போகுமிடம் வெகுதூரமில்லை : விமர்சனம்
பயணத்தை கதைக் கருவாகக் கொண்டு, வாழ்க்கைப் பயணத்தை – தத்துவத்தைச் சொல்லும் அன்பே சிவம், மாநகரம், அயோத்தி போன்ற படங்களன் வரிசையில் வந்திருக்கும் நெகிழவைக்கும் படம், போகுமிடம் வெகு தூரமில்லை.
பிற மனிதரின் மீது காட்டும் அன்பே, வாழ்க்கையை அர்த்தப்படுத்துகிறது என்பதை உணரவைக்கும் இந்தப் படத்தை தயாரித்த ஷார்க் பிக்சர்ஸ் சிவா கிளாரிக்கு பாராட்டுகள்.
அமரர் ஊர்தி ஓட்டுநரான குமார், சென்னையில் இருந்து களக்காடு வரை ஒரு பெரியவரின் உடலை எடுத்துச் செல்கிறார். வழியில் நளின மூர்த்தி என்கிற கிராமிய கலைஞர் மற்றும் ஒரு காதல் ஜோடி லிப்ட் கேட்க.. அவர்களை ஏற்றிக் கொள்கிறார்.
அதன் பிறகு பயணத்தில் பல அதிரடி திருப்பங்கள். மரணமைடைந்த பெரியவரின் உடலை ஏற்றிக்கொண்டு ஊர் போய் சேர்ந்தாரா குமார்… இதுதான் கதை.
ஆம்புலன்ஸ் டிராைவராக விமல் நடித்து உள்ளார். வழக்கமான ஜாலி ரகளை நடிப்பை ஒதுக்கிவைத்துவிட்டு, சீரியஸான ரோலில் நடித்துள்ளார். அளவான பேச்சு, எப்போதும் கவலை முகம் என்று அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் விமல்.
தனது வாகனத்தில் இருக்கும் காதல் ஜோடியை, சிலர் இழுத்துச் சென்று கொலை செய்ய முயலலும்போது நமக்கென்ன என்று மனதை கல்லாக்கிக்கொண்டு இருப்பது .. பிறகு பொறுக்க முடியாமல் அவர்களை போராடி காப்பாற்றுவது, பிணத்தை காணவில்லை என்று அதிர்வது என சிறப்பாக நடித்துள்ளார் விமல். அவரது திரை வாழ்க்கையில் முக்கியான படம் இது.
கூத்துக் கலைஞர் நளினமூர்த்தியாக கருணாஸ் நடித்து உள்ளார். அப்பாவித்தனமான கலகலப்பான பேச்சு, பிணத்தைக் காணவில்லை என்றவுடன் குற்ற உணர்வில் தவிப்பது, இறுதியில் அவர் எடுக்கும் முடிவு என நெகிழ வைக்கிறார் கருணாஸ்.
குமார் (விமல்) மனைவி கலையழகியாக மேரி ரிக்கெட்ஸ் நடித்து உள்ளார். தனது பிரசவச் செலவிற்காகச் சேர்த்து வைத்திருந்த முப்பதாயிரம் ரூபாயை ஒருவருக்கு உதவியாக கொடுக்கும் அப்பாவித்தனம், பிரசவத்தின் போது பணம் இல்லாமல் தவிக்கும் நிலை என உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளார்.
ஆடுகளம் நரேன், தீபா சங்கர், சார்லஸ் வினோத் உள்ளிட்ட அனைவருமே சிறப்பாக நடித்து உள்ளனர்.
என்.ஆர்.ரகுநந்தனின் இசை, படத்தின் ஒரு கதாபாத்திரமாகவே உடன் வருகிறது. துக்க வீட்டு சூழல், பிணத்தை வாகனத்தில் எடுத்துவரும் பரபரப்பான காட்சி என காட்சிகளின் வீரியத்தை மேலும் பலப்படுத்தி இருக்கிறது இவரது பின்னணி இசை.
டெமில் சேவியர் எட்வர்ட்டின் ஒளிப்பதிவும் என்.தியாகராஜனின் எடிட்டிங்கும் தும் படத்துக்கு பலம்.
பயணத்தை அடிப்படையாக வைத்து சுவாரஸ்யமாக, மெஸேஜ் சொல்லி இருக்கிறார் இயக்குநர் மைக்கேல் கே.ராஜா.ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி உள்ளார். ஒரு மரண வீடு… அருகிலேயே ஒரு வீட்டில் சுப நிகழ்ச்சி. இரு குடும்பத்துக்கும் ஏற்கெனவே பகை.. இதனால் ஏற்படும் பிரச்சினை ஒரு புறம்.. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் குமார் – கலையழகி காதல் – ஊடல்.. அதோடு கலையழகி பிரசவத்துக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்க.. பணத்துக்கு சிக்கல் என்கிற நிலை மறு புறம்.. இப்படி காட்சிகளை அழகாக கோர்த்து இருக்கிறார் இயக்குநர்.
மிக முக்கியமான செய்தியை… மிக சுவாரஸ்யமாக அளித்துள்ள இத்திரைப்படத்தை அனைவரும் பார்த்து ரசிக்கலாம்.