‘வீர தீர சூரன்’ விக்ரம் – லுங்கி – பெரியார், கருணாநிதி, ஸ்டாலின், ஜெயலலிதா சுவாரஸ்ய வரலாறு!

‘வீர தீர சூரன்’ விக்ரம்  – லுங்கி  – பெரியார், கருணாநிதி,  ஸ்டாலின், ஜெயலலிதா சுவாரஸ்ய வரலாறு!

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடிக்கும் வீரதீர சூரன் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் பல்வேறு ஊர்களில் சிறப்பாக நடந்தன. இதில் திருச்சியில் நடந்த நிகழ்ச்சி கூடுதலாக கவனத்தை ஈர்த்தது. கல்லூரி ஒன்றில் நடந்த அந்நிகழ்ச்சியில், கைலி அணிந்து மேடையேறினார் நாயகன் விக்ரம். கைலியுடனேயே மாணவர்களுடன் ஆட்டம், பாட்டம்.. செல்பி என ஜமாய்த்தார்.

சு.பொ.அகத்தியலிங்கம்

இதைப் பார்த்தவுடன், கைலி குறித்து என நினைவலைகள் ஓடின.

பொதுவாக கைலி அணிவது என்பது இன்னமும் சமூகத்தில், இரண்டாம் தரமாக கருதப்படுகிறது.

மார்க்கிசயவாதியும் எழுத்தாளருமான சு.பொ.அகத்தியலிங்கம் ‘தீக்கதிர்’ நாளிதழில் எழுதிய ஒரு கட்டுரையில், “80 களில் கைலி கட்டிக் கொண்டு மாலை வேளைகளில் தெருவில் நிற்கும் இளைஞர்களைப் பிடித்து அடிப்பார் சென்னை வியாசர்பாடி காவல்துறை துணை ஆய்வாளர் . அதிலும் அப்பகுதியில் பர்மாவிலிருந்து வந்த அகதிகள் அதிகம் . அவர்களிடம் கைலி அணியும் வழக்கம் மிகப் பரவலாக இருக்கும் .இந்நிலையில் இளைஞர்களைத் திரட்டி காவல் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போராடியது என் நினைவில் பசுமையாக உள்ளது” என்று குறிப்பிடுகிறார்.

2022ம் ஆண்டும் இந்த நிலைதான் தொடர்கிறது.

நடிகர் சூர்யா நடித்து வெளியான ஜெய் பீம் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது அல்லவா? ராஜாக்கண்ணு என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்த நபரின் வாழ்க்கையில் நடந்த உண்மையான சம்பவத்தை கொண்டுதான் அந்த படம் தயாரிக்கப்பட்டது. அந்த நிஜ ராஜாகண்ணுவின் உறவினர் குளஞ்சியப்பன், சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க சென்றார்.

குளஞ்சியப்பன்

அப்போது அவர் லுங்கி கட்டியிருந்த காரணத்தால், அவரை காவல் துறையினர் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து எதிரே இருந்த ஒரு கடையில் வேட்டி ஒன்றை வாங்கி அணிந்து கொண்டு வந்தார். அதன் பிறகுதான் அவரை காவல் துறையினர் உள்ளே அனுப்பினர்.

இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.  சமூகவலைதளத்தில் பலரும், “கைலி என்பது எளிய மக்களின் உடை. அதை அணிந்ததால் அலுவலகத்தின் உள்ளே விட மறுப்பதா” என கண்டனம் தெரிவித்தனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “லுங்கி தடை செய்யப்பட்ட ஆடையா? சாமானிய மக்கள் காவல் அலுவலகத்துக்கு வரக்கூடாது என மறைமுகமாக சொல்லப்படுகிறதா?” என்று ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு நேர் எதிர்மறையான ஒரு சம்பவம்…

லுங்கி அணிந்தோரை குற்றவாளிகளாக பார்க்கும் போலீசார், தாங்களே லுங்கி கட்டி குற்றவாளிகளைப் பிடித்த சுவாரஸ்யம் அது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கடலையூர் சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு வாகன பதிவு, உரிமம் மாற்றம், புதிய ஓட்டுநர் உரிமம், பழைய ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்டவற்றிற்கு லஞ்சம் பெறப்படுவதாக தூத்துக்குடி லஞ்ச ஓழிப்பு போலீஸாருக்கு புகார்கள் சென்றன.

