“வார்ப்பு… வளர்ப்பு… வாக்கு!”: தனது புத்தக விழாவில் நெகிழ்ந்த கவிஞர் & நடிகர் ஜெகன் கவிராஜ்!
திரைப்பட கவிஞர் மற்றும் நடிகர் மு. ஜெகன் கவிராஜ் எழுதியுள்ள ‘ஈரம் காயாத கதைகள்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது.
நிகழ்வில், முக்கியப் பிரமுகர்கள் பேசிய உரைகளில் இருந்து..
கிராம நிர்வாக அதிகாரி அன்னலட்சுமி:
“ஜெகன் அண்ணாவும் நானும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். அவரிடம் உள்ள ஆகச்சிறந்த பண்பு அவருடைய வாசிப்புப் பழக்கமாகும். தினமும் இத்தனை பக்கங்கள் படிக்க வேண்டும் என்று திட்டமிட்டுப் படிப்பவர். முறையான பள்ளிப்படிப்பு இல்லை என்று அவர் ஆதங்கப்பட்டாலும், அவர் மனிதர்களின் வாழ்க்கையை மிக ஆழமாகப் படித்துள்ளார்.
இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும், எங்கள் ஊர் தாத்தாக்களும் பாட்டிகளும் வாய்மொழியாகக் கூறிய வரலாற்றுச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை ஆகும். இக்கதைகளைப் படித்த பிறகுதான், எங்கள் ஊர் மனிதர்களைப் பற்றிய மாற்றுப் பார்வை எனக்குள் ஏற்பட்டது. அவருக்குள் இன்னும் பல கதைகள் இருக்கின்றன. அடுத்த புத்தகத்தில் அவை அனைத்தும் வெளிவர வேண்டும்.”
செந்தில்குமார் IRS:
“எங்கள் கிராமத்தின் வாழ்வியலையும், அதைச் சுற்றி வாழ்ந்த மனிதர்களின் சிறந்த கதைகளையும் பிரதிபலிக்கும் வடிவமாக இந்த நூல் அமைந்துள்ளது. கி.ரா, தோப்பில் முகமது மீரான் போன்ற மூத்த எழுத்தாளர்களின் இயல்பான எழுத்து நடை ஜெகனுக்கு அலாதியாக வாய்த்திருப்பது ஆச்சரியமளிக்கிறது. எங்கள் தந்தையர்கள் இருவரும் ஒன்றாகப் படித்தவர்கள் என்பதால், எங்கள் நட்பு சிறுவயதிலேயே தொடங்கிவிட்டது.
எழுத்துத் துறையில் வெற்றியை விடத் தோல்விகளும், பொருளாதாரச் சுமைகளும் அதிகம். ஜெகன் இத்துறையைத் தேர்ந்தெடுத்தபோது சவாலாக இருக்கும் என நினைத்தேன். ஆனால், சில வருடங்களிலேயே பாடல் எழுதுவது, நடிப்பது, புத்தகம் எழுதுவது எனப் பன்முகத்தன்மையில் சாதித்துக் காட்டியுள்ளார்.
பொதுவாக, எளிய பின்புலத்தில் இருந்து வருபவர்கள் சமுதாயத்தின் மீதும், அரசியல்வாதிகள் மற்றும் பணக்காரர்கள் மீதும் கோபத்தை வெளிப்படுத்துவார்கள் அல்லது சாதி, மத அடையாளங்களுக்குப் பின்னால் ஒளிந்துகொள்ள முயல்வார்கள். ஆனால், ஜெகன் தான் எதிர்கொண்ட வலிகள் அனைத்தையும் கடந்து, ஒரு நேர்மறையான மனிதராக உருவாகியுள்ளார். சமூகத்தை வெளியிலிருந்து பார்க்காமல், அந்தச் சமூகமாகவே மாறி உள்ளிருந்து எழுதும் தனித்துவமான கலை இவருக்குக் கைவந்துள்ளது. ஈரானியத் திரைப்படங்களில் உள்ள ஆழம் இவருடைய கதைகளில் மிளிர்கிறது.”

கவிதா பாரதி:
“நான் சிறு வயதில் கவிதை புத்தகம் எழுதியபோது, படிக்கத் தெரியாத என் தந்தை அந்தப் புத்தகங்களை ஒரு பையில் எடுத்துக்கொண்டு, சைக்கிளில் சென்று தன் நண்பர்களுக்குப் பெருமையுடன் வழங்கினார். ஒரு படிக்கத் தெரியாத தந்தைக்கு, மகன் புத்தகம் எழுதியிருக்கிறான் என்பதே ஆகச்சிறந்த பெருமை. அந்த வகையில், இந்த மேடையில் எழுத்தாளரின் பெற்றோரை அழைத்து நூலினை வழங்கியதை விடச் சிறந்த கௌரவம் எதுவும் இருக்க முடியாது.
