7ஜி: விமர்சனம்

7ஜி: விமர்சனம்

ரோஷன் பஷீர் – ஸ்முருதி வெங்கட் தம்பதி  புதிதாக அபார்ட்மெண்ட் குடியிருப்பில் வீடு வாங்கி குடியேறுகின்றனர். உடன், அவர்களது மகன்.

வீடு வாங்கிய சில நாட்களிலேயே ரேசன் பசீர், அலுவலக வேலையாக வெளியூர் சென்று விடுகிறார்.

இதற்கிடையே, ரோஷன் பஷீரை அவருடன் பணியாற்றும் சினேகா குப்தா ஒருதலையாக காதலிக்கிறார். ரோசனை அடைய வேண்டும் என்பதற்காக, பிளாக் மேஜிக்கில் ஈடுபடுகிறார். அதாவது, ரோசன் வீட்டில் சூனியம் செய்யப்பட்ட பொம்மையை வைக்கிறார். த

இதையடுத்து, மகனுடன் வீட்டில் தனியாக இருக்கும் ஸ்முருதி வெங்கட்டுக்கு, அதிர்ச்சிகரமானஅமானுஷ்ய சம்பவங்கள் ஏற்படுகின்றன.இந்த நிலையில், அந்த வீட்டில் அடைப்பட்டு இருக்கும் ஆத்மா ஒன்று திடீரென்று வெளியாகிறது. அது, ஸ்முருதி வெங்கட்டிடம், “இது எனக்குச் சொந்தமான வீடு, வெளியே போ” என மிரட்டி வெளியேற்ற முயற்சிக்கிறது.

அதன் பிறகு என்ன நடந்தது என்பதை திகிலுடன் விவரிக்கிறது 7ஜி.

ஸ்முருதி வெங்கட் சிறப்பாக நடித்து உள்ளார். கணவனிடம் காட்டும் காதல், மகனிடம் வெளிப்படுத்தும் பாசம், பேய் விசமங்களால் படும் அதிர்ச்சி என பல்வேறு உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார்.

அவரது கணவராக வரும் ரோஷன் பஷீருக்கு அவ்வளவாக வாய்ப்பு இல்லை. ஆனாலும், பாத்திரம் அறிந்து நடித்து இருக்கிறார்.

ரோஷன் பஷீரின் அலுவலக தோழியாக நடித்திருக்கும் சினேகா குப்தா, மாய மந்திரம் என வில்லியாக மிரட்டுகிறார்.

இறந்தும் துயரத்துடன் அலையும் ஆத்மாவாக, சோனியா அகர்வால் வருகிறார். அவரது பிளாஸ் பேக் காட்சி சோகத்தின் உச்சம். இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சுப்பிரமணிய சிவா, கல்கி  உள்ளிட்டோருக்கு பெரிய அளவில் வேலை இல்லை.அமானுஸ்ய திகில் படத்துக்கேற்ற பின்னணி இசையை அளித்திருக்கிறது சித்தார்த் விபின் இசை. பாடல்களும் ரசிக்க வைக்கின்றன.

ஒளிப்பதிவாளர் கண்ணா, அடுக்குமாடி குடியிருப்பையும், 7G எண் கொண்ட வீட்டையும் மிரட்டலாக காண்பித்து படத்துக்கு பலம் சேர்க்கிறார்.

மிகக்குறைந்த பாத்திரங்கள், மிகச் சில லொகோசன்கள்.. ஆனாலும் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை சுவாரஸ்யம் கெடாமல்.. திகிலூட்டி இருக்கிறார் படத்தை இயக்கி தயாரித்து இருக்கும் ஹாரூண்.

பயந்து, ரசித்து பார்க்கலாம்.

Related Posts