இளையராஜா இசையால் உயிர் பெற்ற குழந்தை!: ‘மஞ்சனத்தி’ துவக்க நிகழ்வில் அவரே பகிர்ந்த தகவல்!
மாரி செல்வராஜ் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகும் புதிய திரைப்படமான ‘மஞ்சணத்தி’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. நவ்வி ஸ்டூடியோஸ், ஃபார்ச்சூன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்கந்தா பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர், பூர்ணிமா ரவி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இவ்விழாவில் இளையராஜா குத்துவிளக்கேற்றி, கிளாப் போர்ட் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியது
-
வாழ்நாள் சாதனை: “என் படங்களை இதுவரை இவ்வளவு விமரிசையாகத் தொடங்கியதில்லை. இப்படத்தில் இளையராஜா சார் இருப்பது என் வாழ்நாள் சாதனை. அவரை நேரில் பார்க்க ஆசைப்பட்ட காலத்தில் இருந்து, இன்று என் படத்திற்கு அவர் பணியாற்றுவது மிகப்பெரிய பாக்கியம்.”
-
குடும்பத்தின் நெகிழ்ச்சி: “தயாரிப்பாளரான என் மனைவி திவ்யாவிற்கும் இளையராஜாவை நேரில் பார்க்க ஆசை இருந்தது. அவர் தயாரிப்பில் ராஜா சார் பணியாற்றுவது மறக்க முடியாத நிகழ்வு.”
-
இளையராஜாவின் அர்ப்பணிப்பு: “என் உழைப்பு, வாசிப்பு, அரசியல் என அனைத்திலும் கர்வமாக இருந்தவன், எனக்காக அதிகாலையிலேயே எழுந்து இசையமைத்து அழைத்த அந்த நிமிடத்தில் நாமெல்லாம் ஒன்றுமே இல்லை என உணர்ந்தேன்.”
-
படத்தின் பின்புலம்: “திரைக்கதை எழுதும்போது ராஜா சார் எப்படி இசையமைப்பார் என்று யோசித்தே எழுதினேன். நடிகர் கதிர் நான் இயக்குநராவதற்கு முக்கிய காரணம். இத்திரைப்படம் என் வாழ்க்கைக் கதையையும் தழுவியதாக இருக்கும்.”

இளையராஜா பேசியது
-
தனிப்பட்ட பின்னணி & இசைப் பயணம்: “நானும் காடுமேடுகளிலும் முள்ளுக்காடுகளிலும் வளர்ந்து வந்தவன்தான். எந்தப் பின்னணியும் இல்லாமல் தாகத்தோடு இசையைக் கற்றுக்கொண்டேன். பியானோவைப் பார்ப்பதற்கே எனக்கு 27 வயதானது.”
-
இசையின் தனித்துவம்: “எனக்குள் ஓடும் இசையின் ஜீவன் இதுவரை யாருக்கும் வந்ததில்லை; இனியும் வரப்போவதில்லை. இதை கர்வத்தோடுதான் சொல்ல வேண்டும். இதற்காக எனக்கு எந்தப் பெருமையும் இல்லை; கடவுள் கொடுத்த சக்தியை நான் செய்கிறேன்.”
-
இசையால் குழந்தை உயிர் பெற்ற சம்பவம்: “ஜெர்மனியில் இருந்த ஒரு தமிழ் தம்பதியின் கர்ப்பிணிப் பெண்ணுக்கு வயிற்றில் குழந்தையின் அசைவுகள் நின்றுவிட்டதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அப்போது என் இசையைக் கேட்கச் செய்துள்ளனர். இரண்டு நாட்கள் கழித்து, அறுவை சிகிச்சைக்கு முன்பு பரிசோதித்தபோது குழந்தைக்கு உயிர் வந்திருப்பது தெரியவந்தது. இது உண்மையாக நடந்த சம்பவம்.”
-
வாழ்த்து: “என் இசையைக் கொண்டாடும் மாரி செல்வராஜுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. இத்திரைப்படம் பெரிய வெற்றிபெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.”

