’அறம் செய்’ திரைப்பட விமர்சனம்: அறமா, அரமா?

’அறம் செய்’ திரைப்பட விமர்சனம்: அறமா, அரமா?

மருத்துவ உயர்கல்வி மாணவரான நாயகன் பாலு எஸ்.வைத்தியநாதன், தான் படிக்கும் அரசு மருத்துவக் கல்லூரி தனியாரிடம் ஒப்படைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சக மாணவர்களுடன் சேர்ந்து போராடுகிறார். இதனால், அவருக்கு பல்வேறு மிரட்டல்கள்  வருகின்றன.

இன்னொரு பக்கம், நாயகி அஞ்சனா கீர்த்தி ‘அறம் செய்’ என்ற அரசியல் அமைப்பின் மூலம், நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறார். இதனால், அவருக்கும் பல்வேறு எதிர்ப்புகள் வருகிறது. இதனால், தங்கள் தரப்பில் பல இழப்புகளை சந்தித்தாலும், கொள்கையில் உறுதியாக நிற்கும் இவர்களின் போராட்டம் வென்றதா  என்பது தான் படத்தின் கதை.

கதை, வசனம், திரைக்கதை எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்திருப்பதோடு, கதையின் நாயகனாகவும் நடித்திருக்கும் பாலு எஸ்.வைத்தியநாதன், சமூகப்பிரச்சனைப் பற்றி பேசுவதற்கு பதிலாக சமூகமே பிரச்சனையில் தான் இருக்கிறது, என்ற ரீதியில் படம் முழுவதும் பல விசயங்களை, பல மணி நேரம் பேசியிருக்கிறார்.
மாணவர்களுடன் சேர்ந்து அகிம்சை வழியில் போராடும் காட்சிகளில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் பாலு எஸ்.வைத்தியநாதன், அவ்வபோது மேகாலியுடன் டூயட் பாடல் பாடி, தனது நாயகன் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்க முயற்சி செய்திருக்கிறார்.

பாராட்ட வேண்டிய முயற்சிதான். ஆனால் பக்கம் பக்கமான வசனங்கள், நாடகம் போல அமைக்கப்பட்ட திரைக்கதை, அதே போன்று நடித்திருக்கும் நடிகர்கள், வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட பாடல்கள் என மைனஸ்கள் உள்ளன. ஆனாலும் அவரது சமூக ஆர்வத்துக்காக பொறுத்துக்கொள்ளலாம்.

கம்பீரான கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் அஞ்சனா கிர்த்தி நடித்திருக்கிறார். சில இடங்களில் அவரது நடிப்பில் செயற்கைத்தனம் தெரிந்தாலும், அவரது தோற்றம் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது.

காமெடி நடிகரான லொள்ளு சபா ஜீவா, இந்த படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்து ரசிக்க வைத்து இருக்கிறார்.பாலு எஸ்.வைத்தியநாதனின் காதலியாக நடித்திருக்கும் மேகாலி, பாடல்களுக்கு நடனம் ஆட மட்டுமே பயன்பட்டிருக்கிறார்.

நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்ட அனிதா பற்றி பல திரைப்படங்களில் பேசியிருக்கிறார்கள், ஆனால் இந்த படத்தில் அந்த அனிதாவையே பேச வைத்திருக்கும் காட்சி பாராட்டும்படி இருக்கிறது. இப்படி சில காட்சிகள் இருந்தாலும், படத்தின் நீளம் 3 மணி நேரத்திற்கு மேலாக இருப்பது ரசிகர்களின் பொறுமையை மிகவும் சோதித்து விடுகிறது.

ஆனாலும் நல்ல நோக்கத்துக்காக எடுக்கப்பட்ட படம் என்பதால், பார்க்கலாம்.

ரேட்டிங்: 2.8 /5

Related Posts