கொட்டுக்காளி: விமர்சனம்

கொட்டுக்காளி: விமர்சனம்

படத்தின் முதல் காட்சியே, படம் செல்லும் பாதையை மிக அழகாகச் சொல்லி விடுகிறது.

கிராமத்து வீடு..  ஒரு சேவலின் கால் கட்டப்பட்டிருக்கிறது.   முயன்று அவிழ்த்துவிட்டு  சேவல் ஓட…  குடும்பத்து ஆண்கள், சேவலை துரத்திப்  பிடித்து மீண்டும் அதன் கால்களை இறுக்கமாகக் கட்டிவிடுகிறார்கள்.

நாயகி மீனா, இதையெல்லாம் வெற்றுப் பார்வையுடன் நோக்கிக்கொண்டு இருக்கிறாள்.

அதாவது, காதலுடன் சென்ற மீனாவை, சாதிப்பிரியர்களான குடும்பத்தினர் வலுக்கட்டாயமாக  பிடித்து வந்து வீட்டில் அடைத்துள்ளனர் என்பதே, காட்சி சொல்லும் சேதி.  .

தென் மாவட்டத்தில் ஒரு கிராமம். இங்கு வசிக்கும் – கல்லூரி மாணவி – மீனா.  அவளது காதலன், ஏதோ செய்வினை செய்து அவளை ‘மயக்கிவிட்டான்’  என தீர்மானிக்கிறார்கள் குடும்பத்தினர் . சாமியாரிடம் அழைத்துச் சென்று பேயோட்ட வேண்டும் என முடிவெடுக்கிறார்கள்.  மீனாவை திருமணம் செய்ய காத்திருக்கும் முறை மாமன் கொட்டுக்காளி,  சாமியாரிடம் அழைத்துச செல்கிறார்.ஒரு ஆட்டோ, மூன்று டூ வீலர்களில் மீனாவுடன் குடும்பம் நண்பர்கள் என கிளம்புகிறார்கள்.

அந்தப் பயணம்… பயணிக்கும நபர்கள்… அவர்களது மனநிலை…  அப்போது நடக்கும் ஒரு  அதிரடி சம்பம், சாமியாரின் செயல் என்று போகிறது கதை. இறுதியில்  யாருக்கு பேய் பிடித்திருக்கிறது என்கிற கேள்வியை நம் முன் வைத்து  முடிகிறதுபடம்.

படம் முழுதும் வெற்றுப் பார்வையாலேயே தனது கதாபாத்திரத்தின் உணர்வுகளை கடத்தி ஆச்சரியப்பட வைக்கிறார் மீனாவாக நடித்து இருக்கும் அன்னா பென். “இவங்க அடிக்க மட்டுமா செய்யுறாங்க” என்ற ஒற்றை வசனம்தான் அவருக்கு. அதில்தான் எத்தனை அர்த்தங்கள்?

தொண்டை கட்டிய கரகரத்த குரல், ஆ்த்திரமும் எரிச்சலும் கலந்த பார்வை, வெடிக்கும் ஆத்திரம் என  கொட்டுக்காளியாக  அதகளம் செய்திருக்கிறார் சூரி.

அவரது தந்தையாக நடித்திருக்கும் புதுகை பூபாலன், சகோதரிகளில் ஒருவராக வரும் முத்துலட்சுமி, மீனாவின் தாயாக நடித்துள்ள சாந்தி உள்ளிட்ட அனைவருமே எதார்த்த நடிப்பை அளித்து கவர்கின்றனர்.

அநேகமாக, தமிழில் பின்னணி இசையே இல்லாத முதல் படம் இதுவாகத்தான் இருக்கும்.
அதற்கான தேவையே இல்லை என்பதை உணர்த்துகின்றன இயல்பான ஒலிகள்..

ஆம்…  வாகனங்களின் இரைச்சல், ஆற்றின் சலசலப்பு, காற்றின் வீச்சு, சேவலின் கொக்கரிப்பு என காட்சிக்குப் பொருத்தமான ஒலிகளே பின்னணி.

