சர்தார் 2-க்காக தூக்கத்தைத் துறந்த படக்குழு: கார்த்தி நெகிழ்ச்சி!
திரைப்படத்திற்குத் திரைப்படம் புதிய பாடங்களைக் கற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ள கார்த்தி, ஒரு படைப்பு உருவாகப் பலரின் உழைப்பு பின்னணியில் இயங்குகிறது என்றார். சர்தார் முதல் பாகத்தின் தொடர்ச்சியையும், அதன் பின்னணிக் கதையையும் இணைத்து ‘சர்தார் 2’ உருவாக்கப்பட்டுள்ளது. முதற்பாகத்தில் குடிநீர் வணிகம் குறித்த விழிப்புணர்வு முன்னிறுத்தப்பட்டதைப் போல, இப்படத்திலும் அழுத்தமான பல கருத்துகள் இடம்பெற்றுள்ளன. படப்பிடிப்பு முடிந்ததும், இயக்குநர் மித்ரன் முழுமையாக ஒரு ஆண்டை எடிட்டிங் உள்ளிட்ட இறுதி வடிவம் கொடுக்கும் பணிகளிலேயே செலவிட்டுள்ளார்.
‘கைதி’ திரைப்படத்திற்குப் பிறகு சாம்.சி.எஸ் உடன் மீண்டும் கைகோர்த்திருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கார்த்தி, இது அவருக்கு நூறாவது திரைப்படம் என்பதால் கூடுதல் சிறப்பு என்றார். மேலும், கலை இயக்குநர் ராஜீவன் அக்காலச் சூழலைத் தத்ரூபமாகத் திரையில் கொண்டுவந்துள்ளார் என்றும் குறிப்பிட்ட அவர், அள்ளும் பகலும் அயராது உழைத்த படக்குழுவினருக்கும், அவர்களின் பின்பலமாய் அமைந்த குடும்பத்தினருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

