அதிரடி அனிமேஷன் அட்வென்ச்சர்! பால்கே விருது பெற்ற ‘தி வைல்ட் கால்’!

அதிரடி அனிமேஷன் அட்வென்ச்சர்! பால்கே விருது பெற்ற ‘தி வைல்ட் கால்’!

ந்தியத் திரையுலகின் பிதாமகன் தாதாசாகேப் பால்கே பெயரில் நடைபெறும் கௌரவமிக்க 16-வது திரைப்பட விழாவில், ‘தி வைல்ட் கால்’ (The Wild Call) திரைப்படம் சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருதைத் தட்டிச் சென்று பெருமை சேர்த்துள்ளது.

ஆட்லர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், நவீத் எஸ் ஃபரீத் மற்றும் அசாருதீன் சுலைமான் இயக்கத்தில் உருவான இந்தப் படம், வெறும் அனிமேஷன் மட்டுமல்ல; இது ஒரு 180° கோணத்திலான பிரம்மாண்டமான வனவிலங்கு சாகசப் பயணம். ராஜ்கிர் ஜூ சஃபாரி வழங்கியிருக்கும் இந்தப் படைப்பு, பார்வையாளர்களைக் காடுகளுக்கே அழைத்துச் செல்லும் அனுபவத்தைத் தருகிறது.

தொழில்நுட்பக் கூட்டணி

லைட்ஸ் ஆன் மீடியாவின் சார்பில் வெங்கி சந்திரசேகர் தலைமையில் உருவான நேர்த்தியான அனிமேஷன் மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் படத்திற்கு உயிர் கொடுத்துள்ளன. ஜிப்ரான் வைபோதாவின் இசை, காட்சிகளுக்குப் பின்னால் ஒரு துள்ளலான உணர்வைச் சேர்க்கிறது.

வனப் பயணம்

இத்திரைப்படம் ஒரு சிங்கம் மற்றும் சில புலிக்குட்டிகளின் கண்கள் வழியாக இந்தியாவின் அழகைத் திரையில் விரிக்கிறது.

  • இந்தியப் பெருங்கடல்

  • மேற்குத் தொடர்ச்சி மலைகள்

  • இமயமலை

  • தார் பாலைவனம்

என இந்தியாவின் பல்லுயிர் பெருக்க மையங்கள் வழியாக இந்தப் பயணம் நகர்கிறது. இந்திய யானை மற்றும் பெருங்குருவி உள்ளிட்ட இருபத்தி மூன்று அரிய உயிரினங்களை மிக நெருக்கமாக அறிமுகப்படுத்துகிறது இத்திரைப்படம்.

விழிப்புணர்வுச் செய்தி

வெறும் பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல், காலநிலை மாற்றம், வாழ்விடப் பாதுகாப்பு மற்றும் மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையிலான சகவாழ்வு குறித்த ஆழமான செய்திகளையும் இந்தப் படம் தாங்கி நிற்கிறது.

பாட்னாவின் ஆர்.சி.சி.எஃப் கோபால் சிங் (IFS) மற்றும் ராஜ்கிர் உயிரியல் பூங்கா சஃபாரியின் இயக்குநர் ராம் சுந்தர் (IFS) ஆகியோரின் சிறப்பான வழிகாட்டுதலில் உருவான இந்தப் படைப்பு, சர்வதேசத் தரத்தில் இந்திய அனிமேஷன் உலகிற்கு ஒரு புதிய அடையாளத்தைப் பெற்றுத்தந்துள்ளது.

Related Posts