இந்நிலையில், ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு இருவர் வந்தனர். காக்கி சட்டையும், கையிலும் அணிந்து ஆட்டோ டிரைவர்கள் போல வந்தனர். ஆகவே ஆர்.டி.ஓ. அலுவலர்கள் இவர்களை பொருட்படுத்தவில்லை.

இந்த இருவரும், அங்கு நடந்த பணப்பரிமாற்றங்களை கவனித்துக்கொண்டே இருந்தனர். மேலதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அடுத்த சில நிமிடங்களில் உயர் அதிகாரிகளும், காவலர்களும் உள்ளே புகுந்து லஞ்ச பேர்வழிகளைக் கைையும் லஞ்சமுமாகப் பிடித்தனர்.

ஜெயக்குமார்

ஆனால் லுங்கி விவகாரம் இப்போது வரை தொடரவே செய்கிறது. 2023ல் இதே போல ஒரு பிரச்சினை எழுந்தது…

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் டி.எம்.கரிகாலன். ஓய்வுபெற்ற விமானப்படை வீரர். இவர், அலுவலகத்துக்கு வருபவர்கள் கைலி, கால் சட்டை, நைட்டி அணிந்து வரக்கூடாது என்ற அறிவிப்பை அலுவலகத்தின் முகப்பில் ஒட்டி வைத்திருந்தார்.

இதனிடையே, மகனுக்கு சாதி சான்று கேட்டு வந்த விவசாயி ஒருவர், கைலி அணிந்து இருந்ததால், அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படாமல் காக்க வைக்கப்பட்டார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இதுவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, கைலி அணிந்தவரை அலுவலகத்தின் உள்ளே அனுமதிக்க மறுத்த வி.ஏ.ஓ. கரிகாலன், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இங்கு மட்டுமல்ல… வளைகுடா நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸிலேயே லுங்கியால் சர்ச்சை எழுந்தது.

2010ம் ஆண்டு, அந்நாட்டின் தலைநகர் ஷார்ஜாவில், பொது இடங்களில் லுங்கி அணிந்து வருவது தடை செய்யப்பட்டது. இதற்கான உத்தரவு வெளிப்படையாக அளிக்கப்படவில்லை என்றாலும், பொது இடங்களில் லுங்கி அணிந்து வந்தவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டனர்.. சிலர் கைது செய்யப்பட்டதும் நடந்தது.

அப்போது, “லுங்கி அணிவது இஸ்லாமியர் வழக்கம்தானே… இஸ்லாமிய நாடான யு.ஏ.இ. -யில் ஏன் இப்படி” என்ற கேள்வியை பலர் எழுப்பினர்.

இது குறித்து சிலர் “உண்மையில் லுங்கி என்பது எந்த மதத்துக்கும் சொந்தமானதல்ல.

இந்தியாவில் கேரளாவில் மத வேறுபாடு இன்றி, பெண்களும் லுங்கி கட்டுவது உண்டு. அதே போல ஈழப்பகுதியிலும் பெண்களும் லுங்கி கட்டுவார்கள்.

மியான்மர் உள்ளிட்ட நாடுகளிலும் பெண்களும் லுங்கி அணிவார்கள்” என்றனர்.

பர்மிய பெண்கள் லுங்கி ஆடையில்..தவிர, “லுங்கி உருவானது மியான்மர் நாட்டில்தான். அங்கு மக்களின் மொழியான, பர்மிய மொழியில் ‘லூஜீ’ என்று அழைக்கப்படமும். அது மருவி, லுங்கி ஆனது.

பிரபல சங்கு மார்க் லுங்கி நிறுவனம் முதலில் பர்மாவில்தான் தொடங்கப்பட்டது. அங்கு கொப்பரை வியாபாரம் செய்துவந்த இப்ராகிம் என்பவரின் மகன் அபூபக்கர் அதைத் தொடங்கினார். இப்போதும் சங்கு மார்க் லுங்கி லேபிளில் பர்மி எழுத்துக்களும் இருக்கும்.  கம்பெனியின் பெயர் KE MD ABOOBACKER Co. அதில் KE என்பது கொப்பரை இப்றாகிம் என்பதின் சுருக்கம்” என்பவர்களும் உண்டு.

“ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில், லுங்கி போன்ற ஆடை ஒன்றை அணிவது வழக்கம். அது கண்கா (Kanga) மற்றும் கைடெங்கி (Kitenge or chitenge) என்று அழைக்கப்படும். அது கைலி ஆகி இருக்கலாம்.

தூத்துக்குடி பகுதியில் லுங்கியை சாரம் என்பார்கள்.

