“கெட்ட வார்த்தை கவிதைகள்!” : ‘இந்தியன் 2’ விழாவில் கமல்!

“கெட்ட வார்த்தை கவிதைகள்!” : ‘இந்தியன் 2’ விழாவில் கமல்!

ஷங்கர் இயக்கத்தில் கமல் நாயகனாக நடிக்கும், இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூலை 12ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.

இந்நிலையில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், நடிகர் சித்தார்த் ஆகியோர் கலந்துகொள்ள நடைபெற்றது.

அப்போது இந்தியன் 2 படத்தின் சென்சார் போர்டு நீக்கிய  காட்சிகள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.  அதற்கு நடிகர் கமல்ஹாசன் பதிலளித்தார். “நான் சிறுவனாக இருந்தபோது கவிதை எழுதினேன்.. அதில் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தினேன். உடனே  பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு புகார் வந்தது. இதிலிருந்து தப்பிக்கவே முடியாது, என்னை வீட்டை விட்டு துரத்தப் போகிறார்கள் என்ற பயத்தில் நான் இருந்தேன். என் அப்பா வந்து நான் என்ன எழுதி இருக்கிறேன் எனப் பார்த்தார்.

“தமிழ் சந்தம், தளை, சீர் எல்லாம் சரி இல்லையே” என்றார். பின் “ஒன்று செய், நீ டாக்டருக்கு படி, இதெல்லாம் பாடமாக மாறிவிடும்” என்றார். உறுப்புகள் பெயர் எல்லாம் அதில் இருக்கும், வேறென்ன கெட்ட வார்த்தை?

அல்லது ஆண் மக்கள் தாங்கள் செய்ய முடியாத தொழிலை, பெண்கள் செய்யும் பொறாமையில், அதனைப் பற்றி இழிவாகப் பேசுவது தான் கெட்ட வார்த்தை. இவர்களால் செய்ய முடிந்திருந்தால் அது கெட்ட வார்த்தையாகவே மாறி இருக்காது.

நான் சென்சாருக்கு விடுக்கும் தூது இது. ஜெயகாந்தன் மாதிரியாக இருக்கும் ஒரு கலைஞன் தன் கதையை கதாபாத்திரத்தை ஆழமாகப் பதிவு செய்வதற்கு இந்தக் கெட்ட வார்த்தைகள் மிகவும் பயன்படும்.

இந்தியன் படத்துக்கு மட்டுமில்லை, நான் விடுப்பது இனி எழுதப் போகும் படங்களுக்கு. நல்லதையும் கெட்டதையும் பக்கத்தில் பக்கத்தில் வைத்தால் தான் இது உப்பு, இது காரம் என்று தெரியும். நீங்கள் தடுப்பதால் என் பிள்ளைகள் தெருவில் கெட்ட வார்த்தை கேட்காமல் தப்பிக்க மாட்டார்கள். நம்முடைய சுற்றுச்சூழல் தான் எல்லாவற்றையும் முடிவு செய்யும். வன்முறையை சந்தோஷமான நிகழ்வாக படங்களில் காட்டாமல், அதை வலிப்பது போல் காட்டினால் வாழ்க்கையில் அவை நிகழாது.. இது ஒரு தூது. அவ்வளவு தான்” என்றார்.

Related Posts