“மாதவிடாய் விடுமுறை!”: ‘ஹரா’ படத்தில் சொன்னது உச்ச நீதிமன்றத்தில்! என்ன சொல்கிறார் இயக்குநர் விஜய் ஸ்ரீஜி?

“மாதவிடாய் விடுமுறை!”: ‘ஹரா’ படத்தில் சொன்னது உச்ச நீதிமன்றத்தில்! என்ன சொல்கிறார் இயக்குநர் விஜய் ஸ்ரீஜி?

குழந்தைப் பேறு என்பது பெண்களுக்கான வரமாக சொல்வது உண்டு. ஆனால் பிரசவ வேதனை என்பதை ஆண்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாது.

ஒருவகையில் மாதவிடாய் வலியைவிட, பிரசவ வலி பரவாயில்லை என்றே தோன்றும்.

காரணம்.. கர்ப்பிணியை கண்போல காப்பார்கள் குடும்பத்தினரும், உற்றார் உறவினரும். அதே போல பணிக்குச் செல்லும் பெண்கள் என்றால் கர்ப்பகால விடுமுறைகள் உண்டு.

ஆனால் வெளியில் தெரியாமல் பெண்கள் அனுபவிக்கும் கொடுமை, மாதவிடாய்!

மாதாமாதம் அவர்கள் படும்பாடு சொல்லி மாளாது. ஆனால் குடும்பத்தில் உள்ள ஆண்கள்கூட இதை உணர மாட்டார்கள்.

வலியும் வேதனையுடன் வீட்டு வேலைகளைப் பார்த்து, வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால் அலுவலம் போய்… கொடுமைதான்!

இதை பெண்கள் வெளியில் சொல்வதும் இல்லை.

இந்த நிலையில்தான், சமீபத்தில் விஜய் ஸ்ரீஜி இயக்கத்தில் மோகன் நாயகனாக நடித்து வெளியான ஹரா திரைப்படம், மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

தன் மகள் பருவமடைந்ததை அறிந்து, அவளை பள்ளித் தேர்வுக்கு அனுப்ப மறுப்பார், அப்பா மோகன். “ஓய்வெடுக்கட்டும்” என்பார்.

பள்ளி ஆசிரியைகள், “தேர்வு எழுதலைன்னா மாணவிக்கு ஒரு வருடம் வீணாகிடுமே.. மாணவிகளுக்கு நாப்கின்களை கொடுக்கிறோம். நாங்களும் பெண்கள்தானே? இந்தச் சூழல்களை கடந்துதானே வந்திருக்கோம்” என்று பள்ளி தரப்பில் கூறுவார்கள்… அதற்கும் மோகன் மறுக்க.. “பள்ளி நிர்வாகத்திடம் பேசி, வீட்டிலிருந்தே தேர்வு எழுதட்டும்” என்பார்கள்.

ஆனால், அப்பா மோகன் மறுத்துவிடுவார்.  

இந்த காட்சி, மாதவிடாய் வேதனையை – வலியை முதன் முதலாக தமிழ்த் திரையுலகில் வெளிப்படுத்தியது. பாராட்டுக்களைப் பெற்றது.

அதே நேரம் சிலர், “இதை பெரிதாக எடுத்துக்கொண்டால், கல்வி பாதிக்காதா.. வேலைக்குச் செல்லும் பெண்கள் என்றால், பணி பாதிக்காதா.. பணி உயர்வுகூட தடைபடுமே.. முன்னேற்றம் கெடுமே” என்றெல்லாம் கருத்துக்களை வெளியிட்டனர்.

இதே கருத்தை இன்று  மாதவிடாய் தொடர்பான ஒரு வழக்கில்,  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்து உள்ளார்.

அவர், “மாதவிடாய் காலத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு விடுப்பு வழங்குவதை கட்டாயமாக்கினால் பணியிடங்களில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம். பெண்களை பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் முடிவுகள் அவர்களுக்கு பாதகமாக அமைய வாய்ப்புள்ளது”  என்று  கருத்து தெரிவித்து இருக்கிறார்.  

ஹரா படத்தில் குறிப்பிட்ட காட்சி விவாதமானபோதே, பட இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இது போன்ற கருத்துக்களுக்கு பதில் அளித்தார்.

அவர், “பெண்கள் தங்களது மாதாந்திர வலிகளைப் பொருத்துக் கொண்டு எத்தனையோ வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இதனால் அவர்களது உடல் நலத்துடன் சேர்ந்து மன நலமும் பாதிப்படைகிறது, இது மன அழுத்தம் உள்ளிட்ட நீண்ட காலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கக் கூடும். ஆவரே மாதவிடாய் காலத்தில்,  பெண்களுக்கு குறுகிய கால தற்காலிக ஓய்வு வழங்கப்பட வேண்டும்.

