“நித்யானந்தா நேரில் வரவேண்டும்!”: நீதிபதி அதிரடி!

“நித்யானந்தா நேரில் வரவேண்டும்!”: நீதிபதி அதிரடி!

நித்தியானந்தா சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில், அவரை நேரடியாக ஆஜராகம்படி அதிரடியாக தெரிவித்துள்ளார், உயர் நீதிமன்ற நீதிபதி எம். தண்டபாணி.

திருவாரூர் மாவட்டத்தில்  உள்ள வேதாரண்யம் ஸ்ரீ போ.கா.சாதுக்கள் மடம் உள்ளிட்ட நான்கு மடங்களுக்கு நித்தியானந்தாவை மடாதிபதியாகநியமித்து, மடாதிபதி ஆத்மானந்தா அறிவித்தார். இதுதொடர்பாக நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், பக்தர் ஒருவர் இது குறித்து, அறநிலையத்துறையிடம் புகார் அளித்தார். இதையடுத்து, இந்த நான்கு மடங்களையும் நிர்வகிக்க தக்காரை நியமித்து இந்துசமய அறநிலையத்துறை உத்தரவிட்டது.

இதை எதிர்த்து நித்யானந்தா சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நித்தியானந்தாவால், பொது அதிகாரம் வழங்கப்பட்ட நித்யா கோபிகா ஆனந்த் என்ற உமாதேவி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு, நீதிபதி எம். தண்டபாணி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “உமாதேவிக்கு வழங்கப்பட்டுள்ள பொது அதிகார பத்திரத்தின் மீது சந்தேகம் உள்ளது. எனவே, அதுதொடர்பாக நித்யானந்தாவிடம் விசாரணை நடத்த வேண்டும். எனவே, அவரை இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்துங்கள்” என கூறினார்.

அதற்கு மனுதாரர் தரப்பில், “நித்யானந்தா தற்போது இந்தியாவில் இல்லை. மேலும், அவர் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியும் அல்ல” என்று சொல்லப்பட்டது.

அதற்கு நீதிபதி தண்டபாணி, “இந்த வழக்கே நித்யானந்தாவுக்காகத்தான் தொடரப்பட்டுள்ளது எனும்போது. அவர் எங்கு இருக்கிறார், எப்படி இருக்கிறார் என்பது நீதிமன்றத்துக்கு கட்டாயம் தெரிய வேண்டும். ஒருவேளை அவரால் நேரில் ஆஜராக முடியவில்லை என்றால் காணொலி காட்சி மூலமாக நீதிமன்றத்தில் ஆஜராகச் சொல்லுங்கள்” என்றார்.

இதற்கும் மனுதாரர் தரப்பில், “அவரால் காணொலி காட்சி மூலமாகக்கூட ஆஜராக இயலாது” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்களது மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

மேலும், “நித்யானந்தாவின் ஆன்மிக உரைகள் சிறப்பானவை என்றும், அவரது ‘கதவைத்திற காற்று வரட்டும்’என்ற வரிகள் ரொம்பப் பிடிக்கும். அந்த வார்த்தைகளில் ஆழ்ந்த அர்த்தங்கள் உள்ளன. காஞ்சி பெரியவர் கூறியதுபோல சன்னியாசி, சன்னியாசியாகவே இருக்க வேண்டும்” என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில் நீதிபதியின் உத்தரவை கவனிக்காமல், அவர் கருத்தாக தெரிவித்த, “நித்யானந்தாவின் ஆன்மிக உரைகள் சிறப்பானவை என்றும், அவரது ‘கதவைத்திற காற்று வரட்டும்’என்ற வரிகள் ரொம்பப் பிடிக்கும்” என்ற வார்த்தைகளை தலைப்பாகக் கொண்டு சில ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.

 

Related Posts