“ஒத்துக்கிட்டு புகார் சொல்ற நடிகைகளும் உண்டு!”: ‘காமா’ பூஜையில் ஆர்.கே.சுரேஷ்!
திரைப்பட விநியோகஸ்தர், தயாரிப்பாளர், நடிகர், அரசியல் பிரமுகர் என பன்முகம் கொண்டவர் ஆர்.கே.சுரேஷ். இந்நிலையில், `காமா’ எனும் புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார். ஆர்யா ஆதி இன்டர்நேசனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை மன்ஜித் திவாகர் இயக்குகிறார்.
இப்படத்தின் பூஜை இன்று, சென்னை பிரசாத் லேபில் சிறப்பாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ஆர்.கே.சுரேஷ், பதில் அளித்தார்.
அவர், ”மலையாள படங்களில் ஏற்கெனவே நடித்து உள்ளேன். நடித்திருக்கிறேன். இப்போதும் இரண்டு படங்கள் நடித்துக்கொண்டிருக்கிறேன். எந்தத் துறையில் பாலியல் அத்துமீறல் நடந்தாலும் கண்டிக்கத்தக்கதுதான்.இப்போது போலவே, மலையாள திரையுலகில் 2016-ல் பாலியல் புகார்கள் கிளம்பின. தமிழ்த் திரையுலகிலும் சில வருடங்களுக்கு முன் இப்படியான குற்றச்சாட்டுகள் எழுந்தன. நடிகர் சங்க தலைவராக விஷால் இருந்தபோதே ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. நடிகைகளின் பாதுகாப்பு மிக முக்கியம்.
அதே நேரம், சிலர் அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு ஒப்புக்கொண்டு ஒத்துழைத்திருக்கிறார்கள். பின்னர் குற்றச்சாட்டாக கூறுகிறார்கள்.
ஆகவே, நடிகைகளுக்கு மட்டுமல்ல நடிகர்களுக்கும் பாதுகாப்பு அவசியம். பொய்ப் புகாரைக் கொடுத்து அவர்களின் இமேஜை உடைக்கும் சதி நடக்கவும் வாய்ப்பு உள்ளது.தற்போதைய சூழலில், முழுக்க முழுக்க சினிமாவில் மட்டும்தான் கவனம் செலுத்துவேன். கட்சி தொடங்கியவர்களில் நடிகர் விஜய்தான் 10 வருடங்களுக்கு மேல் பொறுமையாக திட்டமிட்டு, ஒவ்வொரு நிகழ்வாக தொடங்கி செயல்படுத்தி வருகிறார். கமலை விட ஒரு படி முன்னேதான் விஜய்யின் அரசியல் இருக்கும் என நினைக்கிறேன்.
விஜய் அரசியல் வருகையால் GOAT படத்துக்கு எந்த சிக்கலும் வராது. உதயநிதி ஸ்டாலின் எல்லோருக்கும் உதவும் மனம் கொண்டவர்” என்று ஆர்.கே. சுரேஷ் பதில் அளித்தார்.