எமகாதகி: திரைப்பட விமர்சனம்: பிரம்மாண்டம்!

ஆணாதிக்க உலகில், தனக்குள்ளேயே கேள்விகளை அடுக்கிக் கொண்டு கிடக்கும் பெண், எழுந்து நின்றால்… அதுவும் பிணமாக..?
அதுதான், எமகாதகி!
தஞ்சை அருகே சின்ன கிராமம் அங்கு நடக்கும் கதை. ஊர் தலைவராக இருக்கும் ராஜூ ராஜப்பனின் மனைவி கீதா கைலாசம் இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். மகள் ரூபாவிற்கு அவ்வப்போது மூச்சு திணறல் பிரச்சனை வருவதுண்டு. இந்த பிரச்சனைக்காக மருந்து எடுத்துக் கொண்டிருக்கிறார்.இச்சூழ்நிலையில் அந்த கிராமத்தில் கோவில் திருவிழா வரவிருக்கிறது அதற்காக ஊர் தயாராகிக் கொண்டிருக்கிறது.
நண்பர்கள் உதவியுடன் சுபாஷ் ராமசாமி கோவில் சிலையின் கீரிடத்தை திருடி அதை அடமானம் வைத்து விடுகிறார். கோவில் திருவிழா இன்னும் இரண்டு வாரத்தில் வருவதால் கிரீடம் இல்லை என்று தெரிந்தால் மாட்டி விடுவோம் என்று சுபாஷும் அவரது நண்பர்கள் மூவரும் பயத்தில் இருக்கின்றனர்.ஊர் தலைவராக இருக்கும் ராஜூ வீட்டிற்கு கோபத்தோடு வருகையில் மனைவி கீதாவை அடித்துவிடுகிறார்.
அம்மாவை எதற்காக அடித்தீர்கள் என்று மகள் ரூபா கேட்கிறார் அதற்கு அவரையும் அடித்துவிடுகிறார் ராஜூ. இதனால் அழுது கொண்டே அங்கிருந்து சென்று விடுகிறார் ரூபா. நடுராத்திரியில் தண்ணீர் குடிப்பதற்காக எழுந்த கீதா, தனது மகள் ரூபா தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு, அதிர்ச்சியில் உறைகிறார்.குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ரூபாவின் பணத்தை கண்டு கதறி அழ, தூக்கிட்டு தற்கொலை செய்தது வெளியே தெரிந்தால் கெளரவம் போய்விடும் என ராஜு யோசிக்கிறார்.
கிராமத்தினரிடம் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ரூபா இறந்ததாக கூறிவிடுகின்றனர்.அந்த கிராமமே சோகமாக மாற எல்லோரும் வந்து துக்கம் விசாரிக்கின்றனர். இரவு நேரம் நெருங்க இறுதி சடங்கு செய்வதற்கு பிணத்தை தூக்க முயற்சிக்கின்றனர் கிராமத்து இளைஞர்கள். அப்போது, பிணத்தை தூக்க முடியாமல் அதிகம் கனக்கிறது. பிணம் அசையத்தொடங்கியதும் அதைப்பார்த்த அனைவரும் நாலாபுறமும் தெறித்து ஓடுகிறார்கள்.தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் பிணத்தைத் தூக்க முயற்சிக்க, கண்கள் மூடியபடியே பிணம் எழுந்து உட்காருகிறது.
இதனால், ஒட்டுமொத்த கிராம மக்களும் வீட்டில் இருந்து வெளியே ஓட்டம் பிடிக்கின்றனர்.இறந்த பெண் எதற்காக இப்படி கிராம மக்களை அச்சுறுத்த வேண்டும்.?? வீட்டிலிருந்து ரூபாவின் ஆன்மா தன் உடலை வெளியே கொண்டு செல்ல அனுமதிக்காதது ஏன் என்பதே எமகாதகி படத்தின் மீதிக் கதை. முன்னணி நாயகன், நாயகி யாரையும் நம்பாமல் முழுக்க முழுக்க புதுமுகங்களுடன் வந்து ரசிகர்களின் மனதை ஆக்கிரமிக்கும் திரைப்படமாக வந்திருக்கிறது எமகாதகி.கிராமத்தில் நடக்கும் சடங்கு, நம்பிக்கை, அது சார்ந்த மனிதர்களின் நடவடிக்கைகள் என்று இயல்பாக கிராமத்து வாழ்க்கை முறைகளை கண்முன் நிறுத்தி திரைக்கதையில் கொடுத்து அசத்தியிருக்கிறார் இயக்குனர் பெபின் ஜார்ஜ் ஜெயசீலன்.பழங்கால வீடும் அதில் அடைக்கப்பட்ட அறையை வெறித்துப் பார்க்கும் பாட்டியும், அதற்கு அவர் வைத்திருக்கும் அக்கா பாசமும், ஜாதிய மனக்குமுறல்களும் அதற்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவமும் என்று படம் நெடுகிலும் காட்சிகளை உண்மை தன்மையோடு காட்டியிருப்பது புதுமையாக உள்ளது.
