‘ராஜாகிளி’யில் சிம்பு போல நடனமாடும் தம்பி ராமையா!: இயக்குநர் தகவல்!
மிக மிக அவசரம், மாநாடு படங்களின் வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா கிளி’. கதை, வசனம், பாடல்கள், இசையமைப்பு என நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையாவின் கைவண்ணத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் மூலம் அவரது மகனான நடிகர் உமாபதி ராமையா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். தம்பி ராமையா இந்த படத்தில் கதாயின் நாயகனாக நடிக்க அவரது வெற்றி கூட்டணியாக வலம் வரும் நடிகர் சமுத்திரக்கனி இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்வேதா, சுபா, பிரவீன், முபாஸிர், இயக்குநர் மூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வரும் டிசம்பர் 13-ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் மற்றும் நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில் இயக்குநர் உமாபதி ராமையா பேசும்போது, “இந்த படத்திற்கு இயக்குநராக நான் வந்ததே ஒரு விபத்து என்று தான் சொல்லலாம். சுரேஷ் காமாட்சி சாரை பொருத்தவரை திறமையானவர்களை சரியாக தேர்ந்தெடுப்பார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற ஆரம்பித்த சமயத்தில் தான் சுரேஷ் காமாட்சி சார் என்னை அழைத்து தன்னம்பிக்கை அளித்து இயக்குநராக ஆக்கினார். இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்குமே எனது தந்தை தனித்தனியாக ஒரு பாடி லாங்குவேஜை உருவாக்கி கொடுத்து விட்டார். அதனால் எனக்கு படப்பிடிப்பில் எளிதாக இருந்தது. கிட்டத்தட்ட 80 சதவீதம் அவர் பண்ணிவிட்டார். ஆனால் திரைக்கதையில் அப்பா, சுரேஷ் காமாட்சி இருவரும் எனக்கு சுதந்திரம் கொடுத்தார்கள்.
சமுத்திரக்கனி அண்ணனுக்கும் எனக்கும் இருப்பது ரொம்ப வித்தியாசமான ஒரு பிணைப்பு. என் அப்பா அவரை தம்பி என்று அழைப்பார் நான் அவரை அண்ணன் என்று அழைப்பேன். என் திருமணம் முதற்கொண்டு எல்லா நிகழ்ச்சிகளிலும் அவர் எனக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார். கிளைமாக்ஸ்சில் ஒரு உணர்ச்சிப்பூர்வமான காட்சியை படமாக்கிய போது மீண்டும் ஒரு டேக் எடுக்க கேட்கலாமா என தயங்கினேன். ஆனால் சமுத்திரக்கனி அண்ணன் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மீண்டும் அனைவரையும் தயார்படுத்தி அதை காட்சியை அற்புதமாக நடித்துக் கொடுத்தார். மற்ற நடிகர்கள் நடிப்பதற்கான வாய்ப்பை அழகாக ஏற்படுத்திக் கொடுப்பார்.
தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருமே ஒரு புது இயக்குநராக எனக்கு ரொம்பவே ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இந்த படத்தில் அப்பாவை வித்தியாசமான மனிதராக பார்ப்பீர்கள். எல்லோருக்கும் அப்பாதான் ஹீரோ என்பார்கள். என் படத்திலேயே அப்பாதான் ஹீரோ எனும் போது அவரை வைத்து கொஞ்சம் ஏதாவது புதுசாக செய்ய ஆசைப்படுவது இயல்பு தானே. சின்ன முள்ளு பாடலில் என் தந்தைக்கு ஒஸ்தியில். சிம்பு ஆடிய நடன அசைவுகளை தான் முயற்சி செய்தோம். ஆனால் அவர் புதிதாக ஒன்று செய்தார். காலை விரித்து நடனம் ஆடுவதற்காக தரையில் எண்ணெய் எல்லாம் ஊற்றி அவரை ஆட வைத்தோம். அடுத்து அவரே எங்கே எண்ணெய் கொண்டு வாருங்கள் எனக் கேட்க ஆரம்பித்து விட்டார். நல்ல படம் கொடுத்து இருக்கிறோம். இதயத்தில் இருந்து எடுத்துச் செல்வது போல ஒரு நல்ல கருத்தையும் இதில் சொல்லி இருக்கிறோம்” என்று கூறினார்.