இன்று தமிழில் பேசுவதும் எழுதுவதும் பலரால் கேலிக்குரியதாகப் பார்க்கப்படுகிறது. ஆங்கிலம் கலந்த மொழிநடையே தற்காலத் தலைமுறையினரிடம் காணப்படுகிறது. வட்டார வழக்கு மொழியை இழப்பது என்பது ஒரு மொழியின் மிகப்பெரிய இழப்பாகும். இத்தகைய சூழலில், தம்பி ஜெகன் தனது வட்டார மொழியில் இக்கதைகளை எழுதியிருப்பது வரவேற்கத்தக்கது.
இத்தொகுப்பில் உள்ள ஒன்பது கதைகளும் ஒன்றோடொன்று தொடர்புடையதாக, ஒரு நாவலின் தொடர்ச்சியைப் போல அமைந்துள்ளன. எழுத்தாளனுக்கு மெய்யறிவை விட, சமூக நோக்கமும், பொறுப்புணர்வும், நேர்மையும் மிக முக்கியம். ஜெகன் ஒரு சிறந்த இயக்குநராக உருவாவதற்கான அனைத்துச் சான்றுகளும் இப்புத்தகத்தில் நிறைந்துள்ளன.”
இயக்குநர் சுப்பிரமணியா சிவா:
“கவிதா பாரதி தன் தந்தையைப் பற்றிக் கூறியது போல், எனக்கும் என் தாயாரின் நினைவு வருகிறது. எழுதப் படிக்கத் தெரியாத என் தாய், யாராவது எழுதக் கேட்பார்கள் என்ற எண்ணத்தில் கடந்த முப்பது வருடங்களாகத் தன் வெற்றிலைப் பையில் ஒரு பென்சிலை பத்திரமாக வைத்துள்ளார். இதுவரை யாரும் அவரிடம் எழுதக் கேட்கவில்லை என்றாலும், அந்தப் பென்சிலின் கதை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
ஜெகனின் இந்த நூலின் முன்னுரையை வாசித்தபோதே அவருடைய மனிதநேயமும் நன்றியுணர்வும் தெளிவாகப் புரிந்தது. தன் தாயாரை உடனிருந்து கவனித்துக்கொண்ட சுமதி மயினியையும், தன் எழுத்துக்குத் துணையாக இருக்கும் மனைவி மற்றும் பிள்ளைகளையும் அவர் நன்றியோடு குறிப்பிட்டுள்ளார்.
இதனைச் சிறுகதை தொகுப்பு என்பதை விட, அவர் சந்தித்த சாமானிய மனிதர்களின் அனுபவத் தொகுப்பு என்றே கூற வேண்டும். மனிதர்களின் அனுபவங்களை உள்வாங்கி, எதையும் மிகைப்படுத்தாமல், எளிய வட்டார வழக்கில் படைப்பாகத் தரும் எழுத்தாளனே சமுதாயத்திற்கு முக்கியமானவன் ஆகிறான்.”
இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா:
“’மை டியர் சிஸ்டர்’ என்ற திரைப்படத்திற்கு நான் இசையமைத்தபோதுதான் ஜெகனின் அறிமுகம் கிடைத்தது. புதிய பாடலாசிரியர் என்பதால் எனக்குத் தொடக்கத்தில் ஒரு சிறிய தயக்கம் இருந்தது. ஆனால், நான் கொடுத்த ஒரு சந்தத்திற்கு, அடுத்த பத்து நிமிடங்களிலேயே மிகச்சிறப்பான பாடலை எழுதிக் கொடுத்து என்னை வியப்பில் ஆழ்த்தினார்.
எல்லா படைப்பாளிகளுக்கும் பொதுவான ஒரு ஆன்மீக ரிதம் எங்களை இணைத்தது. ‘தாய்க்கிழவி’ பாடலைத் தொடர்ந்து, தற்போது ‘மக்கள் காவலன்’ திரைப்படத்திலும் அவர் பாடல்களை எழுதி வருகிறார். அவரிடம் எப்போதும் இருக்கும் நேர்மறை ஆற்றல் எனக்கு மிகவும் பிடிக்கும். இத்தொகுப்பில் உள்ள ‘அப்பா தீபாவளி’ என்ற கதை எளிமையான மனிதர்களைப் பற்றியது, மிகவும் ரசிக்கத்தக்கதாக இருந்தது.”
