மலேசியா: தவெக கொடி பிடித்த ரசிகருக்கு கசையடி?
மலேசியாவில் நடைபெற்ற ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில், அரசியல் பேசக்கூடாது, கட்சிக் கொடி எடுத்துவரக்கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை அந்நாட்டு அரசு விதித்தது.
அதை ஏற்று விஜய், அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால், விஜய்யின் தாயாரும் பாடகியுமான ஷோபா, “கோடம்பாக்கம் ஏரியா ஓட்டுக்கேட்டு வாரியா..” என்கிற அரசியல் (!) பாடலை பாடி தீயை பற்றவைத்தார்.
முன்னதாக, விஜய் மேடைக்கு வந்ததும் ரசிகர்கள் சிலர், ‘டி.வி.கே., டி.வி.கே..’ என கோஷம் எழுப்பினர். அதற்கு “இங்கே வேணாம்” என விஜய் சைகை காண்பித்து அவர்களை கட்டுப்படுத்தினார். அதேபோல் விஜய் பேச ஆரம்பித்ததும் மீண்டும் கத்தினர். அப்போதும் “வேணாம்பா” என்று கூறி விஜய் தனது ரசிகர்களை கட்டுப்படுத்தினார்.
தொடர்ந்து பாடகர்கள் விஜய் நடித்த படத்தில் இருந்து பாடல்களை பாட ஆரம்பித்தனர். அப்போது ஒரு ரசிகர், ஆர்வத்தில் தவெக கொடியை உயர்த்திக்காட்டினார். உடனே அந்த நபரை பாய்ந்து பிடித்து கைது செய்தனர் காவல்துறையினர்.
அந்த நபருக்கு என்ன தண்டனை கிடைக்கலாம்?
மலேசியாவில், “தேசியச் சின்னங்கள் (காட்சிப்படுத்துதலைக் கட்டுப்படுத்துதல்) சட்டம் 1949 (National Emblems (Control of Display) Act 1949)” என்ற சட்டம் உள்ளது.
இந்த சட்டத்தின் பிரிவு 3-ன் படி, பொது இடங்களில் அல்லது பள்ளிகளில் வெளிநாட்டுத் தேசியச் சின்னங்களையோ (Flags), ஒரு நாட்டின் அரசியல் இயக்கத்தைக் குறிக்கும் கொடிகளையோ அனுமதியின்றி காட்சிப்படுத்துவது குற்றமாகும்.
இந்தச் சட்டத்தின் பிரிவு 8-ன் கீழ் தண்டனை வழங்கப்படுகிறது. இதன்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால்: 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அல்லது 500 மலேசிய ரிங்கிட் (சுமார் 11 ஆயிரம் இந்திய ரூபாய்0) வரை அபராதம் விதிக்கப்படலாம்.
அல்லது சிறை மற்றும் அபராதம் இரண்டும் சேர்த்து வழங்கப்படலாம்.
சிலர், “மலேசியாவில் கசையடி தண்டனை கொடுக்கப்படுவது உண்டே.. இதற்கும் அந்த தண்டனை உண்டா” என்று கேட்கலாம்.
மலேசியாவில் கசையடி தண்டனை என்பது பொதுவாகக் கொலை முயற்சி, கற்பழிப்பு, போதைப்பொருள் கடத்தல், கொள்ளை அல்லது முறையான ஆவணங்கள் இன்றி மலேசியாவிற்குள் நுழைதல் போன்ற மிகக் கடுமையான குற்றங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ஆகவே, கொடியை அசைத்ததற்கு கசையடி தண்டனை கிடையாது.
அதே நேரம், இன்னொரு முக்கியமான விசயத்தைக் கவனிக்க வேண்டும். மலேசியாவில் ‘ஜலூர் கெமிலாங்’ (Jalur Gemilang) எனப்படும் அந்நாட்டுத் தேசியக் கொடிக்கு மட்டுமே முதலிடம் அளிக்கப்பட வேண்டும் என்பதில் அந்நாட்டு அரசு மிகக் கண்டிப்புடன் உள்ளது. சமீபகாலமாக சீனா மற்றும் பிற நாட்டு கொடிகளைப் பொது இடங்களில் ஏந்தியவர்கள் மீதும் இதே சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
– டி.வி.சோமு

