‘பாலன் த பாய்’: கேன்ஸ் விழாவில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநரின் அடுத்த படைப்பு!
மலையாள சினிமாவின் ‘ரூட்’ இப்போது பிரான்ஸ் வரை நீண்டுவிட்டது! ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையும் மிரள வைத்த இயக்குநர் சிதம்பரம், இப்போது தனது அடுத்த அதிரடியான ‘பாலன் த பாய்’ (Balan the Boy) படத்துடன் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவிற்குச் செல்கிறார்.
உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவின் ‘மார்ச் டு ஃபிலிம்’ (Marché du Film) பிரிவில், வருகிற மே 14-ஆம் தேதி இந்தப் படம் திரையிடப்பட உள்ளது. ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ தந்த பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு சிதம்பரம் இயக்கும் படம் என்பதால், இப்போதே எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது.
கூட்டணியே மாஸா இருக்கே!
-
இயக்கம்: சிதம்பரம் (மஞ்சும்மல் பாய்ஸ் புகழ்)
-
எழுத்து: ஜித்து மாதவன் (ஆவேஷம் புகழ்)
-
தயாரிப்பு: KVN புரொடக்ஷன்ஸ் & தெஸ்பியன் ஃபிலிம்ஸ்
கதை என்ன? அடையாளம் தேடும் ஒரு மனிதனின் பயணம், உயிர்வாழ நடத்தும் போராட்டம், எல்லாவற்றிற்கும் மேலாக தாய் – சேய் இடையிலான ஆழமான பிணைப்பு என ஒரு எமோஷனல் பேக்கேஜாக இந்தப் படம் உருவாகியுள்ளது. “சொற்களால் விவரிக்க முடியாத உணர்வுகளைப் பேசுபவர்களுக்காகவே இந்தப் படம்” என இயக்குநர் சிதம்பரம் நெகிழ்ச்சியோடு சொல்லியிருப்பது கூடுதல் ஆர்வம் காட்ட வைக்கிறது.
உலக அரங்கில் மலையாள சினிமா: மலையாளத் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் எல்லைகளைக் கடந்து சாதனை படைத்து வரும் வேளையில், ‘பாலன் த பாய்’ அந்தப் பெருமையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் என தயாரிப்பாளர்கள் வெங்கட் கே. நாராயணா மற்றும் சைலஜா தேசாய் ஃபென் நம்பிக்கையோடு தெரிவிக்கின்றனர்.
லோக்கல் ஹிட் அடித்தவர்கள் இப்போது குளோபல் ஹிட்டுக்குத் தயாராகிவிட்டார்கள்! கேன்ஸ் திரையிடலுக்குப் பிறகு இந்தப் படம் உலக அளவில் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