அற்புதமான ஒலிவடிவப்பை கொடுத்திருக்கும் சுரேன் மற்றும் அழகிய கூத்தன்,  துல்லியமாக கள ஒலிப்பதிவு (லைவ் சவுண்ட்) செய்த ராகவ் ரமேஷ், ஒலி வடிவம் மற்றும் ஒலி கலவை பணியைச் சிறப்பாக செய்த சுரேஷ் ஜி ஆகியோருக்கும் இந்த துணிச்சல் முடிவை எடுத்த  இயக்குநர் வினோத் ராஜுக்கும் ஸ்பெஷல் பாராட்டுகள்.

ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள், சாலை என்றே பெரும்பாலும் ஓடும் காட்சிகளை மிகச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்து அளித்து இருக்கிறது பி.சக்திவேலின் ஒளிப்பதிவு. ஏதோ நாமே உடன் பயணிப்பது போன்ற உணர்வு.

கணேஷ் சிவாவின் படத்தொகுப்பு கச்சிதம்.

ஆணாதிக்கத்தை மிக நுணுக்கமாக காட்சிகளாக  வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் வினோத் ராஜ். ஆண்கள் அனைவரும் காற்றை அனுபவித்து இரு சக்கர வாகனங்களில் பயணிக்க… பெண்கள் மட்டும் ஷேர் ஆட்டோவுக்குள் அடைந்து பயணிக்கும் காட்சி ஒரு உதாரணம்.  இதை,  டாப் ஆங்கிள் காட்சியாக பதிவு செய்திருப்பது இன்னும் சிறப்பு.

அதே போல ஆண்கள் சாலையோரத்தில் சிறு நீர் கழிக்க…  பெண்கள் தோப்புக்கு உள்ளே மறைவிடத்துக்கு வெகுதூரம் செல்ல வேண்டிய நிலையையும் காட்சிப் படுத்தி இருக்கிறார். ( அதற்காக  நாப்கின்  எடுப்பதையெல்லாம் காண்பிக்க வேண்டுமா)

மூட நம்பிக்கைகள் பெண்கள் மீதே திணிக்கப்படுவதை, மாதவிடாய் ஆன பெண், கோயிலுக்கு வெளியே நிறுத்தப்படும் காட்சியில் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்.

இதற்கெல்லாம் பெண்களும் (அறியாமலேயே) உடந்தையாய் இருப்பதை,  கொட்டுக்காளி பாண்டியின் சகோதரி  கதாபாத்திரங்கள் வழியாக உணர்த்தி இருக்கிறார்.

கொட்டுக்காளியின் ஆணாதிக்க ஆத்திரம், குடும்பத்தினரை தாக்க.. உடன் வரும் சிறுவன் கண்ணீர் விட்டு அழ… ஆண்களின் குடும்ப வன்முறைக்கு ஓர் எடுத்துக்காட்டான காட்சி.

“கீழ் சாதிக்காரனை காதலிச்சிருக்காளேடா..” என்கிற ஒரு வசனமே போதும், இந்த நவீன யுகத்திலும் சாதி எந்த அளவுக்கு கோலோச்சுகிறது என்பதைச் சொல்ல.இப்படி,  பல விசயங்களை மிக ஆழமாக விதைத்திருக்கிறார் இயக்குநர். அதே நேரம்… தரமான படம் என்றால் மிக மெதுவாக நகரவேண்டும் என்பது என்ன விதியோ..

திரைப்படம் என்பதற்கு ஒரு வரையறை வைத்து, ‘இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்கிற சட்டத்தை உடைத்திருக்கிறார், இயக்குநர் வினோத் ராஜ்.

படத்தின் இயக்குநர், நடிகர்கள் உள்ளிட்ட கலைஞர்கள் – தொழில்நுட்ப கலைஞர்களுடன் மிக முக்கியமாக – வணிக நோக்கம் தாண்டி படத்தைத் தயாரித்த நடிகர் சிவகார்த்திகேயனும் பாராட்டுக்கு உரியவர்.

அவசியம் பார்க்க வேண்டிய தரமான படைப்பு.

– டி.வி.சோமு