”விருது படங்களை தியேட்டர்களில் வெளியிடுவதே வன்முறை ன்” ; கெவி விழாவில் இயக்குநர் அமீர்

”விருது படங்களை தியேட்டர்களில் வெளியிடுவதே வன்முறை ன்” ; கெவி விழாவில் இயக்குநர் அமீர்

ஆர்ட் அப் ட்ரையங்கிள் பிலிம் கம்பெனி தயாரிப்பில் தமிழ் தயாளர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம், ‘கெவி’.  இதில், அறிமுக நாயகன் ஆதவன் கதாநாயகனாக நடிக்க, ‘டூ லெட்’, ‘மண்டேலா’ புகழ் ஷீலா கதாநாயகியாக நடித்துள்ளார். விஜய் டிவி ஜாக்குலின், சார்லஸ் வினோத், சிதம்பரம், தர்மதுரை ஜீவா, விவேக் மோகன், உமர் பரூக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.

‘கெவி’ படத்தை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தும் விழா நடந்தது.  அப்போது சிறப்பு அழைப்பாளர் இயக்குநர் அமீர், ” கொடைக்கானலில் இருந்து மலைப்பகுதி வழியாக 10 கிலோ மீட்டர்  செங்குத்தான பாதைகளில் மிகுந்த சிரமத்துடன் பயணித்து கெவி என்கிற கிராமத்துக்குச் சென்று படப்பிடிப்பு நடத்தினோம் என்றார்கள் படக்குழுவினர்.  இந்த  கெவி  மாதிரி சாலை வசதி இல்லாத பல மலை கிராமங்கள் இருக்கின்றன. ஆற்றைக் கடப்பதற்காக கயிற்று பாலத்தில் தொங்கிக்கொண்டு அக்கரைக்குச் சென்று படிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் இருக்கின்றனர். கர்ப்பிணிகள் உயிரிழக்கின்றனர்.  ஆனால்,  ஃபார்முலா ரேஸ் என்கிற கார் பந்தயம் நடத்தும் அளவிற்கு நம் நாடு முன்னேறி இருக்கிறது.

ஜெய் பீம் படம் வெளியானபோது இருளர்களின் பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்து தமிழக அரசு தலையிட்டு அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக பட்டா வழங்குவது உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்தது. அதேபோல கெவி திரைப்படமும் அந்த ஊர் மக்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புவோம்” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “சமீபத்தில் வெளியான ‘வாழை’ திரைப்படம் மெயின்ஸ்ட்ரீம் மீடியாவிற்கு பக்கத்தில் இருக்கிறது. அதுதான் அந்த படத்தின் வெற்றி. அதேசமயம் பக்கத்தில் இருக்கின்ற ‘கொட்டுக்காளி’ படம் திரைப்பட விழாக்களுக்கான சினிமா. அதனால் அது நல்ல படம் இல்லை என்று அர்த்தம் இல்லை. அப்படி திரைப்பட விழாக்களில் விருதுகளை பெறுவதற்காக எடுக்கப்பட்ட ஒரு படத்தை திரையரங்குகளில் மற்ற படங்களுடன் கொண்டு வந்து போட்டி போட வைப்பதே ஒரு வன்முறைதான். அது எனக்கு ஏற்புடையது அல்ல. அப்படி செய்யவே கூடாது.

விருதுக்கான படங்களை தியேட்டரில் பார்த்துவிட்டு வெளியே வரும் பலரும் படத்தைப் பற்றி கடுமையாக விமர்சிக்கிறார்கள். வெட்டுவேன் குத்துவேன் என்று கூட பேசுகிறார்கள். அப்படி அவர்கள் பேசுவதற்கு காரணம் அவர்கள் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிவிட்டு உங்கள் படத்தை பார்ப்பது தான். அதனால் அவர்களுக்கு அந்த உரிமை இருப்பதாக நினைக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை நான் கொட்டுக்காளி படத்தை தயாரித்திருந்தால் அதை திரையரங்குகளுக்கே கொண்டு வந்திருக்க மாட்டேன். இதை வணிக நோக்கத்தில் கொண்டு வந்து திணிக்க வேண்டிய அவசியம் இல்லை என நான் நினைக்கிறேன். சர்வதேச திரைப்பட விருதுகளை பெற்ற படங்களுக்கு அந்த கண்ணியத்தை அப்படியே கொடுத்து விட வேண்டும். அந்த படத்தின் தயாரிப்பாளர் பிரபல நடிகராக இருப்பதால் அவரது செல்வாக்கை பயன்படுத்தி அதை ஒரு பிரபல ஓடிடி தளத்திற்கு விற்றிருக்கலாம். அதிலேயே போட்ட முதலீட்டை எடுத்துவிட்டு பிரச்சினையை முடித்து இருந்தால் தேவைப்படுபவர்கள் ஓடிடி தளத்தில் அந்த படத்தை பார்த்துக் கொள்வார்கள்” என்றார்.

Related Posts