இயக்குநர் அமீர்:
“புத்தகங்களைப் பார்த்தாலே எனக்கு ஒரு பதற்றம் வரும். நான் இந்த மேடைக்கு வரக் காரணம் இப்புத்தகம் அல்ல, இதனை எழுதிய ஜெகன் என்ற மனிதர்தான். உடன்பிறந்த சகோதரி விழாவைத் தொகுத்து வழங்க, பெற்றோர் இருவரும் மேடையில் புத்தகத்தைப் பெற்றுக் கொள்ளும் இந்தத் தருணமே ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் அடைந்த ஆகச்சிறந்த வெற்றியாகும். திரைத்துறையில் 25 ஆண்டுகளைக் கடந்தும், எனக்கு இதுபோன்ற ஒரு குடும்பத்துடனான வெற்றி விழா அமைந்ததில்லை.
திருநெல்வேலி பூலாங்குளம் கிராமத்தில், ஆறாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு, பல்வேறு இன்னல்களுக்கு இடையே வளர்ந்தவர் ஜெகன். காஞ்சிபுரத்தில் காயிலாங்கடை வியாபாரம், கேரளாவில் மண் சுமக்கும் வேலை, திருச்சியில் பாத்திர வியாபாரம் எனப் பல வேலைகளைச் செய்துள்ளார். பழைய புத்தகக் கடைகளில் எடைக்கு வரும் புத்தகங்களை வாசித்துப் பெற்ற பழக்கமே இன்று அவரை இந்த உயரத்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.
சென்னைக்கு வந்து, ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் அலுவலக உதவியாளராகச் சேர்ந்து, பின்னர் நாகேஷ் திரையரங்கம் திரைப்படத்தில் கடைசி உதவி இயக்குநராகவும், காசாளராகவும் பணியாற்றி, இன்று சிறந்த பாடலாசிரியராகவும், எழுத்தாளராகவும் உயர்ந்துள்ளார். இத்தகைய எளிய மனிதர்களைச் சமூகத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. ஜெகனின் சிந்தனைக்கும் வட்டாரக் கதைகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.”

மு. ஜெகன் கவிராஜ் (ஏற்புரை):
“கடந்த 2014 ஆம் ஆண்டு, மிகவும் துயரமான காலகட்டத்தில், ‘நம்மை ரசிக்க யாரும் இல்லையே’ என்று மறைந்த வைகுண்டர் அய்யா வழி தேவதாஸ் அய்யாவிடம் வருத்தப்பட்டேன். அப்போது அவர் அய்யாவின் வாக்குகளைக் கூறி எனக்கு ஆறுதல் தந்தார். அந்த வாக்குதான் இன்று இந்த மேடையைச் சாத்தியமாக்கியுள்ளது.
நாங்கள் அனைவரும் எங்கள் அக்காவின் வளர்ப்பில் வளர்ந்தவர்கள். தவறான சூழல்கள் வரும்போதெல்லாம் அக்காவின் அறிவுரைகளே எங்களை நல்வழிப்படுத்தின. இன்று என் அக்கா இப்புத்தக வெளியீட்டு விழாவைத் தொகுத்து வழங்குவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.
‘பணம், உணவு, தண்ணீர் என எதுவும் இல்லாதபோதும், பிறரிடம் பேசும் நான்கு நல்ல வார்த்தைகளும் தர்மமே’ என்ற நபிகள் நாயகத்தின் போதனையும், ‘சிறந்த பேச்சையே பேசு’ என்ற அய்யா வைகுண்டரின் நெறியும் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டன. அதனால்தான் என் கதைகளில் எதிர்மறைக் கதாபாத்திரங்களைப் படைக்க எனக்கு மனம் வருவதில்லை.
அமீர் சாருக்காக நான் எழுதிய ஒரு பாடல் வரி அவருக்கே நூறு விழுக்காடு பொருந்தும். தன் மனதில் தோன்றுவதைத் துணிச்சலாகப் பேசும் சிறந்த மனிதர் அவர். விஜய் அண்ணனின் அரசியல் வளர்ச்சியை அவர் அன்றே துல்லியமாகக் கணித்துக் கூறினார். அதேபோல், இசையமைப்பாளர் நிவாஸ் பிரசன்னா அவர்களின் வருகைக்குப் பிறகுதான் என் வாழ்வில் பொருளாதார மாற்றமும், பாடலாசிரியருக்கான அங்கீகாரமும் கிடைத்தது. அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.”

