‘கோழிப்பண்ணை செல்லதுரை’ பார்த்து நெகிழ்ந்த பார்த்திபன்!
தமிழ் த் திரையுலகில் எளிய மனிதர்களின் வாழ்க்கையை – உணர்வுகளை திரையில் பதிவு செய்பவர், இயக்குநர் சீனு ராமசாமி. இவர் இயக்கிய நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவை.
இந்த நிலையில் அவரது அடுத்த படமான, ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தை விஷன் சினிமாஸ் டாக்டர் அருளானந்து தயாரித்துள்ளார்.
ஏகன், யோகிபாபு, சாகாய பிரிகிடா, லியோ சிவக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். அசோக் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இப்படம், அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில், வேர்ல்ட் ப்ரீமியர் அந்தஸ்தில் வரும் 18ஆம் தேதி இரவு திரையிடப்படுகிறது. இந்த வகையில் திரையிடப்படும் முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லரை பார்த்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இயக்குநர் சீனு ராமசாமி உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில் திரைப்பட இயக்குநர் பார்த்திபன், ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தை பார்த்தார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “சீனு இராமசாமி அவர்களின் அக்மார்க் முத்திரையில் ’கோழிப்பண்ணை செல்லதுரை’ வெகு இயல்பான எளிமையான- எள்ளளவும் சினிமாத்தனம் இல்லாமல் – பாசத்தின் வலிமையும் மனிதநேயத்தின் அவசியத்தையும் வலியுறுத்தும் கிராமியப் படம். நாயகன் செல்லதுரையாக வாழ்ந்திருக்கிறார். Climax-ல் நம்மையறியாமல் கண்கள் விசும்ப” – என்று பதிவு செய்து உள்ளார்.
எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ‘கோழிப்பண்ணை செல்லதுரை’, வரும் 20ம் தேதி உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது.