சினிமாவில் நடிக்கிறார் சாட்டை துரைமுருகன்! என்ன ரோல் தெரியுமா?
மிக மிக அவசரம், மாநாடு படங்களின் வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா கிளி’. கதை, வசனம், பாடல்கள், இசையமைப்பு என நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையாவின் கைவண்ணத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் மூலம் அவரது மகனான நடிகர் உமாபதி ராமையா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். தம்பி ராமையா இந்த படத்தில் கதாயின் நாயகனாக நடிக்க அவரது வெற்றி கூட்டணியாக வலம் வரும் நடிகர் சமுத்திரக்கனி இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்வேதா, சுபா, பிரவீன், முபாஸிர், இயக்குநர் மூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வரும் டிசம்பர் 13-ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இதனை தொடர்ந்து இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் மற்றும் நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்வில் நா.த.க. பிரமுகர் சாட்டை துரைமுருகனும் இப்படத்தில் நடிக்கிறார்.
அவர் பேசும் போது, “சமூக நோக்கம் இல்லாதவர்கள் படைப்பாளிகளாக இருக்க முடியாது. சமூகத்தில் நடக்கும் அவலங்களை ஏதோ ஒரு வடிவத்தில் மக்களுக்கு கடத்த வேண்டும். அப்படிப்பட்டவர் தான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இந்த களத்தில் நிற்பதற்கு கருத்தியல் சார்பாக எத்தனையோ இடையூறுகள் இருந்தாலும் அதில் உறுதியாக நின்று படங்களை தயாரித்து வருகிறார். தம்பி ராமையா அனைவரையும் மனதில் இருந்து வெளிப்படையாக பாராட்டுபவர். பல வழக்குகளை சந்தித்து நீதிபதிகளிடமிருந்து ஜாமீன் கிடைக்காமல் திண்டாட்டினேன்.. ஆனால் இந்த படத்தில் நீயே நீதிபதியாக நடி என்று ஒரு கதாபாத்திரத்தை கொடுத்து விட்டார் எனக்கு சாட்டை என்கிற பெயர் கிடைப்பதற்கு முக்கிய காரணமே சமுத்திரக்கனி மற்றும் தம்பி ராமையா இருவரும் தான். அவர்கள் கூட்டலில் வெளியான சாட்டை படம் பார்த்த பிறகு தான் என்னுடைய யூட்யூப் சேனலுக்கு சாட்டை என பெயர் வைத்தேன். இந்தப்படம் பார்ப்பவர்களின் உடலையும் உள்ளத்தையும் நடுங்க வைக்கும். தமிழ் சமூகத்தில் நிச்சயம் அதிர்வுகளை ஏற்படுத்தும்” என்றார்.