின் பதில் மனுவைத் தாக்கல் செய்வதற்காகவும், முறையான விசாரணைக்காகவும் வழக்கை வரும் அக்டோபர் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

தங்களது ஒப்பந்த உரிமைகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமைகளைப் பாதுகாப்பதற்கும், வர்த்தகப் பயன்பாட்டைத் தடுத்து உரிய சட்டத் தீர்வைப் பெறுவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராஜ்குமார் தியேட்டர்ஸ் தரப்பு தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கினைத் சட்டப்படி தொடர்ந்து முன்னெடுக்க நிறுவனம் முழு வீச்சில் களமிறங்கியுள்ளது.

Related Posts