மெட்ராஸ் முதலை வங்கி 50!: முதலைகளைக் காக்க 15 ஆயிரம் கி.மீ. பயணம்!

மெட்ராஸ் முதலை வங்கி 50!: முதலைகளைக் காக்க 15 ஆயிரம் கி.மீ. பயணம்!

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தனக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்துள்ள சென்னை மெட்ராஸ் முதலை வங்கி, தனது ஐம்பதாவது ஆண்டில் கம்பீரமாக அடியெடுத்து வைக்கிறது!

கடந்த நாற்பத்தொன்பது ஆண்டுகளாக ஊர்வன உயிரினங்களைப் பாதுகாத்து, பராமரித்து, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை விதைத்து வரும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், இதன் நிறுவனர்களான பத்மஸ்ரீ ரோமுலஸ் விட்டேக்கர் மற்றும் சாய் விட்டேக்கர் ஆகியோரின் அளப்பரிய சேவைக்கு மனமார்ந்த வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.இந்த பொன்விழா ஆண்டை முன்னிட்டு மூன்று அட்டகாசமான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. வரும் ஆகஸ்ட் மாதம் முதல் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை, ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது புதன்கிழமையும் அனைத்துப் பார்வையாளர்களுக்கும் கட்டணமில்லா இலவச அனுமதி வழங்கப்படவுள்ளது! அதுமட்டுமன்றி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குச் சிறப்புக் கட்டணச் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன் உச்சகட்டமாக, மெட்ராஸ் முதலை வங்கியும் ‘தி ரெப்டைல் கன்சர்வென்சி அலையன்ஸ்’ அமைப்பும் இணைந்து ‘Save The Reptiles’ என்ற பிரம்மாண்ட நாடு தழுவிய விழிப்புணர்வுப் பயணத்தைத் தொடங்கியுள்ளன.

நான்கு மாத காலம் நடைபெறவுள்ள இந்தப் பயணம், இருபத்திரண்டு மாநிலங்கள் வழியாகப் பதினைந்தாயிரம் கிலோமீட்டர் தொலைவைக் கடக்கவுள்ளது. வழியெங்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் வன உயிரின ஆர்வலர்களைச் சந்தித்து, ஊர்வன உயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் இயற்கையின் சமநிலை குறித்த விழிப்புணர்வை இந்தக்குழு ஏற்படுத்தவுள்ளது.

ஊடகங்களின் முன்னிலையில் தொடங்கப்பட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் நாடு முழுவதும் சென்றடைய ஊடக நண்பர்களின் ஆதரவும் கோரப்பட்டுள்ளது. ஊர்வன பாதுகாப்பில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள மெட்ராஸ் முதலை வங்கியின் இந்தப் பயணம் மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்!

Related Posts