படத்தின் மையமாக நாயகனோ நாயகியோ இல்லாமல் எல்லா பாத்திரங்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருப்பது இயக்குனரின் திறமையை வெளிக்காட்டுகிறது. அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத காட்சிகளும், மனிதர்களின் செயல்பாடுகளும் ரசிகர்களை இருக்கையின் நுனியில் உட்கார அவைத்திருக்கிறார் இயக்குனர்.
சடலம் எழுந்து உட்காருவதும், அது நகராமல் அடம் பிடிப்பதும் நமக்கே வியர்த்து கொட்டிவிடுகிறது. கடைசியாக கீதா கைலாசம் மகளிடம் பாசத்தைப் பொங்கி பேசும் போது தானாக அவரது மடியில் சடலம் விழும் போது நமக்கும் உணர்வுகள் வெடித்து கண் கலங்கி விடுகிறது.
படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது ஒளிப்பதிவும், இசையும். ஒளிப்பதிவு, எடிட்டிங் சுஜித் சாரங் கிராமத்து மனிதர்களின் உணர்ச்சிகளை நம் கண்முன் நிறுத்தி தூக்கிப் பிடித்திருக்கிறார். இசை ஜெசின் ஜார்ஜ் ஒரு திரில்லர் படத்திற்கு அமைதி தான் முக்கியம் என்பதை உணர்ந்து இசைத்திருக்கிறார். பல புதிய ஒலிகளை உணர முடிகிறது. புதுமுகங்களை வைத்து கொண்டு விறுவிறுப்பான கதை சொல்லியிருக்கும் இயக்குனர் பெபின் ஜார்ஜ் ஜெயசீலனுக்கு பாராட்டுக்கள்.
நாயகி ரூபா கொடுவாயூர் காதல், அழுகை, கோபம், குறும்புத்தனம் என பல இடங்களில் தனது முக பாவனைகளை மிக அழகாக கொடுத்து லீலா கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அதில், பிணமாக இருக்கும் காட்சியில் அழகாக பயமுறுத்தி இருக்கிறார் ரூபா.நாயகி அம்மாவாக கீதா கைலாசம்… அற்புதம் நரேந்திர பிரசாத், ஆர். ராஜூ, சுபாஷ் ராமசாமி, ஹரிதா, பொற்கொடி, ஜெய், பிரதீப், ராமசாமி உள்ளிட்ட அனைவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.தஞ்சை கிராமத்தை அருமையாக கண் முன் நிறுத்துகிறார் ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங், ஒரே வீடு.. அதன் வெளிப்புறம் என லொகேஷன்கள் குறைவு..
ஆனால் கொஞ்சம் கூட அலுப்பு தட்டாத அளவிற்கு பலவித கோணங்களில் கண்முன் தந்திருக்கிறார்..படத் தொகுப்பு & கலரிஸ்ட் – ஸ்ரீஜித் சாரங்,கலை இயக்கம் – ஜோசப் பாபின்,
இசை – ஜெசின் ஜார்ஜ்,இயக்குநர் – பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன்தயாரிப்பாளர்கள் – வெங்கட் ராகுல், சுஜித் சாரங், ஸ்ரீஜித் சாரங்,ஜெசின் ஜார்ஜ் இசையில் மூன்று பாடல்களும் ரசிக்க வைத்திருக்கிறது. அதிலும், க்ளைமாக்ஸ் பாடல் கண்களில் கண்ணீர் வர வைக்க பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது. பின்னணி இசை கதையோடு நாமும் சேர்ந்து பயணிக்க வைத்திருக்கிறது.ராஜேந்திரனின் வசனங்கள், ஜோசப் பாபீன் கலை இயக்கம், ஸ்ரீஜித் சாரங்கின் படத்தொகுப்பு, அரவிந்த் மேனனின் சவுண்ட் மிக்சிங் என படத்தில் பணிபுரிந்த அனைவரும் கதையின் பலமறிந்து அதை திறம்பட செய்து முடித்திருக்கிறார்கள் எமகாதகி சபாஷ் போட வைத்துள்ளது.
-யாழினி சோமு
..