தமிழ்த்தாய் கோயிலுக்குச் செல்கிறார் விஜய்?
நடிகர் விஜய் தலைமையிலான, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை – அக்டோபர் 27 ஆம் தேதி – விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் நடைபெறவுள்ளது.
கட்சியின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு, பல்வேறு குழுக்களை அமைத்து விஜய் தீவிரமாக கண்காணித்து வருகிறார். மாநாட்டின் நுழைவாயில் கோட்டையின் மதில் சுவர் வடிவில் அமைக்கப்பட்டு அதில் இரண்டு யானைகள் இருபுறமும் பிளிரும் வகையில் நுழைவாயில் அமைக்கப்பட்டு உள்ளது.
மாநாட்டு மேடையின் அருகே பெரியார், காமராஜர், அம்பேத்கர், அஞ்சலை அம்மாள், விஜய் கட்அவுட்கள் வைக்கப்பட்டு உள்ளன. மாநாடு மேடையில் “வெற்றி கொள்கை திருவிழா” என்கிற வாசகத்துடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், சேர, சோழ, பாண்டியரோடு தமிழ்த்தாய்க்கும் கட் அவுட் வைக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய போது அதற்கான விளக்கத்தை மாநாட்டில் சொல்வதாக தெரிவித்திருந்தார் விஜய். இதனால் மாநாட்டிற்கு தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் கட்சிக் கொள்கையை மாநாட்டில் விஜய் அறிவிக்க இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் மாநாடு வெற்றி பெற வேண்டி சென்னை கொரட்டூர் சாய் பாபா கோயிலில் தவெக தலைவர் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் – ஷோபா சந்திரசேகர் நேற்று முன்தினம் சிறப்பு வழிபாடு செய்தனர். அப்போது பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், “வரும் ஞாயிற்றுக்கிழமை தவெக மாநாடு மிகவும் சிறப்பாக நடைபெற வேண்டும், தவெக தலைவர் விஜய்க்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும், அவர் பெரிய நிலைக்கு வரவேண்டும், தமிழ்நாட்டுக்கு ஒரு பொக்கிஷம் கிடைக்க வேண்டும் என்பதற்காக வடசென்னையை சேர்ந்த தவெக நிர்வாகிகள் கொரட்டூர் பாபா கோயிலில் அன்னதானம் செய்துள்ளனர் ” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே காஞ்சிபுரம் அருகில் கூரம் என்ற கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்த்தாய் கோயிலுக்குச் சென்று விஜய் வழிபட உள்ளதாகவும் அங்கிருந்து மாநாடு நடக்கும் விக்ரவாண்டிக்கு அவர் செல்ல இருப்பதாக, த.வெ.க. கட்சி நிர்வாகிகள் தரப்பில் பேசப்படுகிறது.
அதே நேரம், “அந்த பகுதியிலேயே வித்ய வீனித பல்லவ பரமேஸ்வரம் கோயில் என்கிற பழைமையான கோயில் உள்ளது. போருக்குச் செல்லும் முன் இங்கு வந்து சிவனை ராமர் வழிபட்டதாக ஐதீகம் உண்டு. ஆகவே மாநாட்டுக்கு முன்பாக அதிகாலை இங்கு வந்து வழிபட இருக்கிறார் விஜய். அப்படியே அருகில் உள்ள தமிழ்த்தாய் கோயிலுக்கும் செல்ல இருக்கிறார்” என்றும் ஒரு தகவல் உலவுகிறது.
எதையும் ரகசியமாகவே செய்யும் விஜய், நாளை என்ன செய்யப்போகிறார் என்பது நாளைதான் தெரியும்!