அதிசய சிறுமி ரூஹி! குடியரசுத் துணைத் தலைவருடன் சந்திப்பு!
கோழிக்கோட்டைச் சேர்ந்த ஏழு வயது சுற்றுச்சூழல் ஆர்வலர் ரூஹி மொஹஸ்ஸாப், திருவனந்தபுரத்தில் உள்ள லோக் பவனில் இந்திய குடியரசுத் துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்து உரையாடினார்.
யார் இந்த ரூஹி?
காகிதங்களை மறுசுழற்சி செய்ய ஊக்குவிக்கும் ‘ரூஹியின் பேப்பர் பேங்க்’, மரக்கன்றுகளை வளர்க்கும் ‘ட்ரீ பேங்க் நர்சரிஸ்’ போன்ற திட்டங்களை உருவாக்கியுள்ளார்.
பள்ளிகள் மற்றும் குழந்தைகள் மத்தியில் காகிதச் சேமிப்பு, மறுசுழற்சி மற்றும் மரங்களைப் பாதுகாத்தல் குறித்த செய்தியைக் கொண்டு சேர்க்கிறார்.
‘தி சில்ட்ரன் மூவ்மெண்ட் பார் கிளைமேட் கம்பேசன் பவுண்டேஷன்’ அமைப்பின் மூலம் காலநிலை விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மிக இளம் வயதில் உரையாற்றியவர் இவர்!
இவரைப் போல வேறு யாரும் உண்டா?
இந்தியாவில் மணிப்பூரைச் சேர்ந்த லிசிப்பிரியா காங்கூஜம், 2018-இல் தனது 6 வது வயதில் காலநிலை சார்ந்த விழிப்புணர்வுப் பணிகளைத் தொடங்கினார். தொடர்ந்து சர்வதேச மற்றும் ஐ.நா. மாநாடுகளில் பங்கேற்று உலகளவில் அறியப்பட்டார்.
அதே போல, ஸ்வீடனின் கிரேட்டா துன்பெர்க் தனது 8 ஆம் வயதில் காலநிலை மாற்றம் குறித்து அறியத் தொடங்கி, 15 வயதில்தான் உலகளவில் அறியப்பட்ட வீரியமிக்க போராட்டங்களை முன்னெடுத்தார்.
இந்த வரிசையில்தான் சிறுமி ரூஹியும், காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த தனது பல்வேறு பணிகளைச் செய்து வருகிறார்.
இந்த நிலையில் குடியரசுத் துணைத் தலைவரிடம் விரிவாகப் பகிர்ந்துகொண்டார்.
இந்தச் சந்திப்பின் போது, மரங்களைப் பாதுகாப்பது, காகிதச் சேமிப்பு, மறுசுழற்சி மற்றும் குழந்தைகளின் சுற்றுச்சூழல் பங்களிப்பு ஆகிய தலைப்புகளில் ரூஹியின் செயல்பாடுகளைக் குடியரசுத் துணைத் தலைவர் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டறிந்தார். மேலும், பள்ளிகள் மற்றும் குழந்தைகளிடமிருந்து பயன்படுத்திய காகிதங்களைச் சேகரித்து மறுசுழற்சி செய்வதற்காகத் தான் உருவாக்கியுள்ள ‘ரூஹியின் பேப்பர் பேங்க்’ திட்டம் குறித்தும் ரூஹி அவரிடம் விளக்கிப் பேசினார்.
ரூஹியின் முயற்சியைப் பாராட்டிய குடியரசுத் துணைத் தலைவர், அவருக்குச் சாக்லேட்டுகளை வழங்கி வாழ்த்தினார். அத்துடன், “மனிதகுலத்தின் மீதான உங்களது அக்கறை அசாதாரணமானது. இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும்! எப்போதும் நல்ல சிந்தனையுடன் தொடர்ந்து செயல்படுங்கள்” என்று தனது கையெழுத்திட்ட பாராட்டுச் செய்தியையும் பதிவு செய்து கொடுத்தார். ரூஹி பரிசளித்த மறுசுழற்சி காகிதக் குறிப்பேடு, செடித் தொட்டி மற்றும் நேபாள வெள்ளப் பாதிப்பை மையமாகக் கொண்டு அவர் வரைந்த ஓவியம் ஆகியவற்றை அன்புடன் பெற்றுக் கொண்டார்.
நேபாள வெள்ளப் பாதிப்புகளால் மனதளவில் பாதிக்கப்பட்ட ரூஹி, அங்குள்ள குழந்தைகளுக்கு நேரடியாகச் சென்று ஆதரவளிக்கவும், மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளார். ‘தி சில்ட்ரன் மூவ்மெண்ட் பார் கிளைமேட் கம்பேசன் பவுண்டேஷன்’ மூலம் மரம் மற்றும் காகித வங்கிகளை அமைத்து, உலக அளவில் நூற்றுத் தொண்ணூற்று ஐந்து நாடுகளைச் சேர்ந்த குழந்தைகளை ஒன்றுதிரட்டி தாய் பூமியைப் பாதுகாப்பதே தனது முக்கிய நோக்கம் என்று அவர் கூறுகிறார்.
ஒவ்வொரு குழந்தையும், அமைப்பும், குடிமகனும் காகிதத்தைச் சேமித்து மரங்களைக் காக்கப் பொறுப்பேற்க வேண்டும் என்ற ரூஹியின் எண்ணம், இந்தச் சந்திப்பின் மூலம் மேலும் வலுப்பெற்றுள்ளது.