சரோங் (Sarong) என்ற பாலி மொழியில் இருந்து இது வந்திருக்கலாம். இந்தோனேஷியா மற்றும் பாலி கோயில்களின் உள்ளே செல்ல சாரோங் என்ற லுங்கி மாதிரியான உடையை கட்டாயம் அணிய வேண்டும். இல்லையேல் கோயில் உள்ளே அனுமதி மறுக்கப்படும்” என்கிறது ஒரு முகநூல் பதிவு.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, திராவிட இயக்க தலைவர்கள் லுங்கி அணிவதை கவுரவமாகவே நினைப்பர்.

பெரியார் – கருணாநிதி – மு.க.ஸ்டாலின்முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி லுங்கி கட்டும் பழக்கம் உடையவர். நள்ளிரவில் கைது செய்யப்பட்ட போதுகூட அவர் லுங்கி தான் அணிந்திருந்தார். அதே போல தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓய்வு நேரத்தில் லுங்கி அணிந்து போஸ் கொடுத்த காட்சி பிரபலமானது.

தவிர, லுங்கி – அரசியல் தலைவர் என்றாலே தந்தை பெரியார்தான் நினைவுக்கு வருவார். அவர்தான் லுங்கியை பொது ஆடையாக்கினார் எனலாம். ஆம்.. தனது மேடைப் பேச்சுகளின்போதே லுங்கி அணிந்திருப்பார்.

“தனது உடல் கருதி மட்டுமல்ல… பொது நலத்துக்காவும் பெரியார் லுங்கி அணிந்து மேடையேறினார். லுங்கி என்பது எளிய மக்களின் உடை. அந்த மக்களை புறக்கணிக்கும் போக்கு நமது சமுதாயத்தில் நிலவுகிறது. அதை எதிர்க்கும் ஒரு ஆயுதமாக தனது லுங்கி ஆடையை பெரியார் முன்வைத்தார்” என்பார்கள்.

பெரியார், “ஆண் பெண் இருக்கும் தோற்றத்தில் வேறுபாடு கூடாது. ஆண்களைப் போல பெண்களும் கிராப் வெட்டிக்கொள்ள வேண்டும். ஆண்களைப்போலவே பேண்ட், கைலி அணிய வேண்டும்” என்றார்.

மணியம்மை – பெரியார்பெரியாரின் வற்புறுத்தலின் பேரில் மணியம்மையாரும் கைலி அணிந்தார். ஆனால் சில காலத்தில் விட்டுவிட்டார்.

இன்னொரு விசயம்… வேட்டியில் இருந்து வந்தது லுங்கி என பலரும் கூறுகிறார்கள் அல்லவா… அந்த வேட்டிக்கே இங்கே தடை இருந்தது.

குறிப்பிட்ட சாதியினர் வேட்டி கட்டக்கூடாது, தோளில் துண்டு அணியக்கூடாது என்றெல்லாம்கூட நிர்ப்பந்தங்கள் இருந்தன என்பது இந்தக்கால இளைஞர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். அதுதான் வரலாறு.

தோளில் துண்டு போடவும் செருப்பணியவும், திராவிட இயக்கத்தினர், பொதுவுடமை இயக்கத்தினர் போராடி உரிமை பெற்றுத் தந்தனர்.

பெண்களில் கொசுவம் வைத்து சேலை கட்டவும், ஏன் மேலாடை அணியவும்கூட சாதி ரீதியான கட்டுப்பாடுகள் இருந்தன என்பதுதானே உண்மை!

வெளிநாட்டில் வேட்டி அணிந்த காந்தி

வேட்டி மற்றும் சிறு மேலாடையுடன் உலகையே சுற்றிய காந்தியின்,காந்தி தேசத்தில் தான் இந்த நிலை.

அதுவும் , சாதி, மதத்தை மீறி, வேட்டி கட்டி வந்தால் யாருக்கும் அனுமதி இல்லை என்று தமிழ்நாட்டில் உள்ள சில சங்கங்கள் விதிகளையே வகுத்து இருந்தன.

மிகச் சமீபத்தில்.. 2014ல்தான் அந்த நிலை சட்டம் மூலம் மாற்றப்பட்டது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்பில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஹரி பரந்தாமன் மற்றும் இரு உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் வேட்டி உடுத்திச் சென்றனர். அதனால் அவர்கள் கிளப்புக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது!

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

உடனே அப்போதைய முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, ஒரு சட்டத்தையே கொண்டு வந்தார்.

