மெய்யழகன்: திரை விமர்சனம்

மெய்யழகன்: திரை விமர்சனம்

96 படத்தை இயக்கி கவனம் பெற்ற பிரேம் குமார் இயக்கத்தில், கார்த்தி-அரவிந்த் சாமி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் மெய்யழகன். இப்படத்தின் பாடல், டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன. இந் நிலையில், படம் எப்படி இருக்கிறது என்பதை இங்கு பார்ப்போம்.

ஒன்லைன்:

தன் மீது ஒருவர் அதீத பாசம் காட்ட, அந்த பாச அழுத்தத்தைத் தாங்காம் அந்த மனிதன் என்ன செய்கிறான் என்பதே ஒன்லைன்.

கதை:

அருள்மொழி வர்மன் (அரவிந்த் சாமி), பெற்றோருடன் தஞ்சையில் வசிக்கிறார். சொத்துப் பிரச்சினை காரணமாக, வாழ்ந்த வீடு கைவிட்டுப் போகிறது. உயிருக்கு உயிராக நேசித்த வீடு, ஊரைவிட்டு குடும்பம் சென்னைக்கு குடிபெயர்கிறது.

தன் தங்கையின் ( சித்தி மகள்) திருமணத்திற்காக, 22 வருடங்கள் கழித்து சொந்த ஊருக்கு வர நேர்கிறது. அங்கு, “அத்தான் அத்தான்” என அழைத்து, அவரிடம் அதீத பாசம் காட்டுகிறான் ஒரு இளைஞர். (கார்த்தி).

எதிர்பாராத விதமாக, ஊரில் ஒரு நாள் தங்க வேண்டி வருகிறது. அந்த இளைஞன், தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று அன்பாக உபசரிக்கிறான். அங்கு குடித்து அரட்டை அடிக்கிறார்கள்.

தன்னிடம் இப்படி அன்பு காட்டும் ஒருவனிடம் யாரென்று தெரியாமல் பழகுகிறோமே.. மறந்துவிட்டோமே என மனம் குமைகிறார் அருள்மொழி வர்மன்.

குற்ற உணர்ச்சியில், யாரிடமும் சொல்லாமல் ஊருக்குத் திரும்புகிறார் அருள்மொழி வர்மன்.

அந்த இளைஞனை அருளுக்கு நினைவு வந்ததா.. அவன் பெயர் தெரிய வந்ததா என்பதே உணர்ச்சிகரமான கதை.

ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜூ

நடிப்பு:

கார்த்தி அசத்தி இருக்கிறார். அரவிந்த் சாமியைப் பார்த்தவுடனேயே, அவரது கண்களைப் பொத்தி, “யாருன்னு சொல்லுங்க பாப்போம்” என்று சொல்லி, “அத்தான் அத்தான்” என்று ஒட்டிக்கொள்ளு்போதே நமது மனதிலும் ஒட்டிக்கொள்கிறார்.

உணர்ச்சிகரமாக நினைவுகளைப் பகிர்ந்துகொள்வது, காளையிடம்கூட காட்டும் பாசம், தியாகிகளுக்கு அளிக்கும் மரியாதை, ராஜ்கிரண் உள்ளிட்டவரிடம் செல்ல விளையாட்டு… நடிப்பில் அதகளம் செய்து இருக்கிறார் கார்த்தி.

அரவிந்த் சுவாமியும், அருள்மொழி வர்மன் என்கிற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். கார்த்தி யார் என்று தெரியாமல் யோசிப்பது, அவரைத் தவிர்க்க நினைப்பது, பிறகு அவரது அன்பை உணர்ந்து நேசிக்க ஆரம்பிப்பது, ஜாக்சனின் ‘மூன் வாக்’ நடனமாடுவது, அன்புகாட்டுபவனின் பெயரைக்கூட மறந்துவிட்டோமே என உடைந்து அழுவது.. அற்புதமான நடிப்பு!

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா

ராஜ்கிரண், ஜெயப்பிரகாஷ், ஸ்ரீதிவ்யா, தேவதர்ஷினி, , ஸ்ரீரஞ்சனி, இளவரசு, கருணாகரன் உள்ளிட்ட அனைவருமே சிறப்பாக நடித்து உள்ளனர்.

தொழில் நுட்பம்:

கோவிந்த் வசந்தா இசையில் பாடல்கள் அருமை. ஊரின் நேசத்தை, மனிதர்கள் மீதான அன்பை வெளிப்படுத்தும் இசை. கமல்ஹாசன் பாடிய “போய்வா..கலங்காதே” பாடல் மனதுக்குள் ஊடுருவுகிறது. அதே போல உணர்ச்சியூட்டும் அதிரடியான வெறி பாடலும் அருமை. பின்னணி இசையும் சிறப்பு. படத்தின் ஒரு கதாபாத்திரமாகவே, ஓடி வருகிறது.

மகேந்திரன் ஜெயராஜுவின் ஒளிப்பதிவு சிறப்பு. தஞ்சை மண்ணை கண் முன் நிறுத்துகிறது. வயல் வெளிகள், தெருக்கள் என நிஜமாகவே தஞ்சை சென்று வந்த உணர்வைத் தருகிறது. இரவு நேரக் காட்சிகளும் ஈர்க்கின்றன.

ஆர். கோவிந்தராஜின் எடிட்டிங் படத்துக்கு பலம்.

இயக்கம்:

96 படத்தை இயக்கி கவனத்தை ஈர்த்த, பிரேம் குமாரின் அடுத்த திரைப்படம்.

இயக்குநர் பிரேம் குமார்

பிறந்து வளர்ந்த ஊரின் நினைவுகள், ஊர்ப் பாசம், சொந்தங்களுக்குகள் சொத்து பிரச்சனையால் வரும் ஆத்திரம், விட்டுப்போன சொந்தங்களை திரும்ப பார்க்கும் போது வரும் சங்கடம், சங்கடத்தைத் தாண்டி மகிழ்ச்சி.. என வாழ்க்கையின் பல கூறுகளை ரத்தமும் சதையுமாக உணர்த்தி இருக்கிறார் இயக்குநர்.

சிறு கதாபாத்திரங்கள்கூட மனதில் பதிகின்றன. உறவுகளுக்குள் மட்டுமல்ல.. அதற்கு வெளியிலும் மனிதர்கள் காண்பிக்கும் அன்பினை காட்சிகளின் வழியே நம் மனதினில் புகுத்திவிட்டார். உதாரணமாக, கார்த்தி – இளவரசு காட்சிகளைச் சொல்லலாம்.

அன்புகாட்டும் மனிதர்கள் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும்!