“உருகி உருகி” சித்து குமார் இசையில் துள்ளலான ஒரு “ஹைக்கூ”!

“உருகி உருகி” சித்து குமார் இசையில் துள்ளலான ஒரு “ஹைக்கூ”!

சிவப்பு மஞ்சள் பச்சை’யில் ‘உசுரே’, ‘மயிலாஞ்சியே’, ‘இது தான்’ என்று உருக வைத்த சித்து குமார், இப்போது ‘ஜோ’வின் ‘உருகி உருகி’யுடன் ‘ஆரோமலே’வின் ‘எப்படி வந்தாயோ’ என ஹிட் அடித்து, காதலுக்கு இசையாகவே மாறிவிட்டார். இப்போது, ஏகனுடன் இணைந்து ‘தீராக் காதல்’ போன்ற படங்களில் காதலை இசை மூலமாகவே உணர்த்திய திறமையை மீண்டும் ‘ஹைக்கூ’ படத்தில் நிரூபித்துள்ளார்.

யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ள இந்த ‘ஹைக்கூ’ படம், காதல் கலந்த நகைச்சுவைப் படமாக இன்று அக்டோபர் 23 அன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. படத்தின் பாடல்கள் ஏற்கெனவே ஹிட்டானாலும், முன்னோட்டக் காட்சிகள் பார்த்த விமர்சகர்களும் ரசிகர்களும் பாடல்களையும், பின்னணி இசையையும் புகழ்ந்து தள்ளுகின்றனர். இதனால் சித்து குமார் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளார்.

‘ஹைக்கூ’வின் இசைப் பயணம் பற்றி சித்து குமார் கூறுகையில், “யுவராஜ் சின்னசாமி கதை சொன்னதும், இசைக்கு இதில் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று நான் உணர்ந்தேன். காதல் கதைகள் என்றாலே இசையமைப்பாளர்களுக்குப் பல வாய்ப்புகள். ஆனால், கதாபாத்திரங்களின் உணர்வுகளைத் தாண்டி இசை ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்பது முக்கியம்.

‘ஹைக்கூ’ படத்தைப் பொறுத்தவரை, இசை திரைக்கதையின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்று விரும்பினோம். கிட்டத்தட்ட ஒரு கதாபாத்திரத்தைப் போல மெளனமாக இசை செயல்பட வேண்டும் என்பதே நோக்கம். இதற்காகப் பல முயற்சிகளை மேற்கொண்டு, பொருத்தமான இசையை உருவாக்குவதற்கான சுதந்திரத்தை வழங்கிய இயக்குநருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி.

உலகப் புகழ்பெற்ற புடாபெஸ்டில் பின்னணி இசையைப் பதிவு செய்யும் வாய்ப்பு கிடைத்தது ஒரு மிகப்பெரிய வரம். இளையராஜா, ரஹ்மான் உள்ளிட்ட பல இசை மேதைகள் மகத்தான இசைப் படைப்புகளை உருவாக்கிய இடத்தில் எங்களது படத்தின் பின்னணி இசையையும் பதிவு செய்தது சிறப்பான அனுபவமாக இருந்தது.

முன்னோட்டக் காட்சிகள் பார்த்தவர்களிடமிருந்து கிடைக்கும் வரவேற்பு உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கிறது. மிகுந்த கவனத்துடனும் அக்கறையுடனும் இந்தப் படத்தின் இசையை உருவாக்கியிருக்கிறோம். ‘ஹைக்கூ’ படத்தைத் திரையரங்குகளில் பார்க்கும்போது, ரசிகர்களுக்கு அழகான இசை அனுபவம் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்தில், அதிர்ச்சி அருண், சுப்பிரமணிய சேது, அதியமான், மைம் கோபி மற்றும் இந்துமதி மணிகண்டன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரித்த இப்படத்திற்கு பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், சக்தி பிரணீஷ் பி படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார், ஹரிஹரன் ராம் கூடுதல் திரைக்கதையில் பங்களித்துள்ளார். தமிழக வெளியீட்டுப் பணிகளை சக்தி ஃபிலிம் ஃபேக்டரியின் பி. சக்திவேலன் மேற்கொண்டுள்ளார்.

Related Posts