தமிழ்நாடு பொது இடங்களில் நுழைவு (உடை மீதான தடை நீக்கம்) 2014 சட்டம் என்பதுதான் அது.

‘மனமகிழ் மன்றம், உணவகங்கள், திரையரங்குகள், பெரும் வணிக வளாகங்கள், அவைக்கூடங்கள், விளையாட்டு அரங்குகள், அரசால் அறிவிக்கப்படும் இடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் வேட்டி அணிந்து வருபவர்களுக்குத் தடை விதித்தால், ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்’என்பதே அந்த அதிரடி சட்டம்.

அதே நேரம், முன்னதாக இந்த சர்ச்சை குறித்து தமிழக சட்டப் பேரவையில் அறிக்கை வாசித்த ஜெயலலிதா, “குறிப்பிட்ட கிளப்பின் உள்விதிகளில் வேட்டிக்கு தடை விதிக்கப்படவில்லை. லுங்கி, பர்முடாஸ் போன்ற உடைகளுக்குத்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது” என்றார்.

ஆக, அந்த – அது போன்ற கிளப்புகளில் லுங்கி அணிந்து செல்ல இன்னமும் தடை நீடிக்கிறது. இதை ஏனோ யாரும் பொருட்படுத்தவில்லை. ஆச்சரியம்தான்.

கோயில்களில் லுங்கிக்கு இன்றளவும் தடை உண்டு.

ஜெயலலிதா

கடந்த 2025ம் ஆண்டு இது குறித்த வழக்கு ஒன்றில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை ஒரு உத்தரவை பிறப்பித்தது.

அதில், “ஜீன்ஸ், லெகிங்ஸ், டிரவுசர் போன்ற ஆடைகளை அணிந்து வருவோரை ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழ்நாட்டு கோயில்களுக்குள் அனுமதிக்க கூடாது: என்று தெரிவித்து இருந்தது.

இந்த உத்தரவு, தமிழ்நாட்டு கோயில் நிர்வாகிகளுக்கு தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சுற்றறிக்கை அனுப்பியது. கோயில்களில் இது குறித்த அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டு உள்ளன.

வெளிப்படையாக லுங்கி என குறிப்பிடப்படாவிட்டாலும், அர்த்தம் அதுவே.

” காவி, நீலம், பச்சை சாயம் தோய்த்த வேட்டிகளை அணிந்து இங்கு கோவிலுக்குள் செல்லத் தடையில்லை . ஆனால் கட்டம் போட்ட வேட்டியை மூட்டித்தைத்து பாதுகாப்பாக அணிந்தால் அது லுங்கியாகிவிடுகிறது, கோவிலுக்குள் அனுமதிகிடையாதா” என்ற கேள்விக்கு பதில் இல்லை.

இன்னொரு விசயம்… கோயில்களில் லுங்கி அணிந்து வரக்கூடாது என்று உத்தரவு இருந்தாலும், ஒரு கோயிலில் மூலவர் சிலையே கைலி அணிந்து செல்வதும் ஆச்சரிய சம்பவமும் உண்டு.

கோயிலில் அறிவிப்பு

திருவரங்கம் அரங்க நாதர் கோயிலில்தான் இந்த நடைமுறை உள்ளது.

இங்கே பீபி நாச்சியார் சந்நிதி என்று உண்டு. துலுக்க நாச்சியார் என மக்கள் அழைப்பர். இந்த அம்மனை காண, அரங்கநாதர் கைலியுடன் செல்லும் சடங்கு இன்றும் தொடர்கிறது.

(இதற்காக – வரலாறு, நம்பிக்கை சார்ந்து – சொல்லப்படும் சம்பவங்கள் சுவாரஸ்யமானவை… இணையத்தில் தேடிப் படியுங்கள்..)

சு.பொ.அகத்தியலிங்கம் அவர்களின் கட்டுரை ஒன்றை குறிப்பிட்டேன் அல்லவா.. அதில் அரவ் தரும் இன்னொரு சுவாரஸ்ய தகவல்..

“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக இருந்த தோழர் ஏ.நல்லசிவன் கியூப நாட்டிற்கு சென்றிருந்த போது ஊரைச் சுற்றிப் பார்க்கும்போதும் பொது நிகழ்வொன்றில் கலந்து கொள்ளும் போதும் சாரம் அணிந்ததையும் பெருமை பொங்கக் கூறினார் .

