The Garfield திரைப்பட விமர்சனம்

The Garfield  திரைப்பட விமர்சனம்

தி சிக்கன் லிட்டில் பட புகழ்   மார்க் டிண்டால் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ” The Garfield Movie” அனிமேஷன் படத்தின் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.

கார்ஃபீல்டு என்ற குறும்புத்தனமான – அனிமேஷன் பூனையை மையப்படுத்தி, மக்களிடம் வரவேற்பைப் பெற்ற திரைப்படத் தொடர் குறித்து அனைவருக்கும் தெரியும்.இதன் முதல் படைப்பு குறும்படமாக 1982-ல் டிவியில் வெளிவந்தது. பிரபல கார்ட்டூனிஸ்டான ஜிம் டேவிஸின் உருவாக்கத்தில் இந்த கார்ஃபீல்டு பூனை உலா வர ஆரம்பித்தது. பிறகு திரைப்படமாக வர ஆரம்பித்தது.

இந்த வரிசையில் அடுத்த பாகமாகத் திரையரங்கில் வெளியாகி உள்ளது, `தி கார்ஃபீல்டு மூவி’.

குறும்புத் தனமான சோம்பேறி பூனை  கார்ஃபீல்டு;  அதன் நெருங்கிய நண்பன் ஓடி என்ற நாய்.

இவை இரண்டும் கடத்தப்படுகின்றன. கடத்தப்பட்ட இடத்தில் தன்னைச் சிறு வயதில் விட்டுச் சென்ற தன்னுடைய அப்பா பூனையைக் பார்க்கிறது கார்ஃபீல்டு. அப்பா மீது கடும் ஆத்திரத்தில் இருக்கிறது.

இதற்கிடையே, ஜிங்க்ஸ் என்ற வில்லி பூனை, கார்ஃபீல்டையும் அதன் அப்பாவையும் மிரட்டி ஓர் இடத்திற்குக்கொள்ளையடிக்க அனுப்புகிறது.
கொள்ளை அடிக்க சென்ற இடத்தில் கார்ஃபீல்டுக்குப் புதியதாக ஒரு காளை மாடு தோழன் ஆகிறது. அந்த மாட்டுக்கும் ஒரு முக்கியமான உதவி தேவைப்படுகிறது.

இந்தக் கொள்ளை திட்டம் வெற்றிகரமாக நடந்ததா  என்பதுதான் இந்த அனிமேஷன் திரைப்படத்தின் கதை.

பாத்திரப்படைப்புகளை மனிதர்களைப்போலவே உருவாக்கி ரசிக்கவைத்து இருக்கிறார்கள்.

கார்ஃபீல்டு மீது பாசத்தைப் பொழியும் தந்தை பூனை விக்,  காதலியை நினைத்து உருகும் காளை ஓட்டோ… இப்படி நிறைய சொல்லலாம்.

வில்லி கதாபாத்திரமான ஜிங்க்ஸ் பூனை மீது நமக்கு ஆத்திரம் வரும்அளவுக்கு சிறப்பாக உருவாக்கி இருக்கிறார்கள்.

அனிமேஷன் கதாபாத்திரங்களின்  அதன் முகபாவனைகளும், உடல் மொழியும் அருமையாக வடிவமைக்கப்பட்டு உள்ளன.

அதே போல,
கதாபாத்திரத்திரங்களுக்கு  ஹாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்கள் பின்னணி கொடுத்து இருக்கிறார்கள். அத்தனை சிறப்பு.

மார்வெல் திரைப்படங்களில் ஸ்டார் லார்ட்டாக வரும் கிறிஸ் பிராட், கார்ஃபீல்டு பூனைக்குக் குரல் கொடுத்திருக்கிறார். தந்தை பூனை கதாபாத்திரத்திற்கு மூத்த நடிகர் சாமுவேல் ஜாக்சன் குரல் கொடுத்திருக்கிறார்.
முழுக்க முழுக்க நகைச்சுவையை அடிப்படையாக கொண்டு ரசிக்க வைக்கிறது படம். அதே நேரம் அப்பா செண்டிமெண்ட், காதல் என்று நம்மை படத்துடன் ஒன்ற வைத்து விடுகிறார்கள்.

குறிப்பாக, க்ளைமாக்ஸில் வரும் ரயில் ஸ்டன்ட் காட்சிகளெல்லாம் பிரமாண்டம்!

ஜான் டெப்னியின் பின்னணி இசை, படத்துக்கு பலம்.

குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் ரசிக்கும்படி இயக்கி இருக்கிறார் மார்க் திண்டல்.