தலைமைச் செயலகம் விமர்சனம்
இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் கிஷோர், ஷ்ரேயா ரெட்டி, பரத், ரம்யா நம்பீசன், ஆதித்யா மேனன், கனி குஸ்ருதி, நிரூப் நந்தகுமார், தர்ஷா குப்தா, சாரா, சித்தார்த் விபின், ஒ ஜி எம் , சந்தான பாரதி, கவிதா பாரதி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் தொடர் தான் தலைமைச் செயலகம்.
ஜிப்ரான் இந்த தொடருக்கு இசையமைத்திருக்கிறார். வொய்டு ஆங்கிள் ரவிஷங்கர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
ரவிக்குமார் படத்தொகுப்பு செய்திருக்கும் இந்த தொடரை ராதிகா சரத்குமார் தயாரித்திருக்கிறார்.
இந்த தொடர் சுமார் 8 எபிசோட்களை கொண்டது. இம்மாதம் 17 ஆம் தேதி ஜீ5 இணையத்தில் வெளியாக இருக்கிறது.கதைக்குள் பயணிக்கலாம்…
தமிழக முதல்வராக வருகிறார் அருணாச்சலம் (கிஷோர்). இவர் மீது ஊழல் வழக்கு ஒன்று மத்திய பிரமுகர் ஒருவரால் தொடுக்கப்பட்டு, சில வருடங்களாக அந்த வழக்கும் நடத்தப்பட்டு வருகிறது.
சாட்சிகள் அனைத்தும் முதல்வருக்கு எதிராக திரும்ப, தீர்ப்பும் முதல்வருக்கு எதிராக தான் வர வாய்ப்பிருப்பதாக அனைவரும் அறிகின்றனர். இந்த வழக்கானது ஆந்திர பிரதேசத்தில் நடக்கிறது.
கிஷோர் சிறைக்குச் சென்று விட்டால், முதல்வர் நாற்காலியை பிடிப்பதற்காக சில கழுகுகள் வட்டமிடுகின்றன. கிஷோரின் மூத்த மகளும் அமைச்சருமான ரம்யா நம்பீசன், கிஷோரின் இரண்டாவது மருமகனான நிரூப் நந்தகுமார் இருவரும் முதல்வர் பதவிக்கு வர ஆசைப்படுகிறார்கள்.
அதேசமயம், அப்பாவை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்றும் ஓடிக் கொண்டிருக்கிறார் ரம்யா. இந்த சூழலில், கிஷோரின் நெருங்கிய நண்பரும் கட்சி ஆலோசகருமான ஷ்ரேயா ரெட்டியும் அப்பதவிக்கு குறி வைக்கிறார்.
ஷ்ரேயா ரெட்டி மீது இருக்கும் நட்பால், ஷ்ரேயா சொல்வதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார் முதல்வர் கிஷோர்.
அதேசமயம், ஜார்கண்ட் மாநிலத்தில் பல கொலைகளை செய்து தப்பி வந்த துர்கா என்ற கதாபாத்திரத்தை தேடி, சிபிஐ போலீஸ் அலைகிறது. அதுமட்டுமல்லாமல், தொடர்ச்சியாக EX.M.P.க்களையும் அந்த துர்கா கதாபாத்திரம் கொலை செய்து வருகிறது.
தமிழகத்தில் நடக்கும் கொலை ஒன்றை விசாரிக்கிறார் போலீஸ் அதிகாரியான பரத். இந்த வழக்கானது நூல் பிடித்தவாறு செல்கிறது. இவை அனைத்தும் ஒருபுள்ளியில் வந்து இணைகிறது.
அந்த புள்ளி யார் மீது வந்து நிற்கிறது.? துர்கா யார்.? கிஷோருக்கு தண்டனை வழங்கப்பட்டதா.? இல்லையா.? அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்.? என்ற பல கேள்விகளுக்கு விடை இருக்கிறது மீதமுள்ள கதையில்.
கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார் நடிகர் கிஷோர். தனது கேரக்டரின் முக்கியத்துவத்தை அறிந்து, அதை அளவோடு செய்து முடித்திருக்கிறார். தனக்குப் பின்னால் கட்சியின் நிலைமை, தமிழக ஆட்சியின் நிலைமை என வருந்தி நிற்கும் தருணத்தில் நடிப்பின்ன் உச்சம் தொடுகிறார் நடிகர் கிஷோர். சின்ன சின்ன ரியாக்ஷனில் நம்மால் உணர முடிந்தது, கதாபாத்திரத்தை எந்த அளவிற்கு உள்வாங்கியிருக்கிறார் என்று.
படத்தின் முக்கிய தூணாக வந்து நிற்கிறார் ஷ்ரேயா ரெட்டி. இப்படியொரு கதாபாத்திரத்தை செய்வதற்கு தமிழ் சினிமாவில் இவரைத் தவிர வேறு யார் இருக்கிறார் என்று சொல்லும் அளவிற்கு “கொற்றவை” கதாபாத்திரத்திற்கு ஆகப்பொருத்தமாக பொருந்தியிருக்கிறார் நாயகி ஷ்ரேயா ரெட்டி. பல இடங்களில் தனது முத்திரை நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார் ஷ்ரேயா. க்ளைமாக்ஸ் காட்சியில் திமிரு அக்காவை ஒரு நிமிடம் பார்க்கலாம்…
போலீஸ் அதிகாரியாக நடித்த பரத், மிகப்பொருத்தமாக இருக்கிறார். சிபிஐ அதிகாரியாக வரும் ஆதித்யா மேனனின் விசாரணைத் துணுக்குகள் ரசிக்க வைக்கின்றன.
மிகவும் துணிச்சலான கதாபாத்திரம் தான் ரம்யா நம்பீசனோடது. அமைச்சராக இறுக்கமான முகத்தோடு பேசும் வசனங்கள் கைதட்டல் தட்ட வைக்கின்றன.
இவர்களைத் தொடர்ந்து , கனி குஸ்ருதி, நிரூப் நந்தகுமார், தர்ஷா குப்தா, சாரா, சித்தார்த் விபின், ஒ ஜி எம் , சந்தான பாரதி, கவிதா பாரதி உள்ளிட்ட கதாபாத்திரங்களும் தங்களுக்கானதை அளவோடு செய்து கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
இதுவரை நாம் பார்த்த இந்திய அரசியல், தமிழக அரசியல் இரண்டையும் கலந்து ஒரு அரசியல் சதுரங்க ஆட்டத்தை மிகவும் நேர்த்தியாக படைப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் வசந்த பாலன்.
கண்டெய்னர், ஹெலிகாப்டர் விபத்து, ஊழல் வழக்கு வேறு மாநிலத்தில் விசாரிக்கப்படுவது, வழக்கு தொடுப்பது மத்திய அரசைச் சேர்ந்தவர், முதல்வரை சிறைக்கு தள்ளி மாநில அரசைக் கைப்பற்ற துடிக்கும் மத்திய அரசு, வட இந்தியாவின் நிலை என பல நிகழ்கால நிகழ்வை கிண்டியிருக்கிறார் இயக்குனர்.மிக வேகமாக நகர்வதால், தொடர் மீது அதீத ஈர்ப்பு ஏற்படுகிறது. நடுவில் சற்று தொய்வடைந்தாலும், இறுதி இரண்டு எபிசோட்கள் சீட்டின் நுனியில் அமர வைத்திருக்கிறது. க்ளைமாக்ஸ் மிகப்பெரும் ட்விஸ்ட்.
நீட் & க்ளீன் பொலிட்டிக்கல் தொடராக வெளிவந்திருக்கும் இத்தொடரை அனைவரும் நிச்சயம் பார்க்கலாம்.
ஜிப்ரானின் பின்னணி இசை மற்றும் வொய்டு ஆங்கிள் ரவிஷங்கரின் ஒளிப்பதிவு தொடருக்கு மிகப்பெரும் பலம்.
ஜார்கண்டில் ஒரு பெண் சிலரை கொல்லும் காட்சி பார்க்கும் போதே மிகவும் ரம்மியமாக இருந்தது.
மொத்தத்தில்,
தலைமைச் செயலகம் – அனைவரையும் கவரும்.