‘சண்டக்காரி’: விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் !
‘த்ரிஷ்யம்’ திரைப்படத்தின் மூலம் இந்திய திரை உலகையே திரும்பிப் பார்க்க வைத்த முன்னணி இயக்குனர் ஜீத்து ஜோசப் கதையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சண்டக்காரி’. காதல், காமெடி, மோதல், குடும்ப உணர்வுகள் என அனைத்து அம்சங்களையும் சரியான அளவில் கலந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த ரொமான்டிக் காமெடி குடும்பத் திரைப்படம், ரசிகர்களுக்கு ஒரு முழுமையான என்டர்டெயின்மென்ட் விருந்தாக அமையும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பிரபல இயக்குனர் ஆர். மாதேஷ் திரைக்கதை மற்றும் வசனம் எழுதி இப்படத்தை இயக்கியுள்ளார். புன்னகை பூ கீதா இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் கதை லண்டனில் இயங்கி வரும் முன்னணி சாப்ட்வேர் நிறுவனத்தை மையமாகக் கொண்டு நகர்கிறது. ‘சிவாஜி’ படப் புகழ் ஸ்ரேயா, அந்த சாப்ட்வேர் நிறுவனத்தின் கெத்தான உயர் அதிகாரியாக நடித்துள்ளார். அதே நிறுவனத்தில் பணிபுரியும் சாப்ட்வேர் ஊழியராக கதாநாயகன் விமல் நடித்துள்ளார். அதிகாரி – ஊழியர் என இருவரும் முற்றிலும் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் நிலையில், இவர்களுக்கு இடையே உருவாகும் சுவாரஸ்யமான சம்பவங்களும், சுடச்சுட நடக்கும் மோதல்களும், எதிர்பாராத திருப்பங்களும் கதையை மிக விறுவிறுப்பான பாதையில் நகர்த்துகின்றன.
காதல், கோபம், ஈகோ என இருவருக்கும் இடையேயான ‘சண்டை’தான் படத்தின் மிகப்பெரிய பலமாகவும் சுவாரஸ்யமாகவும் அமைந்துள்ளது. இந்த இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு முழிக்கும் கதாபாத்திரத்தில் நகைச்சுவை நடிகர் சத்யன் நடித்துள்ளார். ஒவ்வொரு சூழ்நிலையிலும் விமல் – ஸ்ரேயா இடையேயான மோதலில் சிக்கிக்கொள்ளும் அவரது கதாபாத்திரம், திரையரங்குகளில் சிரிப்பு மழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமல் – ஸ்ரேயா – சத்யன் ஆகிய மூவரின் கூட்டணி திரையில் ஒரு மிகப்பெரிய காமெடி கலாட்டாவை உருவாக்கியுள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
மேலும், இப்படத்தில் முன்னணி மூத்த நடிகர்களின் பங்களிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்க்கிறது. நடிகர் பிரபு குணச்சித்திர வேடத்தில் சிறப்பாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மூத்த நடிகை கே.ஆர். விஜயா மற்றும் தயாரிப்பாளர் புன்னகை பூ கீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நகைச்சுவை நடிகர் கிரேன் மனோகர் தன் பங்குக்கு நகைச்சுவை வேடத்தில் கலக்கியுள்ளார். இவர்களுடன் ‘கடலோர கவிதைகள்’ புகழ் ரேகா, ‘மஹதீரா’ படத்தின் வில்லன் நடிகர் தேவ் கில், உமா பத்மநாபன், மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.
படத்தின் தொழில்நுட்பக் குழுவிலும் திரையுலகின் முன்னணி கலைஞர்கள் கை கோர்த்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் அம்ரீஷ் துள்ளலான இசையமைத்துள்ளார். குருதேவ் ஒளிப்பதிவை மேற்கொள்ள, தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்புப் பணிகளைக் கவனித்துள்ளார். ஐய்யப்பன் கலை இயக்கம் செய்ய, அதிரடி சண்டைக்காட்சிகளுக்கு கணல் கண்ணன் சண்டைப்பயிற்சி அமைத்துள்ளார். ஹபீப் நடனங்களை எனர்ஜெட்டிக்காக வடிவமைத்துள்ளார்.
காதலில் ஆரம்பித்து, சண்டையில் சிக்கி, காமெடியில் கலக்கும் இந்த ‘சண்டக்காரி’ திரைப்படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாகியுள்ளது. விமல் – ஸ்ரேயா இணைந்து நடிக்கும் இந்த புதிய கூட்டணி, திரையரங்குகளில் ரசிகர்களுக்கு கலகலப்பான அனுபவத்தைத் தரும். குடும்பத்துடன் சென்று ரசிக்கக்கூடிய முழு நீள நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகியுள்ள ‘சண்டக்காரி’ விரைவில் திரைக்கு வரவுள்ளது.

