மவுனித்து நிற்கும் மொழிப்போர் தியாகிகள் குடும்பங்கள்!: பத்திரிகையாளர் மணா ஆதங்கம்
1960களில் நிகழ்ந்த இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடி, இனவுணர்வுள்ள ஏராளமானோர் தங்களது இன்னுயிரைக் கொடுத்து மொழியைக் காத்தனர் என்பதை இங்கு மீண்டும் நினைவு கூர வைத்துள்ளது தற்போதைய சூழல்.
அப்படி உயிர்த் தியாகம் செய்த மொழிப் போர் மறவர்களின் வீரத்தையும் அவர்களது இன உணர்வையும் வெளிப்படுத்தும் விதமாக, பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மணாவின் கருத்தாக்கத்தில் உருவான ‘உயிருக்கு நேர்’ என்கிற ஆவணப்படம் கடந்த சனிக்கிழமை திரையிடப்பட்டது. அதோடு, ‘உயிருக்கு நேர்’ என்ற ஆவணப் புத்தகமும் வெளியிடப்பட்டது.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ‘படைப்பு’ அரங்கில் தமிழறிஞர்கள் முன்னிலையில் திரையிடப்பட்ட இந்த ஆவணப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
எழுத்தாளரும் கலை விமர்சகர்மான இந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆவணப்படத் திரையிடல் நிகழ்ச்சியில், கவிஞர் ஜின்னா அஸ்மி வரவேற்புரை ஆற்றினார். கவிஞர் நா.வே. அருள் வாழ்த்துரை வழங்க, புதுவை முத்தமிழ் சங்கப் பொறுப்பாளர் சுவாமி நன்றியுரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய தமிழறிஞர்கள் எல்லோரும், இந்த ஆவணப்படத்தை தமிழகம் முழுவதும் கொண்டுசெல்ல வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
நிறைவுரையாற்றிய ஆவணப்பட இயக்குனர் மணா,
“நான், மதுரை தமிழ்ச் சங்கத்தில் படித்தேன். எனதுஇருபதாவது வயதில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டேன். அப்போது கைதான 18 மாணவர்களுள் நானும் ஒருவன்.
எனது வணிகக் குடும்பத்தில் அது அபத்தமாகப் பார்க்கப்பட்டது. அதுவே, இந்த ஆவணப்படத்தை எடுக்க உந்து சக்தியாகவும் இருந்தது.
இந்த ஆவணப்படத்துக்காக, ஆறு மாத காலம், மொழிப்போர் தியாகிகள் வீடுகளுக்கு சென்று பார்த்தேன். தியாகிகளுக்கு இடையேயான ஒற்றுமை… அவர்களில் சாதி மத வேறுபாடுகள் இல்லை.
எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவரும், உயிரை அளித்து இருக்கிறார். விராலிமலை சண்முகம் என்கிற இவர், அந்தப் பகுதி, எம்.ஜி.ஆர். மன்ற படிப்பகத்தின் பொறுப்பாளராக இருந்தார்.
மரணங்கள் தொடர்வதைக் கண்டு வெதும்பிய அண்ணா, இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை நிறுத்துவதாக அறிவிக்க, “போராட்டத்தைத் தொடர வேண்டும்” என வலியுறுத்தி கடிதம் எழுதி வைத்துவிட்டு, விசம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார் சண்முகம்.
அந்தக் கடிதத்தில்தான், “உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு!” என்கிற வாசகத்தை எழுதி வைத்தார். ஒரு எளிய தொண்டனின் உள்ளித்தில் இருந்து விழுந்த உணர்வுபூர்வ வார்த்தைகள் அவை.
அவர் உள்ளிட்ட இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போர் தியாகிகள் குடும்பத்தினர் பலரைச் சந்தித்தேன்.அவர்களுக்கு ஆதங்கங்கள் இருக்கின்றன.
அவற்றை இந்தச் சமயத்தில் பகிர்வது பொருத்தமாக இருக்காது. அது, தற்போதைய சூழலில் மாற்று அணியினருக்கு தீனியாக ஆகிவிட வாய்ப்பு இருக்கின்றது.
ஆனால், இந்த மொழிப்போர் தியாகிகள் எவருக்குமே உரிய அங்கீகாரமோ மதிப்போ அளிக்கப்படவில்லை என்பதைக் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும்.