மாதம் ஒரு முறை விடுப்பு எடுத்தால் படிப்பு கெடுமே என்கிறார்கள். கொரோனா ஊரடங்கு காலத்தில் இரு வருடங்கள் பள்ளிகள் மூடிக் கிடந்தன. என்ன பாதிப்பு ஏற்பட்டு விட்டது” என்று கேட்டார் விஜய் ஸ்ரீஜி.

மேலும், “இதனால் வேலைக்குச் செல்லும் பெண்களின் பணிகள் கெடும் என்பதெல்லாம் தவறான புரிதல். முன்னேறிய நாடுகள் பலவற்றில் மாதவிடாய் விடுப்புகள் உண்டு” என்றார்.

ஆனால், இன்று மாதவிடாய் குறித்த ஒரு வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், “மாதவிடாய் காலத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு விடுப்பு வழங்குவதை கட்டாயமாக்கினால் பணியிடங்களில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம். பெண்களை பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் முடிவுகள் அவர்களுக்கு பாதகமாக அமைய வாய்ப்புள்ளது” என்று கருத்து தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில், இயக்குநர் விஜய் ஸ்ரீஜியிடம் இது குறித்து பேசினோம்.

அவர்,ஜாம்பியா, இந்தோனேசியா, வியட்நாம்,  தைவான், தென் கொரியா,  பிலிப்பைன்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும் மாதவிடாய் விடுமுறை உண்டு.

அதிலும், ஜப்பானில் 1947 ஆம் ஆண்டு முதலே இந்த முறை அமலில் இருக்கிறது. சமீபத்தில் இந்த வரிசையில் சேர்ந்த நாடு ஸ்பெயின்.

இவை முன்னேறிய நாடுகள்.. இந்த நாட்டுப் பெண்களும் அனைத்து உரிமைகளும் பெற்று முன்னேறித்தான் இருக்கிறார்கள்.

இன்று உச்ச நீதிமன்றம் தெரித்த கருத்தை, கடந்த (2023ம்) வருடம், டிசம்பர் மாதம், அப்போது ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த ஸ்மிருதி இராணியும் தெரிவித்தார்.

ஆம், “மாதவிலக்கு நேரத்தில் பெண்களுக்கு விடுமுறை தேவையில்லை” என்றார்.

2020ம் ஆண்டு, இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட தனியார் நிறுவன கணக்கெடுப்பின் முடிவுகள்படி, 20 முதல் 29 வயதுக்குட்பட்ட பெண்களில் சுமார் 23 சதவீதம் பேரும், 30 முதல் 44வயதுக்குட்பட்ட பெண்களில் 15.18% பேரும், பதின்பருவ பெண்களில் 17.% பேரும் மாதவிடாய் காலங்களில் உடல்ரீதியான பாதிப்புகளை அனுப்பவிப்பதாக கூறுகின்றது.

ஆகவே மாதவிலக்கு விடுமுறை என்பது அவசியமே.

“இப்படி விடுமுறை அளித்தால், அரசு பணிகள் பாதிக்குமே.. தனியார் நிறுவனங்கள் என்றால் அதன் செல்பாடு பாதிக்குமே” என்று கேட்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

அவர்களுக்கு இரு தகவல்கள்….

பலருக்கும் தெரியா விசயம்.. இந்த விடுப்பு இந்தியாவிலும் உண்டு.

ஆம்.. 1992ம் ஆண்டு முதல் பீகார் அரசு இந்த விடுமுறையை அளிக்கிறது. அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை!

கேரளாவில், மாநில உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு மாதவிடாய் மற்றும் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது.

தனியார் நிறுவன விசயத்துக்கு வருவோம்..

பெங்களூரை மையமாக வைத்து செயல்படும் “Horses Stable News” என்ற செய்தி இணையதளம் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் இரு நாட்கள் விடுப்பு அளிக்கிறது.

இது ஊதியத்துடன் கூடிய விடுப்பு. அதோடு, சிறப்பு தொகையாக ரூ.250 அளிக்கிறது!

இந்நிறுவனம் வெற்றிகரமாகத்தான் செயல்பட்டு வருகிறது.

ஆக.. பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை அவசியம், அவசியமே! அதற்காகத்தான் அந்த காட்சியில், ஹரா படத்தில் வைத்தேன். உச்ச நீதிமன்ற நீதிபதி, தனது கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்று தனது  வலியுறுத்தி சொல்லி முடித்தார் இயக்குநர் விஜய் ஸ்ரீஜி.

Related Posts