“காமராஜர் இல்லத்தை இடித்துவிடலாம்!”: ‘காமராஜ்’ பட இயக்குநர் பாலகிருஷ்ணன் வேதனை!
காமராஜரின் நினைவு இல்லம், நாசமாகி இருப்பதாகவும் இதற்கு பதிலாக அதை இடித்துவிடலாம் என்றும், காமராஜர் வாழ்க்கை வரலாறான காமராஜ் படத்தின் இயக்குநர் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது..
“காமராஜரின் உதவியாளராக இருந்த திரு.வைரவன், சென்னை தி.நகரில் இருக்கும் காமராஜர் நினைவில்லத்துக்கு கடந்த 1997 ஆம் ஆண்டு, என்னை அழைத்துச் சென்றார். செம்மண் தரை வளாகம், எளிமையை பறைசாற்றும் கதவுகள், ஜன்னல்கள், அவர் வாசிப்பதற்கு ஒளி தந்த மின் விளக்குகள், புண்ணியம் செய்த காற்றாடிகள், பழங்கால, அவர் கைபட்ட மின் ஸ்விட்சுகள் என மனதை நெகிழ வைத்தது.
அவர் ஏதோ ஓர் அறையில் இருப்பாரோ என்று மனம் ஏங்கும்…
இன்று இந்த எதுவும் அங்கு இல்லை. இன்று அவர் வீட்டுக்குள் நுழையும் மாணவர்கள் இது ஒரு ஆடம்பர ஜமீன்தார் வீடு என்றுதான் நினைப்பார்கள்.
புதுப்பிக்கிறோம் என்ற பெயரில் அனைத்து அடையாளங்களும் சிதைக்கப்பட்டு, ரேசன் அரிசி உண்ட ஒரு முதல்வரின் வீடு வெள்ளை மாளிகை போல் காட்சி தருகிறது.
அமெரிக்க அதிபர் கென்னடியைக் கொன்ற கொலைகாரன் உபயோகித்த ஆறாவது மாடி அறையைக் கூட, டல்லஸ் மாகாணத்தில் பழைமை மாறாமல் செப்பனிட்டு பாதுகாத்து வருகிறார்கள்.
5 லட்ச ரூபாய் பெருமானம் உள்ள பழையக் கார்களை கூட இயல்பு கெடாமல் கவனமுடன் சீர் செய்கிறார்கள்.
விலைமதிப்பில்லா ஒரு தேசத்தலைவரின் வீடு, அதன் அடையாளத்தை முற்றிலும் இழந்து விட்டது. அதற்குப் பதிலாக அந்த வீட்டை இடித்து விடலாம். மக்கள் மனதில் அவர் பிம்பம் ஆடம்பரம் இன்றி நிலைத்திருக்கும்.
நாங்கள் காமராஜ் படப்பிடிப்பை அந்த வீட்டில் நடத்தியபோது தொழிலாளர்கள் வீட்டின் வளாகத்தில் வாய் கொப்பளித்துக்கூட அசுத்தம் செய்யக்கூடாதென கட்டுப்பாடு விதித்திருந்தோம்.
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் 1997ல் 15 முதல் 20 பேர் வரை வந்தார்கள். இல்லத்தில் குடிதண்ணீர் கூட கிடையாது. 1998 முதல் தொடர்ந்து குடிதண்ணீரும், சர்க்கரைப் பொங்கலும், வழங்க ஆரம்பித்தோம். சமீப காலங்களில் அவர் பிறந்தநாளில் அவர் வீட்டின் வளாகத்தினுள் கால்வைக்கக் கூட இடமில்லை. எனக்கும் அந்த வீட்டிற்கும் ஆன தொடர்பை குறிப்பிட மட்டுமே இதைச் சொல்கிறேன். தற்பெருமை கொள்ள அல்ல.
ஒரு தலைவரின் அறத்தை அவரது வாழ்விடம், உபயோகித்த பொருள்களின் எளிமை பறைசாற்றும். வரலாற்றுச் சான்றுகளாகத் திகழும்.
தினமும் பெருந்தலைவர் காமராஜர் பெயரை உச்சரிக்கும். தமிழக முதல்வர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்கள் இவ்விஷயத்தில் தலையிட்டு பெருந்தலைவர் காமராசர் நினைவு இல்லத்தின் மாண்பை மீட்டெடுக்க வேண்டும்.
பழுதுபட்ட மின் சாதனைகளை சீர் செய்து, தொங்க விடப்பட்டுள்ள அலங்கார விளக்குகளை அகற்றி, செயற்கை புல்வெளிகளை நீக்கி, அந்த புனிதத் தலத்தில் இயல்புத்தன்மையை திரும்பக் கொணரும்படி வேண்டுகிறேன்.
இந்த வீட்டை மக்கள் திலகம் முதல்வராக இருந்தபோது இந்த வீட்டின் உரிமையாளர் திரு கோவிந்தராஜுவிடமிருந்து விலைக்கு வாங்கி நினைவுச் சின்னமாக மாற்றினார். வீட்டில் எந்த மாறுதலும் செய்யவில்லை.
இப்பணிக்கென தாங்கள் நினைவிடங்களைப் பாதுகாக்கும் வல்லுனர்களின் துணைகொண்டு செப்பனிட்டு, சீரமைத்து, தமிழகம் உள்ளவரை நினைவிடம் அவர் புகழைத் தாங்கி நிற்கும் வகையில் ஆவன செய்திட வேண்டுகிறேன்.
பெருந்தலைவருக்கு நீண்ட புகழைச் சேர்த்த அடையாளம் தங்களுக்கும் கிட்டும்.

