பரிமளா & கோ: பாண்டிராஜின் அதிரடித் திரில்லர் ஃபர்ஸ்ட் லுக்!

பரிமளா & கோ: பாண்டிராஜின் அதிரடித் திரில்லர்  ஃபர்ஸ்ட் லுக்!

குடும்பங்கள் கொண்டாடும் குதூகல இயக்குநர் பாண்டிராஜின் கைவண்ணத்தில், திரில்லர் மற்றும் காமெடி கலந்த அட்டகாசமான படைப்பாக உருவாகியுள்ள பரிமளா & கோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் செம அப்ளாஸ் வாங்கி வருகிறது.

தலைவன் தலைவி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, பாண்டிராஜ் இயக்கியுள்ள பன்னிரண்டாவது படம் இது. ஒரு விசித்திரமான குடும்பம், அந்த மனிதர்களின் சுவாரஸ்யமான குணாதிசயங்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் அதிரடிச் சம்பவங்கள் எனப் படம் முழுக்கத் திருப்பங்களுக்குப் பஞ்சம் இருக்காது. சென்னை முதல் பாலக்காடு வரை பயணிக்கும் இந்தக் கதை, பார்வையாளர்களை இருக்கை நுனியில் அமர வைப்பதோடு வயிறு குலுங்கச் சிரிக்கவும் வைக்கும்.

ஜெயராம் மற்றும் ஊர்வசி காம்போ ஒருபுறம் கலக்க, சந்தோஷ் சோபன் மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஜோடி இளமைத் துள்ளலுடன் இணைந்துள்ளனர். இவர்களுடன் சாண்டி மற்றும் அனந்திகா சனில்குமார் மற்றொரு ஜோடியாக நடித்துள்ளனர். யோகிபாபு முழுநீள முக்கியக் கதாபாத்திரத்தில் மீண்டும் பாண்டிராஜுடன் கைகோர்த்திருப்பது படத்திற்குப் கூடுதல் பலம் சேர்க்கிறது. அனைவரையும் மிரள வைக்கும் விதமாக, இயக்குநர் மிஷ்கின் ஒரு வித்தியாசமான போலீஸ் அதிகாரியாகத் தோன்றுகிறார். சிங்கம்புலி, பக்ஸ் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் உள்ளது.

லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், ஜார்ஜ் சி. வில்லியம்ஸின் கண்கவர் ஒளிப்பதிவிலும், ஃபாக்ஸ்என் இசையிலும் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் படுவேகமாக நடந்து வருகின்றன. விரைவில் திரையரங்குகளை அலங்கரிக்க வரும் பரிமளா & கோ, ரசிகர்களுக்கு ஒரு புதுமையான பொழுதுபோக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

லைகா புரொடக்ஷன்ஸ், தமிழ் குமரன் புரொடக்ஷன்ஸ் மற்றும் பசங்க புரொடக்ஷன்ஸ் இணைந்து வழங்கும் இந்தப் படத்திற்குப் பிரதீப் ஈ. ராகவ் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்கத்தை டி. ராமலிங்கம் கவனிக்க, சண்டைப் பயிற்சிகளை கலாய் கிங்ஸன் வடிவமைத்துள்ளார். மாஸ் காட்டும் இந்தத் திரில்லர் காமெடி ரகளைக்குத் தயாராகுங்கள்.

Related Posts