“விஷால் சொன்னது சரியா?” விவாத மேடையான ‘எனக்கு என்டே கிடையாது’ பட மேடை!  

“விஷால் சொன்னது சரியா?” விவாத மேடையான ‘எனக்கு என்டே கிடையாது’ பட மேடை!  

கார்த்திக் வெங்கட்ராமன் தயாரிப்பில், விக்ரம் ரமேஷ் இயக்கியுள்ள படம் , ‘எனக்கு என்டே கிடையாது’. இருவரும் முதன்மை கதாபாத்திரத்திலும் தோன்றுகின்றனர்.

கதாநாயகியாக ஸ்வயம் சித்தாவும்,  சிவகுமார் ராஜு, பிச்சைக்காரன் புகழ் முரளி சீனிவாசன், சக்திவேல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

தளபதி ரத்னம் ஒளிப்பதிவு செய்ய,  கலாச்சரண்  இசையமைத்து உள்ளார். ஓம் பிரகாஷ் சண்டைக் காட்சிகளை வடிவமைக்க,  படத்தொகுப்பை வேல்முகனும் கலை வடிவமைப்பை சூர்யாவும் கவனித்துள்ளார்.

அக்டோபர் 6 ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஆக்சன் ரியாக்சன் சார்பில் ஜெனிஷ் இந்தப்படத்தை வெளியிடுகிறார்.

இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் புரமோஷன் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் என யாருமே சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்காமல் படக்குழுவினர் மட்டுமே கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் கார்த்திக் பேசும்போது, “அடிப்படையில் வழக்கறிஞர் என்றாலும் நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தில் தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆகவும் பயிற்சி எடுத்தேன். கடந்த ஏழு வருட தவமாக தற்போது இந்த படத்தை தயாரித்துள்ளேன்” என்றார்.

மேலும், “சமீபத்தில் நடிகர் விஷால் பேசும்போது மூன்று கோடி, நான்கு கோடி வைத்துக்கொண்டு சின்ன படங்களை தயாரிக்கிறோம் என யாரும் வர வேண்டாம் என கூறியிருந்தார். இதுவே ஒரு விதமான சனாதானம் தான்.. இப்படி சொல்ல யாருக்குமே உரிமை இல்லை” என்று ஆவேசமாக கூறினார்.

இப்படத்தின் வெளியிட்டு உரிமையை பெற்றுள்ள விநியோகஸ்தார் ஜெனிஷ் பேசும்போது, “சமீபத்திய நிகழ்வில் நடிகர் விஷால் சின்ன படங்களை எடுப்பவர்கள் தயவு செய்து சினிமாவுக்கு வர வேண்டாம் அதற்கு பதிலாக அந்த காசில் சொத்து வாங்கி போடுங்கள் என்று கூறியதை அவர் சொன்ன ஒரு அறிவுரையாக தான் நான் பார்க்கிறேன். அவர் ஒரு தயாரிப்பாளராக தனது கடந்தகால அனுபவத்திலிருந்து அப்படி கூறியுள்ளார்.

அவர் சொன்னது போல இன்று சின்ன பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்வதிலும் ஓடிடி தளங்களில் விற்பனைக்கு கொண்டு செல்வதிலும் நிறைய சிரமங்கள் இருக்கிறது. லட்சங்களில் எடுக்கப்பட்ட படங்களை விநியோகித்து கூட நல்ல லாபம் பார்த்தேன். அதேசமயம் சமீபத்தில் ஒரு ஐந்து கோடி பட்ஜெட்தில் எடுக்கப்பட்டு வெளியான படம் வெறும் பத்து லட்சம் தான் வசூலித்தது. டாடா, குட் நைட் போன்ற சின்ன பட்ஜெட் படங்கள் நல்ல வசூல் செய்தன என்பதையும் பார்க்க வேண்டும்” என்று கூறினார்.

 

 

 

Related Posts