ஆந்திராவுக்காக உண்ணாவிரதம் இருந்து மறைந்த, பொட்டி ஸ்ரீ ராமுலுவை தெலுங்கு மக்கள் நினைவு வைத்து இருக்கிறார்கள். அவரது பெயரில் ஆந்திராவில் பல்கலை இருக்கின்றது. சென்னை லஸ் நினைவு மண்டபம் உள்ளது. அதை ஆந்திர அரசு பராமரிக்கிறது.
தமிழுக்காக விருதுநகரில் உண்ணாவிரதம் இருந்து மறைந்தார் சங்கரலிங்கனார் உள்ளிட்டோரை, நாம் அப்படி நினைவு கூர்கிறோமா என்கிற கேள்வி எழுப்பு வேண்டி இருக்கிறது.
இந்த மொழிப்போர் தியாகிகளை எந்த இலக்கியத்திலும் நாம் பதிவு செய்யவில்லை. என்பது துயரம்.
இப்போதுதான் அவர்களைப் பற்றிய ஆவணப்படம் உருவாகி இருக்கிறது. இதோடு கூடுதல் தகவல்களுடன், இதே தலைப்பில், புத்தகமாகவும் வெளியாகி இருக்கிறது. பரிதி பதிப்பகத்தின் சார்பில் இளம்பரிதி பதிப்பித்து உள்ளார்.
இவற்றில், இந்தித் திணிப்பில் காங்கிரஸ் பங்கு என்னவாக இருந்தது என்பதை குறிப்பிட்டு இருக்கிறேன்.தற்போது அதே அம்சங்கள் பாஜகவுக்கும் பொருந்தும். இரு தேசிய கட்சிகளும் தமிழ் உணர்வை புரிந்துகொள்ளவே இல்லை
அன்றைய மாணவர்களின் போராட்ட உணர்வுக்கு கொஞ்சமும் குறையாதது, சமீபத்தில் ஜல்லிக்கட்டுக்காக போராடிய தற்போதைய மாணவர்களின் உணர்வு. அந்தப் போராட்டம், ஒன்றிய அரசை கவனிக்க வைத்தது.. நீதிமன்ற பார்வையை திருப்பியது..அந்த இளைஞர்கள் மீது நம்பிக்கை நம்பிக்கை இருக்கிறது.
அந்த போராட்டத்தின் போது, முக்கிய கட்சியைச் சேர்ந்தவர் ரூ.10 லட்சம் கொடுத்து அவர்களது சாப்பாட்டுச் செலவுக்கு அளிக்கச் சொன்னார். அந்த மாணவர்களிடம் கொடுத்தபோது, “யார் கொடுத்தது” என்றார்கள்.
கொடுத்தவர் பெயரைச் சொன்னவுடன், வாங்க மறுத்துவிட்டார்கள்.
அந்த அளவுக்கு மாணவர்கள்உணர்வாளர்கள். சென்னை போலவே, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களிலும் மாணவர்கள் போராட்டங்கள் கட்டுப்பாட்டுடன் நடந்தன.
ஆனால் அவர்களை நாம் எப்படி நடத்தி இருக்கிறோம்?
அவர்கள் மீது வன்முறை ஏவிவிடப்பட்டது…!
அதைச் செய்தவர் யார்? இன்னமும் கரும்புள்ளியாக இருக்கிறது..
அதே நேரம், மாணவர்களின் கனல் அப்படியே இருக்கும். அது எப்போது வேண்டுமானாலும் வெளிப்படும்…
இந்த ஆவணப்படத்தை நான் செலவு செய்து எடுத்து இருந்தாலும்.. இனி ஒளிபரப்பும் உரிமையை அனைவருக்கும் அளிக்கிறேன். தமிழர்களும் தமிழ் அமைப்புகளும் இந்த ஆவணப்படத்தை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்.
இது ஒரு வத்திப்பெட்டி போல…! இந்த உணர்வு.. மக்களிடம் பொறியாக மாறும்.. தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பரவும்…!” என்று உணர்ச்சிப் பெருக்குடன் பேசினார் பத்திரிகையாளர் மணா.
உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு! ஆவணப்படம்:
