‘இந்தியன்’ சேனாபதி யார் தெரியுமா?: ஷங்கர் விளக்கம்

‘இந்தியன்’ சேனாபதி யார் தெரியுமா?: ஷங்கர் விளக்கம்

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள படம், ‘இந்தியன் 2’. சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை லைகா, ரெட் ஜெயன்ட் நிறுவனங்கள் தயாரித்துள்ளன.

வரும் 12-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது. அதில் இயக்குநர் ஷங்கர் பேசும்போது, “இந்தியன் படம் இயக்கும்போது 2-ம் பாகம் பண்ணுவேன் என்று நினைக்கவில்லை. அப்போது சேனாபதி கேரக்டருக்கு, இந்தியா சுதந்திரம் அடைந்த விஷயம் உள்ளிட்டவற்றை வைத்து, பிறந்த தேதி, வருடத்தைக் குறிப்பிட்டிருந்தோம். இப்போது பண்ணும்போது அவருக்கு என்ன வயது என்ற கேள்வி எல்லாம் வருகிறது. சூப்பர் மேனுக்கு வயதே கிடையாது. எழுத்தாளர் இயான் ஃபிளமிங் புத்தகத்தில் எழுதிய ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரின் வயதை கணக்கிட்டால் இப்போது 102. நாம் அப்படியா பார்க்கிறோம்? அதை போலதான் இதுவும்.சேனாபதி கேரக்டர், நம் எல்லோரின் மனதுக்குள்ளும் இருக்கிற கோபம், ஆதங்கத்தின் வெளிப்பாடுதான்.

இந்தப் படத்தில், ஆர்.கே.லஷ்மணின் கார்ட்டூனான காமன்மேன் கதாபாத்திரத்தை 3டி அனிமேஷனில் கதை சொல்லும் டூலாக பயன்படுத்தி இருக்கிறோம். பொலிவியாவில் எடுத்த காலண்டர் பாடல், ரவிவர்மனின் ஒளிப்பதிவு, முத்துராஜின் செட், கமல் சார் நடிப்பு என ஒவ்வொன்றும் படத்தில் பிரம்மாண்டமாக இருக்கும்” என்றார். நடிகர் சித்தார்த் உடனிருந்தார்.‘நம்முடைய ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் சேனாபதி கேரக்டர்!’ என்று ஷங்கர் தெரிவித்தார்.

Related Posts