“வைகோவுக்கு நன்றி! விஜய்க்கு கோரிக்கை!”: சீனு ராமசாமியின் சமூக அக்கறை அறிக்கை!

“வைகோவுக்கு நன்றி! விஜய்க்கு கோரிக்கை!”:  சீனு ராமசாமியின் சமூக அக்கறை அறிக்கை!

தேசிய விருது திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி, “தமிழகத்தின் நீர்நிலைகளை ஆக்கிரமித்து, நிலத்தடி நீரை அசுர வேகத்தில் உறிஞ்சி வறண்ட பூமியாக மாற்றி வரும் ‘சீமைக் கருவேல மரங்களை’ வேரோடு அகற்றுவதற்கான தீர்ப்புகளும், அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளும் நம் மண்ணின் எதிர்காலத்திற்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளன. இந்த மாபெரும் சூழலியல் பணிக்காகப் பாடுபட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வைகோ அவர்களுக்கு நன்றி:

நீண்ட காலமாக நீதிமன்றங்கள் வாயிலாகத் தொடர்ந்து போராடி, சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கான விழிப்புணர்வையும், வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவுகளையும் பெற்றுத் தந்த  வைகோ அவர்களின் சமூக அக்கறையும், விடாமுயற்சியும் என்றென்றும் போற்றுதலுக்குரியவை. தனது தொண்டர்களுடன் நேரடியாக களம் இறங்கியும், சீமைக் கருவேல மரங்களை வெட்டி வீழ்த்தும் முயற்சியை தொடர்பவர் அய்யா வைகோ அவர்கள்.

மாண்புமிகு நீதி அரசர்களுக்கு நன்றி:

தமிழகத்தின் சூழலியல் பாதுகாப்பில் முக்கிய மைல்கற்களாக அமைந்த தீர்ப்புகளை 2017-ல் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்த நீதிபதிகள் ஏ. செல்வம் மற்றும் பி. கலையரசன் அமர்வு,  2022-ல் அறிவியல் பூர்வமான வழிகாட்டுதல்களை வழங்கிய நீதிபதி பி.என். பிரகாஷ் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட முழு அமர்வு,  தற்போது ‘செழுமை கருவூலம்’ திட்டத்தின் கீழ் புவிசார் குறியீடு (Geo-tagging) மூலம் கண்காணிப்பை உறுதி செய்த நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் டி. பரத சக்ரவர்த்தி அமர்வு ஆகிய நீதி அரசகர்களுக்கு நெஞ்சம் நெகிழ்ந்த நன்றிகள்!

தமிழக அரசுக்குக் கோரிக்கைகள்:

நீதிமன்றத் தீர்ப்புகளை முழு வீச்சில் நடைமுறைப்படுத்த முனைந்துள்ள, முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலமையிலான  தமிழக அரசுக்கு நன்றிகளைத் தெரிவிப்பதோடு, கீழ்க்கண்ட அம்சங்களை உறுதி செய்யக் கேட்டுக்கொள்கிறேன்:

 நவீன இயந்திரங்கள் மூலம் மரங்களை வேர் முடிச்சுகளுடன் முழுமையாகப் பிடுங்கி எறிய வேண்டும்.

 கருவேல மரங்கள் அகற்றப்பட்ட கரைகளில் மண் அரிப்பைத் தடுத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் மூங்கில் மரங்களை உடனடியாக நட வேண்டும்.

அரச மரம், ஆல மரம், நீர் மருது மற்றும் பனை மரங்களை நட்டு, அடுத்த 10 ஆண்டுகளுக்குக் கண்காணிப்புக் குழுக்கள் (Monitoring Committees) மூலம் கருவேல மரங்கள் மீண்டும் வளராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மண்ணைக் காக்க, நீரை மேம்படுத்த நடைபெறும் இந்தப் பசுமைப் புரட்சி முழுமையடைய அனைவரும் துணை நிற்போம்! நீர்வளம் காப்போம்!” என்று  சீனு ராமசாமி தெரிவித்து உள்ளார்.