நல்லசிவம் – ஞாநி

அங்கே எல்லா உடைக்கும் சமமரியாதையே வழங்கப்பட்டதாகக் கூறினார் . இவ்வளவுக்கும் கியூப தேசிய உடை சாரம் அல்ல; பொதுவாக வெளிநாட்டு விருந்தினர் அவரவர் நாட்டு தேசிய உடையிலோ அல்லது கோட்டு சூட்டிலோதான் இருப்பது மரபு . மரபை தோழர் நல்லசிவன் மீறினார் . கியூபா அதனை அங்கீகரித்தது . அது மட்டுமல்ல பல நேரங்களில் மாநிலக்குழு அலுவலகத்தில் – மாநிலக்குழு கூட்டங்களில் – மாநாடுகளில் தோழர் ஏ . நல்லசிவனை சாரத்தில் பார்க்கலாம்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

துலுக்கநாச்சியார் சந்நிதி

அதே மறைந்த பத்திரிகையாளர் ஞாநி, அதி தீவிர கைலி ஆதரவாளர். பொதுக்கூட்டங்களிலும் (பெரியார் போல) கைலி அணிந்து வருவது வழக்கமாக வேண்டும் என வலியுறுத்தியவர். அவரும்கூட அப்படி கலந்துகொண்டு இருக்கிறார். ஒரு புத்தகக் கண்காட்சியில் கைலியுடன் அவர் கலந்துகொண்டதைப் பார்த்த நினைவு இருக்கிறது.

ஆய்வாளர்கள் சிலர், “தமிழனின் வெள்ளை வேஷ்டி, சிந்து சமவெளி நாகாரிகத்தின் வழி வந்தது. தோத்தி எனும் சொல் வேதத்தை கற்று பூஜை செய்பவரும், மேட்டுக்குடியினரும் அணிந்து வந்த வெள்ளை துண்டை குறித்தது. தமிழில் தோத்தி வேஷ்டி ஆனது. இதனை குறிப்பிட்ட சமூகம் மட்டுமே உடுத்தியது. தூசி படியாமல், அலுங்காமல் குலுங்காமல் இருப்பவரின் ஆடை வேஷ்டிதான்.

அதேசமயம், நெற்றி வியர்வை சிந்த உழைப்பவர்கள் பழுப்பு நிறத் துண்டை அணிந்திருந்தார்கள். பழுப்பாகவும், சற்று அழுக்கு படிந்தும் இருக்கும் அந்த துண்டு, அவர் யார் எந்த சாதி என்பன போன்ற விஷயங்களை அவரைப் பார்த்ததும் மேட்டுக்குடிக்கு தெரிந்து கொள்ள உதவியது” என்கிறார்கள்.

மேலும், “இஸ்லாமியர்களால் நமக்கு அறிமுகமானது, வண்ண லுங்கி. பல நிறங்கள் ஒருங்கிணைந்த இந்த உடை அனைவரையும் கவர்ந்தது” என்கின்றனர்.

லுங்கியால் பல பயன்கள் உண்டு.

உழைக்கும் வர்க்கம் வேலை பார்க்கும் நேரத்தில் எங்கேனும் பட்டு இழுத்தாலும் சீக்கிரம் கிழியாது. லுங்கியில் அவர்கள் தங்களது வியர்வையை துடைப்பார்கள். வெயிலில் முகத்தில் தண்ணீர் ஊற்றி அதில் முகத்தை துடைத்துக் கொள்வார்கள். சாப்பிட்ட பின்னர் கையை துடைத்துக் கொள்வார்கள். சாலையோரத்தில் உறங்கும் மக்கள் குளிர் நேரங்களில் அதனை அப்படியே இழுத்து போர்த்துக் கொள்வார்கள்.

எப்படியோ… இன்னமும் சமுதாயத்தில் முழு அங்கீகாரம் பெறாத லுங்கியை, மேடையில் ஏற்றிய நடிகர் விக்ரம் பாராட்டுக்குரியவர்தான்!

காரணம், திரைப்படத்தில் லுங்கி கட்டி நடிப்பது பெரிய விசயம் இல்லை. நிஜத்தில், தங்களது  இமேஜ் என்கிற வட்டத்தில் சுழல்பவர்கள் நடிகர்கள். அந்த இமேஜை மீறி, லுங்கியில் தோன்றிய விக்ரமை பாராட்டலாம்தானே…!

(யப்பா.. எங்க ஆரம்பிச்சு எங்க முடிக்க வேண்டி இருக்கு!)

– டி.வி.சோமு