“பிறர் துயரை காசாக்க வேண்டுமா?” : ஊடகத்தினருக்கு தயாரிப்பாளர் சங்கம் ஆதங்க வேண்டுகோள்!
“ஊடகங்கள் கார்களின் உள்ளேயும்.. நடுவீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் உடலையும் ஏன் படம் பிடிக்க வேண்டும்?!
அதுவும் முண்டியடித்துக்கொண்டு துக்க முகங்களைக் காட்டுவதில் அப்படி என்ன பேரானந்தம் கிடைத்துவிடப் போகிறது?!” என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் ஆதங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயல் தலைவர் டி.ஜி.தியாகராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “அன்பிற்குரிய ஊடக நண்பர்களுக்கு, மரணம் என்பது எல்லோருக்கும் நிகழக்கூடிய ஒன்று. அது இயற்கையின் தீர்மானத்திற்குட்பட்டது என்பதை இவ்வுலகில் பிறந்த எல்லா உயிர்களும் அறியும். ஆறறிவு கொண்ட மனிதன் இன்னும் சற்றே அதிகமாகவே அதை உணர்ந்தவன்.
மரண வீடுகள் மௌனிக்கப்படவும்… துயரத்தைப் பகிர்ந்துகொள்ளவும், துயர் கொள்ளவும் வேண்டியவை. யாரோ இறந்துபோனார்… எனக்கும் அவருக்கும் என்ன? ஒருவரின் அழுகையோ, துயரத்தை வெளிப்படுத்தும் விதத்தையோ ஏன் இவ்வளவு வெட்ட வெளிச்சமாக்க வேண்டும்? ஒருவரின் துயர் நமக்கு காசாகத்தான் வேண்டுமா? பார்வையாளர்களைக் கொண்டு வரும் என்ற எண்ணம் எத்தனை இரக்கமற்றது? கொடியது?! நாம் மற்றொருவரின் மரணத்தையோ, இயலாமையையோ கொண்டாடும் மனநிலைக்கு வந்துவிட்டோமோ என்ற கவலை வலுக்கிறது.
