டீன்ஸ்: விமர்சனம்

டீன்ஸ்: விமர்சனம்

வழக்கம் போல் வித்தியாசமான படத்தை அளித்துள்ள பார்த்திபன், வழக்கத்துக்கு மாறாக வித்தியாசமில்லாத நடிப்பை அளித்துள்ளார்.

இரண்டுமே ஈர்க்கின்றன.

பதின் வயது சிறுவர்கள்,சாகச முயற்சியாக பேயைத் தேடி பயணிக்கிறார்கள். வழியில் அத்துவான காட்டில், அவர்களைச் சுற்றி பல அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கின்றன. ஒவ்வொருவராக காணாமல் போகிறார்கள்.

மாயாஜால நிகழ்வுகளுக்கு என்ன காரணம், சிறுவர்கள் தப்பினார்களா, … என்பதுதான் கதை.பதின் வயது சிறுவர்கள் பதிமூன்று பேரும் சிறப்பாக நடித்து உள்ளனர். சாராவாக வரும் கிருத்திகாவும், அபிலாக வரும் பிரங்கின்ஸ்டனும் தனித்துவமாகத் தெரிகிறார்கள்.

இரண்டாம் பாதியில்தான் வருகிறார் பார்த்திபன். ஏற்றுள்ள விஞ்ஞானி கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை கச்சிதமாக அளித்து உள்ளார். வழக்கமான எகடு முகடு பேச்சு.. உடல் மொழி ஏதுமில்லை. சிறப்பு.

இரு காட்சிகளில் மட்டும் யோகிபுபாபு வருகிறார். சிரிக்கவைக்கிறார்.இமான் இசையில் பாடல்கள் ரசிக்கவைக்கின்றன. அதிலும் அறிமுக பாடல், வானமே.. பாடல் இரண்டும் கூடுதலாய் ஈர்க்கின்றன. பின்னணி இசையும் ஒரு கதபாத்திரம் போல் கூடவே ஓடி வருகிறது. சிறப்பு.

பரந்த புல்வெளி, பெருங் கிணறு, மரஙகள், அனாமத்தான சுடுகாடு, சிறு கோயில்… இதுதான் படப்பிடிப்பு தளங்கள். ஆனாலும் இவற்றை வெவ்வேறு கோணங்களில் ரசிக்க வைக்கும்படி அளித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் கவாமிக் யூ.ஆரி.

பச்சைப் புல்வெளிகள், மரங்கள், புதர்கள் என இருக்கின்ற இடத்தில் வெவ்வேறு கோணங்களைக் காட்டிச் சமாளித்திருக்கிறார்

திரிசாரணம், வேற்றுலக உயிரி, விண்வெளி கப்படல் என வரைகலையில் மாயாஜாலம் காண்பிக்க முயன்று இருக்கிறார்கள். பல நூறு ஆடு, மாடு, பறவைகள் வட்டமாக சுற்றி வரும் காட்சியும் கவனத்தை ஈர்க்கிறது. சிறப்பான முயற்சி.

படத்தலைப்பும், பங்கேற்றவர்கள் பெயரும் வரும் ஆரம்ப காட்சியிலேயே நம்மை கதைக்குள் இழுத்துவிடுகிறார் பார்த்திபன். அந்த சிறுவர்கள் பெயரை வைத்து, அவர்களது குணங்களையும் விளக்கி சிறப்பான பாடலை அளித்து இருக்கிறார். ( திரையுலகில் முதன் முதலாக இணை பாடலாசிரியர் என்று புதிதாக அறிமுகம் செய்து இருக்கிறார்.)

துவக்கத்தில் சிறுவர்களின் வயதுக்கு மீறிய பேச்சு பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். ஆனால் எதார்த்தம் இதுதானே!

அதே நேரம், அவர்களது பேச்சில் ஆங்கிலத்தை கொஞ்சம் குறைத்து இருக்கலாம். ஒரு வேளை ஆங்கிலத்தில் படத்தை மொழி பெயர்த்தால் எளிதாக இருக்கும் என நினைத்துவிட்டார்களோ!

படத்தின் முதல் பாதி அடுத்து என்ன, சிறுவர்களுக்கு என்ன ஆகும் என்கிற திகிலை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. அதிலும் மலைப்பாம்பின் வயிற்றை சிறுவர்கள் கிழிப்பது கூடுதல் திகில்.

முதல் பாதியில் வரும் அமானுஷ்ய சம்பவங்களுக்கு, இரண்டாம் பாதியில் அறிவியல் ரீதியாக பதில் தந்திருக்கிறார் பார்த்திபன். அட போட வைக்கிறது!

தனது சட்டையின் முதுகில் ‘நாசா’ என்று (அமெரிக்க) பெயர் பதிந்திருக்கிறார் விஞ்ஞானி பார்த்திபன்.. அது இஸ்ரோ என்று இருந்திருக்கலாமோ என தோன்றுகிறது.

விடலை சிறுவர்கள் கள் குடிப்பது, கையை அறுத்துக்கொள்வது, ‘காதல்’ செய்வது (பாடல் வேறு!).. இவற்றை தவிர்த்து இருக்கலாம்.

கடவுள் – பக்தி காட்சிளையும் தவிர்த்து இருக்கலாம் அல்லது நீளத்தையாவது குறைக்கலாம். ( அதே நேரம், ‘கடவுள் பிரீக்குவன்சி தெரியலை’ என்று முத்திரை வசனமும் பேசியிருக்கிறார் பார்த்திபன்)

இந்தப் படத்துக்கும் இந்தியன் 2 படத்துக்கும் சில ஒற்றுமைகள் ஆச்சரியப்படுத்துகின்றன.

இந்தியன் தாத்தா போலவே, வயதான தோற்றத்தில் வருகிறார் விஞ்ஞானி பார்த்திபன்
ஒரு காட்சியில் தனக்கு 150 வயது என்பது போல் அவர் சொல்ல… சிறுவர்கள் அதிர்ச்சியாக.. பிறகு விளக்கம் கொடுக்கிறார்…

அடுத்த ஒற்றும், இந்த படத்தின் அடுத்த பாகமும் வெளியாக இருக்கிறது.

பார்த்திபனையும், சிறுவர்களையும் ரசிக்க குடும்பத்துடன் திரையரங்குக்கு செல்லலாம்.